உள்ளூர் செய்திகள்

ஜிப்ஸி

நடிப்பு - ஜீவா, நடாஷா சிங், சன்னி வெய்ன், லால் ஜோஸ்
தயாரிப்பு - ஒலிம்பியா மூவிஸ்
இயக்கம் - ராஜு முருகன்
இசை - சந்தோஷ் நாராயணன்
வெளியான தேதி - 6 மார்ச் 2020
நேரம் - 2 மணி நேரம் 25 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

தமிழ் சினிமாவில் தற்போது கருத்துச் சுதந்திரம் என்ற பெயரால் சில அபத்தங்களை, அமெச்சூர்த்தனமாகப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அப்படிப்பட்டப் படங்களை சில நம்பிக்கைக்குரிய இயக்குனர்கள் கொடுக்கும் போதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. தான் இயக்குனராக அறிமுகமான முதல் படமான குக்கூ படத்தில் ஓரளவிற்குப் பெயரையும், இரண்டாவது படமான ஜோக்கர் படத்தில் அழுத்தனமான ஒரு பெயரையும் பெற்றவர் ராஜு முருகன்.

அவரது இயக்கத்தில் ஜிப்ஸி படம் உருவாகி வருகிறது, அதன்பின் அது சென்சார் பிரச்சினையில் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்று கேட்ட பிறகு, சரி, தரமான ஒரு படத்தைக் கொடுக்கத் திட்டமிட்டு சிக்கலில் சிக்கிவிட்டார் போலும் என்று நினைக்கத் தோன்றியது. ஆனால், படத்தைப் பார்த்த பிறகு நாம் நினைத்தது எவ்வளவு தவறு என்று உணர்ந்த பின் நம்மை நாமே வருத்தப்பட வேண்டியதாகிவிட்டது.

இயக்குனர் ராஜு முருகனும், கடந்த வருடம் வெளிவந்த மெஹந்தி சர்க்கஸ் படத்தை இயக்கிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரனும் ஒரே நேரத்தில் கதை விவாதம் செய்திருப்பார்கள் போலிருக்கிறது. தம்பி ஜிப்ஸி ஆகவும், அண்ணன் மெஹந்தி சர்க்கஸ் ஆகவும் படத்தை எடுத்திருக்கிறார்கள். இரண்டு படத்தையும் சேர்த்து ஜிப்ஸி மெஹந்தி சர்க்கஸ் என்று ஒரே படமாக எடுத்து இரண்டு தயாரிப்பாளர்களின் செலவை மிச்சப்படுத்தியிருக்கலாம்.

மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நாயகி ஊர் ஊராகச் சுற்றி சர்க்கஸ் போடுபவர். நாயகன் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர். இவர்கள் இருவரும் காதலித்துப் பிரிந்து, பின் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதுன் அந்தப் படத்தின் கதை.

ஜிப்ஸி படத்தின் நாயகன் ஊர் ஊராகச் சுற்றி தன் குதிரையை வைத்து சாகசம் செய்து சம்பாதிப்பவர். படத்தின் நாயகி முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு பிரிகிறார்கள். இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

ஜிப்ஸி படத்தின் கதையை 25 வருடங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பம்பாய் படத்தின் கதைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

ராஜு முருகனிடமிருந்து இப்படி ஒரு கதையா, முழுமையில்லாத படமா என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது. இரண்டரை மணி நேரப் படத்தில் என்ன சொல்வது என்று தடுமாறி இருக்கிறார். காதலுக்கு முக்கியத்துவம் தரலாமா, அல்லது மதச் சண்டைகளுக்கு முக்கியத்துவம் தரலாமா என குழம்பிப் போயிருக்கிறார்.

படத்தின் ஒரே ஆறுதலான விஷயம், நாயகியின் அழகும், அவருடைய சிரிப்பும், நடிப்பும் தான். அறிமுகப் படத்திலேயே நாயகி நடாஷா சிங், நடிப்புஷா சிங் ஆக மாறிவிட்டார்.

ஜிப்ஸி கதாபாத்திரத்தில் ஜீவா. கதாபாத்திரத்திற்கேற்ப தோற்றத்திலும், நடிப்பிலும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் ஏதோ செய்யப் போகிறது என்று பார்த்தால் எல்லாவற்றையும் அப்படியே கடந்து போவதாகவே காட்டி முடித்திருக்கிறார்கள்.

ஜீவாவின் வாழ்வுக்குக் காரணமாக இருக்கும் குதிரைக்கு சே எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். பின்னர் இரண்டாவது பாதியில் கேரளாவில் கம்யூனிஸ்ட் பின்னணி என தனது எண்ணங்களைப் பதிவிட முயற்சித்து தோற்றுப் போகிறார் இயக்குனர் ராஜு முருகன்.

படத்தின் சிறப்பான அம்சம் செல்வகுமார் ஒளிப்பதிவு. படம் இந்தியா முழுவதும் பயணிக்கிறது. அந்த இடங்களின் பதிவை அப்படியே பதிவிட்டிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் வந்த பாடல்களும், பின்னணி இசையும் ஏற்கெனவே பல படங்களில் கேட்ட ஞாபகம். குறிப்பாக கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தின் ஹிட் பாடலான என்ன செய்யப் போகிறார் டியூன் பின்னணி இசையாக ஆங்காங்கே ஒலிக்கிறது.

படத்தில் ஒன்று காதலை மட்டும் கொடுத்திருக்க வேண்டும், இல்லை சமூக சிந்தனையுடன் சில கருத்துக்களைச் சொல்லியிருக்க வேண்டும். இரண்டையும் போட்டு குழப்பியது தான் நாயகனைப் போலவே படம் பார்க்கும் நம்மையும் சுற்றோ சுற்றென்று சுற்ற வைக்கிறது.

ஜிப்ஸி - சீப்ஸி...



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !