தக் லைப்
தயாரிப்பு : ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ்
இயக்கம் : மணிரத்னம்
நடிகர்கள் : கமல்ஹாசன், சிலம்பரசன் டி ஆர், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, மகேஷ் மஞ்சுரேக்கர்,அசோக் செல்வன், நாசர், பகவதி பெருமாள், ஜோஜு ஜார்ஜ், வடிவுக்கரசி, வையாபுரி, சின்னி ஜெயந்த்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
வெளியான தேதி : 05.06.2025
நேரம் : 2 மணி நேரம் 45 நிமிடம்
ரேட்டிங் : 2.75/5
கதைக்களம்
ரெங்கராய சக்திவேல் என்னும் பெயரில் கமல் ஹாசன் டில்லியில் பெரிய டானாக வலம் வருகிறார். அவருக்கு துணையாக அவருடைய அண்ணன் நாசர், ஜோஜூ ஜார்ஜ், பகவதி பெருமாள் ஆகியோர் இருக்கின்றனர். அவர்களை என்கவுன்ட்டர் செய்ய, அவர்களின் எதிர் கோஷ்டியாக இருக்கும் மகேஷ் மஞ்ச்ரேக்கர் மூலம் போலீஸ் திட்டம் போடுகிறது.
அப்போது நடக்கும் சண்டையில் அங்கு பேப்பர் போட்டுக் கொண்டிருந்த குமரவேலை, கமல் தரப்பினர் சுட்டு விடுகின்றனர். அப்பா உடலைப் பார்த்து கதறி அழுத சிம்புவை, கமல் தன்னுடன் அழைத்து சென்று மகன் போல் வளர்க்கிறார். இந்த சூழ்நிலையில் சில ஆண்டுகள் கழித்து, கமல் மிகப்பெரிய அளவில் வளர்ந்து விடுகிறார். அவருடன் சிம்புவும் சேர்ந்து பல சம்பவங்களை செய்கின்றனர்.
இவர்களின் சாம்ராஜ்யத்தை சரிக்க மகேஷ் மஞ்சுரேக்கர் திட்டம் போட்டு வருகிறார். மற்றொருபுறம் எப்போதும் இரண்டாம் இடத்தில் இருக்கும் தான் முதலிடத்திற்கு வர வேண்டுமென நாசர் ஒரு சதி வேளையில் இறங்குகிறார். அதற்கு சிம்புவை பகடை காயாக மாற்றி கமலுக்கு எதிராக நிற்க வைக்கிறார். அதனைத் தொடர்ந்து நடந்தது என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
80களில் நாயகன் எனும் மாஸ் கேங்க்ஸ்டர் படத்தை கொடுத்த மணிரத்னம், தக் லைப் மூலம் மீண்டும் மாஸ் காட்டி இருக்கிறார். அதே கேங்க்ஸ்டர் கதை என்றாலும், கதைக்களத்தையும், கதாபாத்திரங்களையும் சற்று மாற்றி வித்தியாசம் காட்ட நினைத்துள்ளார். இருப்பினும் பல காட்சிகள் நாயகனை நினைவுபடுத்துகின்றன. முதல் பாதியை விறுவிறுப்பாக தனது திரைக்கதை மூலம் எடுத்துச் சென்ற இயக்குனர், இரண்டாம் பாதியில் கமல் Vs சிம்பு என வந்த பிறகு தடுமாறுகிறார்.
இரண்டாம் பாதி பல இடங்களில் லேக் ஆகி இருக்கிறது. இவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளத்தை படத்தில் வைத்துக் கொண்டு யாரையும் திணித்ததாக தெரியாத அளவுக்கு அனைவருக்கும் படத்தில் ஸ்பேஸ் கொடுத்திருக்கிறார் மணிரத்னம்.
