உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமா பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்

சினிமா பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்

சென்னை : சினிமா பாடலாசிரியர் பிறைசூடன் சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 65. 400க்கும் மேற்பட்ட படங்களில் 1500க்கும் அதிகமான சினிமா பாடல்களையும், 5000 பக்தி பாடல்களையும் இவர் எழுதி உள்ளார். சிறந்த ஆன்மிகவாதியும், இலக்கியவாதியுமாக திகழ்ந்த இவர் நடிகராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றி உள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் 1956ம் ஆண்டு பிப்ரவரி 06ம் தேதி பிறந்தவர் பிறைசூடன். தனது பள்ளிப் பருவத்திலேயே கவியரங்கம், பட்டி மன்றம் என்று தனது பேச்சு திறமையை இயல்பாகவே வளர்த்துக் கொண்டவர். தனக்குள் உள்ள கவிதை புனையும் திறமையைக் கொண்டு சினிமாவில் நுழைய முற்பட்டு பல போராட்டங்களுக்குப் பின், ஆனந்தி பிலிம்ஸ் சார்பில் இயக்குநர் ஆர்.சி.சக்தி இயக்கத்தில் 1984ல் வெளிவந்த சிறை என்ற படத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் முதன் முதலாக பாடல் எழுதும் வாய்ப்பை பெற்றார். ராசாத்தி ரோசாப்பூவே வெட்கம் வெட்கம் ஏனோ இன்னும் என்ற பாடல் தான் இவர் எழுதிய முதல் பாடல்.


தொடர்ந்து நடந்தால் இரண்டடி, ஆட்டமா தேரோட்டமா, சைலன்ஸ் காதல் செய்யும் நேரமிது.. உட்பட ஏராளமான பாடல்களை இவர் எழுதி உள்ளார். ஏழு சகோதரர்கள், இரண்டு சகோதரிகளை கொண்ட கவிஞர் பிறைசூடனின் சகோதரர்களில் ஒருவர் பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் ஆர்.மதி என்பது குறிப்பிடதக்கது. இவரது மகன் கே.ஆர்.கவின் சிவாவும் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தனது தொழிலில் சற்றும் சமரசம் செய்து கொள்ளாதவர். இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையமைப்பில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு எண்ணற்ற இனிமையான பாடல்களை தந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார். எம்.எஸ்.விஸ்வநாதன் தொடங்கி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, ஆதித்யன் என பல இசையமைப்பாளர்களிடம் பணிபுரிந்துள்ளார்.

குரோதம்-2, மற்றும் தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்து வெளிவந்த படங்களான சத்திரிய தர்மம், சங்கர், ஸ்ரீராம ராஜ்ஜியம் போன்ற படங்களுக்கு வசனகர்த்தாகவும் பணிபுரிந்திருக்கின்றார். சதுரங்க வேட்டை, புகழ் ஆகிய படங்களின் மூலம் தன்னை ஒரு நடிகராகவும் காட்டிக் கொண்டவர் பிறைசூடன்.


விழுதுகள், மங்கை, பல்லாங்குழி, மாயா மச்சீந்திரா, ஆனந்தம், அக்னி பிரவேசம், ரேகா ஐ பி எஸ், அவளுக்கென்று ஓர் மனம் மற்றும் உயிரின் நிறம் ஊதா போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.

பன்முகத் தன்மை வாய்ந்த கவிஞர் பிறைசூடன் ஏறக்குறைய 400 திரைப்படங்களில் 1500க்கும் அதிகமான பாடல்கள் எழுதியிருக்கின்றார். இதுதவிர 5000 பக்திப் பாடல்களும் எழுதியுள்ளார். இவருக்கு மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் செயலாளராகவும் இருந்தவர் பிறைசூடன் என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்தில் ஆஸ்கர் விருதுக்கு இந்திய படங்களை பரிந்துரைக்கும் குழுவில் இடம் பெற்றிருந்தார். தமிழ் திரைப்பட பாடலாசிரியராகவும் கவிஞராகவும் தமிழ் மொழி அறிஞராகவும் பல முக்கியமான பங்களிப்புகளை தமிழ் சமூகத்துக்கு இவர் வழங்கியுள்ளார். தமிழக அரசின் கபிலர் விருது உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். இவரது மறைவிற்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வெள்ளியன்று மாலை 3மணியளவில் இவரது இறுதிச்சடங்கு நடக்கிறது.

பிறைசூடன் எழுதிய திரையிசைப் பாடல்களும் படங்களும்

1.ராசாத்தி ரோசாப்பூவே - சிறை
2.உயிரே உயிரின் உயிரே - என் பொம்முகுட்டி அம்மாவுக்கு
3.சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி - என்னெப் பெத்த ராசா
4.மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா - ராஜாதி ராஜா
5.வேறு வேலை உனக்கு இல்லையே - மாப்பிள்ளை
6.புல்லைக் கூட பாடவைத்த புல்லாங்குழல் - என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்
7.தென்றல்தான் திங்கள்தான் - கேளடி கண்மணி
8.தானந்தன கும்மி கொட்டி - அதிசயப்பிறவி
9.எத்தனை பேர் உன்னை நம்பி - சிறையில் பூத்த சின்ன மலர்
10.சும்மா நீ - பெரிய வீட்டு பண்ணக்காரன்
11.நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் - பணக்காரன்
12.சைலன்ஸ் சைலன்ஸ் - பணக்காரன்
13.காதலுக்கு ராஜா - ராஜா கைய வச்சா
14.கலகலக்கும் மணியோசை - ஈரமான ரோஜாவே
15.சோலப் பசுங்கிளியே - என் ராசாவின் மனசிலே
16.ஆட்டமா தேரோட்டமா - கேப்டன் பிரபாகரன்
17.இதயமே இதயமே - இதயம்
18.கேளடி என் பாவையே - கோபுர வாசலிலே
19.என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட - உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்
20.மஞ்சள் வெயில் நேரமே - என்றும் அன்புடன்
21.வெத்தல போட்ட ஷோக்குல - அமரன்
22.வசந்தமே அருகில் வா - அமரன்
23.ட்ரிங் ட்ரிங் டிங்கி டிங்காலே - அமரன்
24.மணிக்குயில் இசைக்குதடி - தங்கமனசுக்காரன்
25.நடந்தால் இரண்டடி - செம்பருத்தி
26.தாய் அறியாத - அரங்கேற்ற வேலை
27.வாங்க வாங்க மாப்பிள்ளையே - நாடோடி பாட்டுக்காரன்
28.மோனாலிஸா மோனாலிஸா - தாயகம்
29.என் கண்ணில் வாழும் கண்ணான கண்ணே - தாயகம்
30.ரசிகா ரசிகா - ஸ்டார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !