உள்ளூர் செய்திகள்

ஹர்காரா

தயாரிப்பு - கலர்புல் பீட்டா மூவ்மென்ட், பராடிம் பிக்சர்ஸ், தீனா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ராம் அருண் காஸ்ட்ரோ
இசை - ராம்சங்கர்
நடிப்பு - ராம் அருண் காஸ்ட்ரோ, காளி வெங்கட் மற்றும் பலர்
வெளியான தேதி - 25 ஆகஸ்ட் 2023
நேரம் - 2 மணி நேரம் 5 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

மக்களுக்குக் கடிதங்களையும், அரசு அலுவலகங்களுக்கும், தனியார் அலுவலகங்களுக்கும் அலுவர் ஆவணங்களையும் எடுத்துச் செல்லும் ஒரு தபால்காரரைப் பற்றிய படம். அதோடு ஒரு வரலாற்றுக் கதையையும் இணைத்து கொடுத்திருக்கிறார்கள்.

ராம் அருண் காஸ்ட்ரோ படத்தை இயக்கி இரண்டு கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்திருக்கிறார். ஒரு படத்தைப் பார்க்கும் உணர்வைக் கொடுப்பதை விட ஒரு டாகுமென்டரியைப் பார்க்கிறோம் என்ற உணர்வே மேலோங்கி நிற்கிறது.

தேனி மாவட்டத்தின் மலைக் கிராமம் ஒன்றில் தபால்காரர் ஆக புதிதாக வேலைக்குச் சேர்கிறார் காளி வெங்கட். எந்த வசதியும் இல்லாத அந்தக் கிராமத்தை விட்டு பணி மாறுதல் பெற வேண்டும் என நினைக்கிறார். அதனால், அந்தக் கிராமத்திற்கு தபால் அலுவலகமே தேவையில்லை என அந்த ஊர் மக்களை ஏமாற்றி கையெழுத்து வாங்கி அரசுக்கு மனு அனுப்ப முயற்சிக்கிறார். அவர் நினைத்தது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அந்தக் கதாபாத்திரத்தில் தனது யதார்த்த நடிப்பின் மூலம் முத்திரை பதிக்கும் நடிகர்களில் ஒருவர் காளி வெங்கட். இந்தப் படத்திலும் அப்படி ஒரு தனி முத்திரை பதித்திருக்கிறார். அந்த மலை கிராமத்தை விட்டு எப்படியாவது வெளியேறி விட வேண்டும் என துடியாய் துடிக்கிறார். ஆனாலும், கடைசியில் பாசத்துக்கு அடிமையாகி அவர் எடுக்கும் முடிவு உணர்வுபூர்வமான ஒன்று.

காளி வெங்கட் கதையுடனே படத்தில் 150 வருடங்களுக்கு முன்பு நடந்த கதையாக மாதேஸ்வரன் கதையைச் சொல்கிறார்கள். வெள்ளைக்காரர்கள் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்காக அந்த மலைகளில் தபால்களை எடுத்துச் சென்றவர்தான் மாதேஸ்வரன். அக்கதாபாத்திரத்தில் படத்தின் இயக்குனர் ராம் அருண் காஸ்ட்ரோ நடித்திருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும், அவற்றில் நடித்துள்ள நடிகர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் பாராட்டும்படி நடித்திருக்கிறார்கள்.

படத்தில் குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று பிலிப் ஆர் சுந்தர் மற்றும் லோகேஷ் இளங்கோவன் ஆகியோரது ஒளிப்பதிவு. பருந்துப் பார்வையில் மலைகளையும் மலை கிராமங்களையும் அவர்கள் இருவரும் பதிவு செய்திருக்கும் விதம் சிறப்பு.

இன்றைய தலைமுறையினருக்கு தபால்கள் பற்றிய அருமையும், பெருமையும் அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மொபைல் போன்கள், வாட்சப் காலத்தில் தபால்கள் பயன்பாடும் குறைந்தே போய்விட்டது. அத்தலைமுறையினருக்கு தபால்காரர், தபால்கள் பற்றிய புரிதலை இந்தப் படம் கொடுக்கிறது.

ஆனால், சுவாரசியமில்லாத, எந்த ஒரு திருப்பமும் இல்லாத திரைக்கதை, படம் முழுவதும் உள்ள டாகுமென்டரித்தனம் படத்தின் ரசனையைக் குறைத்துவிடுகிறது. சினிமாத்தனமாகக் கொடுத்திருந்தால் சுவாரசியமாகவும், ரசனையாகவும் இருந்திருக்கும்.

ஹர்காரா - காரம் இல்லாமல்…



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !