காப்பான்
நடிப்பு - சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா
தயாரிப்பு - லைகா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - கே.வி.ஆனந்த்
இசை - ஹாரிஸ் ஜெயராஜ்
வெளியான தேதி - 20 செப்டம்பர் 2019
நேரம் - 2 மணி நேரம் 45 நிமிடம்
ரேட்டிங் - 3/5
ஒரு கமர்ஷியல் படத்துக்குரிய அத்தனை அம்சங்களும் அடங்கிய படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கே.வி. ஆனந்த்.
பிரதமர், அரசியல், நாட்டுப்பற்று, பாதுகாப்பு, காஷ்மீர், பாகிஸ்தான், சதி, சூழ்ச்சி, காதல், பாசம், விவசாயம், போராட்டம், கார்ப்பரேட்... இவ்வளவு விஷயங்களையும் ஒரே படத்துக்குள் எந்த சிக்கலும் இல்லாமல் சரியான விதத்தில் சேர்த்து படம் கொஞ்சம் நீளமாக இருந்தாலும் சுவாரசியமாக பரபரப்பாகக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
மிலிட்டரி இன்டலிஜன்ஸ் பிரிவிலிருந்து பிரதமர் மோகன்லாலின் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் சூர்யா. நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர் மோகன்லால். ஒரு உயிர் போனாலும் 100 உயிர் காப்பாற்றப்ட்டால் தவறில்லை என்று நினைப்பவர். அப்படிப்பட்டவர் தீவிரவாதிகளால் கொல்லப்படுகிறார். அதன்பின் அவருடைய மகன் ஆர்யா, அரசியல் சூழ்நிலை காரணமாக பதவியேற்கிறார். அவரையும் கொல்லத் துடிக்கிறார்கள். அவரையும் கொல்லத் துடிப்பது யார், மோகன்லாலைக் கொன்றது யார் என ஆர்யாவின் தனிப்பட்ட பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படும் சூர்யா எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் ஆரம்பத்திலேயே இது வேறு ஒரு மாதிரியான படம் என்பதை இயக்குனர் கே.வி.ஆனந்த் புரிய வைத்து விடுகிறார். விவசாயத்திலிருந்து ஆரம்பமாகி, நாட்டின் பாதுகாப்பு, பிரதமர் என கதை நகர்ந்து, கார்ப்பரேட் முதலாளியின் சூழ்ச்சியால் அரசியல் கொலையாக மாறி, வாரிசு அரசியலுக்கு நகர்ந்து, விவசாயம், காவிரி டெல்டா பிரச்சினையில் வந்து படம் முடிவடைகிறது.
எந்த சந்தர்ப்பங்களில் எந்தக் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டுமோ அதைச் சரியாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். முந்தைய அரசு செய்த தவறுகள் என சிலவற்றை வெளிப்படையாகவே விமர்சிக்கிறார்கள். விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்பதையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள்.
கடந்த சில படங்களாக கதாபாத்திரத்தில் கொஞ்சம் கூடுதலாகவே நடித்த சூர்யா, இந்தப் படத்தில் அந்தக் கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை மட்டுமே வழங்கியிருக்கிறார். அவரைக் கதிர் கதாபாத்திரத்திற்குள் அடக்கி சரியான நடிப்பை வாங்கியிருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். பாதுகாப்பு அதிகாரி என்றால் அந்த கம்பீரம், எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய உணர்வு, கழுகுப் பார்வை என சூர்யாவின் நடிப்பில் அத்தனை பொருத்தம். கதிர் என்ற கதாபாத்திரப் பெயரில் கூட விவசாயக் குறியீடு இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். இயற்கை விவசாயியாகவும் விவசாயத்துக்கு ஆதரவாக குரல் உயர்த்துகிறது கதிர் கதாபாத்திரம்.
பிரதமராக மோகன்லால். அவர் பேசும் மலையாளம் கலந்த தமிழ் கூட பிரதமர் கதாபாத்திரம் என்பதால் பொருத்தமாக அமைந்துவிடுகிறது. பாகிஸ்தான் தூதரை அழைத்து அவருக்குக் கடுமையான கண்டனம் தெரிவிக்கும் காட்சிகளில் தியேட்டரில் கைத்தட்டலைப் பெறுகிறார். கார்ப்பரேட் முதலாளியிடம் பக்கத்து நாட்டு மக்களுக்காகவும் மனிதாபிமானத்துடன் பேசும் போதும் மனிதனாக உயர்ந்து நிற்கிறார். குறைவான நேரம் வந்தாலும் தன் கதாபாத்திரத்தில் மனதில் பதிய வைத்துவிடுகிறார் மோகன்லால்.
பிரதமர் மோகன்லாலின் மகனாக ஆர்யா. இவரது கதாபாத்திரம் மட்டும் நோட்டா விஜய் தேவரகொண்டாவை ஞாபகப்படுத்துகிறது. இருப்பினும் இடைவேளைக்குப் பின் ஆர்யாவும் படத்தில் ஸ்கோர் செய்கிறார். அதிலும் கார்ப்பரேட் முதலாளியை வரவழைத்து அவருடன் நேருக்கு நேராக சவால் விடும் காட்சியில் அடடே சொல்ல வைக்கிறார் ஆர்யா.
பிரதமரின் செக்ரெட்டரியாக சாயிஷா. சூர்யாவுக்கு படத்தில் ஒரு காதலி வைக்க வேண்டும் என்பதற்காக அவருக்குப் பொருத்தமான ஒரு கதாபாத்திரத்தில் சேர்த்திருக்கிறார்கள். கிடைக்கும் நேரத்தில் இருவரும் காதலிக்கிறார்கள். காதலுக்காக டூயட்டையெல்லாம் சேர்க்காமல் கடைசியில் சேர்த்தது சிறப்பு. சூர்யா, சாயிஷா இடையிலான முதல் சந்திப்பில் அந்த ஹோட்டல் ரூம் காட்சி இரட்டை அர்த்த காட்சியாக நகர்கிறது.
அதைத் தொடர்ந்து வரும் காட்சியில் சமுத்திரக்கனியையும் இரட்டை அர்த்த வசனம் ஒன்றைப் பேச வைத்து அதிர்ச்சியளிக்கிறார்கள். பிரதமரின் பாதுகாப்பு குழுவின் தலைமை அதிகாரியாக சமுத்திரக்கனி. அவருக்கும் மனைவி பூர்ணாவுக்கும் இடையில் ஒரு அன்பான காட்சியைக் காட்டும் போதே கிளைமாக்சில் அவருக்கான முடிவு இப்படித்தான் வருமோ என யூகிக்க முடிகிறது.
கார்ப்பரேட் முதலாளியாக பொம்மன் இரானி. அமைதியாகப் பேசி நாடே தன் கையில் உள்ளது என மிரட்டல் விடுக்கிறார். அவருக்கு நிழல்கள் ரவியின் பின்னணிக் குரல் பொருத்தம். இவர் சொல்வதைச் செய்யும் அமைச்சராக நாகிநீடு. பொம்மனின் திட்டங்களுக்காக அசாசின் வேலைகளைச் செய்பவராக சிராக் ஜானி.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அவரது வழக்கமான டியூன்களில் ஏற்கெனவே கேட்ட பாடல்கள் தான். பின்னணி இசையில் ஈடுபாட்டுடன் உழைத்திருக்கிறார். ஒளிப்பதிவு, ஸ்டன்ட் காட்சிகள் படத்திற்கு பக்கபலம். அவர்களுக்கு படத்தில் நிறையவே வேலை. டெக்னிக்கலாக படம் உயர்ந்து நிற்கிறது.
கமர்ஷியல் படம் என முடிவு செய்துவிட்டதால் பல காட்சிகளில் லாஜிக் பார்க்காமல் விட்டிருக்கிறார்கள். பிரதமர் செல்லும் இடங்களில் எல்லாம் அத்தனை பாதுகாப்புகளையும் மீறி பாம் செட் செய்வது, அவர்களுக்கு உதவி செய்வதற்காகவே பிரதமர் அலுவலகத்திலும் ஆட்களை வைத்திருப்பது என வழக்கமான சினிமாத்தனமான காட்சிகள் அடிக்கடி வந்து போகின்றன.
பிரதமர் அலுவலகத்தில் சர்வசாதாரணமாக அனைத்து ஒட்டு கேட்கும் கருவிகளையும் வைப்பதெல்லாம் ரொம்ப டூ மச்.
தமிழ்நாட்டில் தற்போது சூடாக இருக்கும் காவிரி பிரச்சினை, ஸ்டெர்லைட் பிரச்சினை ஆகியவற்றை படத்தில் நுழைத்திருக்கிறார்கள். விவசாயமும், விவசாயிகளும்தான் நாட்டின் முதுகெலும்பு என்ற கருத்தைச் சொன்னதற்காக இந்தக் காப்பானைப் பாராட்டலாம்.
காப்பான் - மண்ணைக் காப்பவன்