உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டாக்டர் டிரைலர் - மீண்டும் ஒரு மனிதக் கடத்தல் கதை

டாக்டர் டிரைலர் - மீண்டும் ஒரு மனிதக் கடத்தல் கதை

சிவகார்த்திகேயன் தயாரித்து நாயகனாக நடிக்க, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு, மிலிந்த் சோமன் மற்றும் பலர் நடிக்கும் படம் டாக்டர். இப்படத்தின் டிரைலர் யு டியூபில் வெளியானது. மீண்டும் ஒரு மனிதக் கடத்தல் மற்றும் உடல் உறுப்பு தொடர்பான கதையாக இந்தப் படம் இருக்கும் என டிரைலரைப் பார்த்ததும் தெரிகிறது.

ஏற்கெனவே இப்படி மனிதக் கடத்தலை மையமாக வைத்து வந்த காக்கிச் சட்டை படத்தில் சிவகார்த்திகேயன்தான் கதாநாயகனாக நடித்திருந்தார். அஜித் நடித்த என்னை அறிந்தால் படமும் அது மாதிரியான கதைதான். நேற்று வெளியான சின்னஞ்சிறு கிளியே படமும் அந்த வகை கதைத்தான். அவற்றிலிருந்து இந்த டாக்டர் படத்தை எந்த அளவிற்கு வித்தியாசப்படுத்திக் காட்டியிருப்பார்கள் என்பது அடுத்த மாதம் அக்டோபர் 9ம் தேதி தெரிந்துவிடும்.

சிவகார்த்திகேயன் ஒரு டாக்டர், வினய் ஒரு வில்லன், இவர்கள் இருவருக்கும் இடையில் தான் பிரச்சினையா, வினய்க்கும் மேல் ஒரு வில்லன் இருக்கிறாரா என்பது சஸ்பென்ஸ். கதாநாயகி பிரியங்கா, இளவரசு, தீபா, அர்ச்சனா உள்ளிட்டோர் அடங்கிய குழு தங்களை ஒரு குடும்பம் என சொல்லிக் கொண்டு சிவகார்த்திகேயனுக்கு உதவியாக சில பல வேலைகளைச் செய்கிறார்கள் போலிருக்கிறது. டிரைலரில் யோகி பாபு சில காட்சிகளில் வந்து போகிறார்.

கடத்தல், ஆக்ஷன், த்ரில்லர் என பரபரப்பான கமர்ஷியல் படமாக இருக்கும் எனத் தெரிகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய முதல் படமான கோலமாவு கோகிலா படமும் போதைப் பொருள் கடத்தலைப் பற்றிய படமாக இருந்தது. அவரது இந்த இரண்டாவது படத்தையும் ஒரு கடத்தல் படமாகவே எடுத்திருக்கிறார் போலிருக்கிறது. மூன்றாவது படமாக இயக்கிக் கொண்டிருக்கும் விஜய் நடிக்கும் பீஸ்ட் படமும் கடத்தல் படம் தானோ?.

டிரைலரில் அனிருத் இசையில் எந்தப் பாடல்களும் இடம் பெறாதது ஆச்சரியம் தான். கதாநாயகி பிரியங்கா வசனம் பேசும் ஒரு காட்சியையாவது டிரைலரில் சேர்த்திருக்கலாம்.

சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படம் கடந்த 2019ம் வருடம் டிசம்பர் மாதம் வெளிவந்தது. ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர் நடிக்கும் ஒரு படம் வெளிவர உள்ளது. ஹீரோவின் ரிசல்ட்டை டாக்டர் மாற்றுவார் என எதிர்பார்ப்போம்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !