உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / போதைப் பொருள் விசாரணை, ராணா டகுபட்டி ஆஜர்

போதைப் பொருள் விசாரணை, ராணா டகுபட்டி ஆஜர்

2017ம் ஆண்டு நடைபெற்ற போதைப் பொருள் விவகார வழக்கு தற்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான கால்வின் என்பவரிடம் நடைபெற்ற விசாரணயை அடுத்து 12 தெலுங்கு சினிமா பிரபலங்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கப் பிரிவு உத்தரவிட்டிருந்தது. அந்த வழக்கை போதைப் பொருள் விவகாரத்துடன், பணமோசடி வழக்காகவும் விசாரித்து வருகிறார்கள்.

தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், சார்மி, நடிகர் நந்து ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களது வங்கிக் கணக்கு விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. அதை அவர்கள் விசாரணையின் போது தாக்கல் செய்தனர்.

விசாரணையின் அடுத்த பகுதியாக 'பாகுபலி' நடிகர் ராணா டகுட்டி இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். ராணாவுக்கு அடுத்து தெலுங்கு ஹீரோவான ரவி தேஜா ஆஜராக உள்ளார்.

கால்வினின் மொபைல் போனில் உள்ள சினிமா பிரபலங்களின் எண்கள், அவரது கணக்கிற்கு வந்த பணப்பரிமாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாகச் சொல்கிறார்கள்.

பாலிவுட், டோலிவுட், சான்டல்வுட் ஆகிய இடங்களில் போதைப் பொருள் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நல்லவேளையாக கோலிவுட்டில் இப்படி யாரும் இந்த சர்ச்சையில் சிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !