உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வழக்கு போட்டதை தவிர்த்திருக்க வேண்டுமா 'ஜனநாயகன்'

வழக்கு போட்டதை தவிர்த்திருக்க வேண்டுமா 'ஜனநாயகன்'

எச் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய் நடித்து பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட படம் 'ஜனநாயகன்'. ஆனால், அப்படத்திற்கான தணிக்கை சான்றிதழ் பெறும் விவகாரத்தில் பொறுமை காக்காமல், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தயாரிப்பு நிறுவனம்.

தனி நீதிபதியால், அவசர வழக்காக விசாரிக்கப்பட்டு இரண்டே நாட்களில் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பும் கிடைத்து, அன்றே அதற்கு இடைக்காலத் தடையும் நீதிமன்ற அமர்வு விதித்தது. வழக்கை ஜனவரி 20ம் தேதிக்குத் தள்ளி வைத்தது. அதுவரை பொறுமையாக இல்லாமல், டில்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வு, இவ்வழக்கில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தையே நாடுமாறு அறிவுறுத்தியது.

கொஞ்சம் கூட பொறுமையா இல்லாமல், நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு போட்டதை 'ஜனநாயகன்' தயாரிப்பு நிறுவனம் தவிர்த்திருக்க வேண்டும் என கோலிவுட்டில் தற்போது முன்வைக்கிறார்கள். வழக்கு போடாமல் இருந்திருந்தால் கடந்த வாரமே இப்படத்திற்கு சான்றிதழ் கிடைத்திருக்கக் கூடும். ஹிந்தித் திணிப்பை எதிர்க்கும் படமாக வந்த 'பராசக்தி' குழுவினர் ரிவைசிங் கமிட்டி வரை சென்று, அவர்கள் சொன்ன திருத்தங்களை செய்து கொடுத்து சான்றிதழ் பெற்று படத்தை திட்டமிட்டபடி வெளியிட்டார்கள்.

அது போல 'ஜனநாயகன்' குழுவினரும் செய்திருக்க வேண்டும். தணிக்கை குறித்து வழக்கு போட்டு பரபரப்பு ஏற்படுத்தி, அதை அரசியலாக்கி மீடியாக்களில் பரபரப்பாகப் பேசப்பட வேண்டும் என்ற காரணத்திற்காகக் கூட இப்படி செய்திருப்பார்கள் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.

ஜனவரி 9ம் தேதி வராமல் போனாலும், எப்படியாவது தணிக்கையைப் பெற்று, இந்த பொங்கல் விடுமுறையில் ரசிகர்கள் படத்தைப் பார்க்கும் விதத்தில் வெளியிட்டிருக்க வேண்டும். படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் படத்தைப் பார்க்க வந்திருப்பார்கள்.

யாரோ சிலரது தவறான ஆலோசனையில் இப்படிப்பட்ட ஒரு அருமையான சந்தர்ப்பத்தை 'ஜனநாயகன்' குழு 'மிஸ்' செய்துவிட்டது என்பதுதான் தியேட்டர்காரர்களின் வருத்தமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !