ஹிந்தியில் ரீமேக் ஆகும் '96'
ADDED : 1491 days ago
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடித்து 2018ல் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற படம் '96'. இப்படத்தை ஹிந்தியில் தற்போது ரீமேக் செய்ய உள்ளார்கள்.
இது குறித்து படத்தைத் தயாரிக்க உள்ள அஜய் கபூர் கூறுகையில், “96' திரைப்படம் மனதைத் தொடும், மென்மையான ஒரு காதல் கதை. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு படம். இந்தப் படத்தின் கதை எல்லைகளைத் தாண்டி மொழி வேறு பாடுகளைத் தாண்டிய ஒரு படம். அதனால்தான் தேசிய அளவில் இந்தப் படத்தைக் கொண்டு போய் சேர்க்க வேண்டுமென ஹிந்தியில் ரீமேக் செய்கிறேன். இப்படத்திற்காக இயக்குனருடன் இணைந்து சரியான ஸ்கிரிப்ட்டை ரெடி செய்து வருகிறோம். பொருத்தமான நட்சத்திரத் தேர்வு பற்றியும் பேசி வருகிறோம். அது பற்றி முடிவு செய்ததும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம்,” என்றார்.
“அட்டாக், ரோமியோ அக்பர் வால்டர், பாஸார், பட்டாக்கா, ' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தும் மேலும் சில படங்களை இணைந்தும் தயாரித்தவர் அஜய் கபூர்.
'96' படத்தை ரீமேக் செய்ய உள்ள அஜய் கபூருக்கு டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. “ஒரு நடிகராக பார்வையாளர்களைக் கவரும கதைகளைச் சொல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அதிகமான ரசிகர்களுக்கு அது சொல்லும் போது அது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். '96' படம் எனக்கு ஒரு இனிமையான அனுபவம். இப்போது தயாரிப்பாளர் அஜய் கபூர், இந்தப் பயணத்தை ஹிந்தி ரீமேக்கிற்கு எடுத்துச் செல்கிறார், அவருக்கு எனது வாழ்த்துகள்,” என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தைத் தெலுங்கில் 'ஜானு' என்ற பெயரில் சர்வானந்த், சமந்தா நடிக்க ரீமேக் செய்து கடந்த ஆண்டு வெளியிட்டார்கள். ஆனால், அங்கு படம் தோல்வியடைந்துவிட்டது.