மிகப்பெரிய தாதாவாக அந்த கேரக்டரில் பர்பெக்டாக பிட் ஆகியிருக்கிறார் கமல். முதல் காட்சியிலேயே என் பெயர் ரெங்கராய சக்திவேல் என மிரட்டலாக அவர் சொல்லும் வசனம் தொடங்கி படம் முழுவதும் சக்திவேலாகவே தெரிகிறார். வயது தெரியாத அளவுக்கு தனது தோற்றத்தின் மூலம் கவர்கிறார். இந்த வயதிலும் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டி நடித்துள்ளார். அதோடு மனைவி அபிராமியுடன் லிப் லாக் சீனிலும், த்ரிஷாவுடன் நெருக்கமாக இருக்கும் சீன்களிலும் எவர்கிரீன் கமலாக தெரிகிறார்.
கமலுக்கு அடுத்தபடியாக சிம்பு படம் முழுவதும் தக் தனம் செய்து மாஸ் காட்டி நடித்து இருக்கிறார். வில்லன்களுடன் மோதும் காட்சிகளில் ஆக்ஷன் ஹீரோவாகவும், கமல், அபிராமி உடன் இருக்கும் போது சென்டிமெண்ட் ஹீரோவாகவும் கலக்கி இருக்கிறார்.
த்ரிஷாவுக்கு வித்தியாசமான கேரக்டர். கமல், சிம்பு இருவருடனும் நடிக்கும் போது வேறுபாடு காட்டி ஸ்கோர் செய்துள்ளார். கமலின் மனைவியாக வரும் அபிராமி ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால் மனதில் பதிகிறார்.
கமல் அண்ணனாக வரும் நாசர், ஜோஜு ஜார்ஜ், பகவதி பெருமாள் மற்றும் அர்ஜுன் ஆகியோர் ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பி உள்ளனர். மற்றொரு வில்லனாக நடித்துள்ள பாலிவுட் நடிகர் மகேஷ் மஞ்சுரேக்கர் தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் அசோக் செல்வனுக்கு காட்சிகள் குறைவு என்றாலும் நிறைவாக நடித்துள்ளார். அவரின் மனைவியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமிக்கும் நல்ல கேரக்டர். இவரின் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் சூப்பர். இவர்களோடு சின்னி ஜெயந்த், வையாபுரி, வடிவுக்கரசி ஆகியோர் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சுகர் பேபி, ஜிங்குச்சா ஜிங்குச்சா பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. அஞ்சு வண்ண பூவே பாடல் மனதை வருடுகிறது. சமூக வலைதளங்களில் பெரிய ஹிட்டான முத்த மழை பாடல் படத்தில் இடம் பெறாதது ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கிறது.
டில்லி, நேபாளம், கோவா, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களை கேமராமேன் ரவி.கே.சந்திரன் அழகாக பதிவு செய்துள்ளார். சண்டைக் காட்சிகளை மிரட்டலாக ஒளிப்பதிவு செய்திருப்பது சிறப்பு.
பிளஸ் & மைனஸ்
ஆக்ஷன் ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் மாஸ் படத்தை கொடுத்திருக்கிறது மணிரத்னம் - கமல் கூட்டணி. கமலோடு சிம்புவும் சேர்ந்து கலக்கியுள்ளார். படத்தின் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பை இரண்டாம் பாதியில் கோட்டை விட்டுள்ளார் மணிரத்னம். இன்டர்வல் பிளாக்கிற்கு பிறகு படம் தொய்வடைய தொடங்கி விடுகிறது. அதன்பிறகு கமல் மற்றும் சிம்புவுக்கு சுவாரசியமான காட்சிகளை வைத்திருந்தால் இன்னும் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். படத்தில் நிறைய கேரக்டர்களுக்கு வசனம் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை. கூட்டத்தில் ஒருவராக வந்து நிற்கின்றனர். உதாரணமாக சேத்தன் கேரக்டரை சொல்லலாம். இந்த தக் லைப்பிற்கு படக்குழு கொடுத்த பில்ட் அப் திரையில் இல்லாமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றமே!
தக் லைப் - ரொம்ப ஹைப்