ஆனந்தம் விளையாடும் வீடு படப்பிடிப்பு நிறைவு : விரைவில் ரிலீஸ்
ஆர்யா நடித்த ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி எழுதி, இயக்கும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு. ஶ்ரீ வாரி பிலிம் சார்பில் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் தயாரிக்கிறார். சித்து குமார் இசையமைக்க, பாலபரணி ஒளிப்பதிவு செய்கிறார்.
கவுதம் கார்த்திக், சேரன், ஷ்வாத்மிகா ராஜசேகர், சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, ஜோமல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. படம் பற்றி இயக்குனர் நந்தா பெரியசாமி கூறியதாவது: இது பொதுமுடக்கத்திற்கு முன் துவக்கப்பட்ட படம். 35 நட்சத்திரங்களுக்கு மேல் வைத்து இப்படத்தை ஆரம்பித்தோம், பெரும் தடைகள் பலவற்றை தாண்டி இப்படத்தை முடித்துள்ளோம்.
சேரன், சரவணன், கௌதம் கார்த்திக் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. பொது முடக்க காலத்தில் தயாரிப்பாளர் முழு அர்ப்பணிப்புடன் இப்படத்தை உருவாக்க ஒத்துழைப்பு தந்தார். இப்படம் நன்றாக வர முழு முதல் காரணமும் தயாரிப்பாளர் தான்.
தமிழில் குடும்பங்களுக்கான திரைப்படம் வராத ஏக்கத்தை இப்படம் போக்கும். ஒரு குடும்பத்தில் சில சூழலால் வரும் பிரச்சனைகளை தாண்டி, அண்ணன், தம்பிகள் எப்படி ஒன்று சேர்கிறார்கள், நாயகன் எப்படி அவர்களை ஒன்று சேர்கிறான் என்பது தான் கதை.
பிரபல நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள், ஷிவத்மிகா ராஜசேகர் நாயகியாக அறிமுகமாகிறார். அவருக்கு நன்றாக தமிழ் தெரிந்திருந்தது படப்பிடிப்பில் உதவியாக இருந்தது. நன்றாக நடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் வரும். கௌதம் கார்த்திக் இப்படத்தில், எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து, மிக அர்ப்பணிப்புடன் படத்தை முடித்து கொடுத்தார். படப்பிடிப்பில் எல்லோருமே ஒன்றாக ஒரு குடும்பம் போல் இருந்தோம். படமும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். என்றார்.