உள்ளூர் செய்திகள்

மையல்

தயாரிப்பு : ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி
இயக்கம் : ஏ.பி.ஜி. ஏழுமலை
நடிகர்கள் : மைனா சேது, சம்ரிதி தாரா, பி.எல்.தேனப்பன், சூப்பர் குட் சுப்பிரமணி, ரத்தின கலா, ஆர் பி. பாலா
வெளியான தேதி : 23.05.2025
நேரம் : 2 மணி நேரம் 12 நிமிடம்
ரேட்டிங் : 2.5/5

கதைக்களம்
இரவு நேரத்தில் ஆடு திருடி விற்று பிழைப்பை நடத்தும் சேது ஒரு கிராமத்தில் ஆட்டை திருடும் போது கிராம மக்கள் துரத்துகின்றனர். அவர்களுக்கு பயந்து ஒரு கிணற்றுக்குள் குதித்து விடுகிறார். அன்று இரவு அதே ஊரில் உள்ள பி.எல்.தேனப்பன் சொத்துக்கு ஆசைப்பட்டு வாரிசு இல்லாத தன் சொந்த சித்தப்பாவை அடியாட்களை வைத்து கொலை செய்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த கொலை வழக்கு மற்றும் ஆடு திருடு போன வழக்கு இரண்டையும் இன்ஸ்பெக்டர் ஆர்.பி.பாலா விசாரிக்கிறார்.

இந்நிலையில் கிராம மக்களால் ஒதுக்கப்பட்டு காட்டில் வாழும் மந்திர கிழவி ரத்தின கலாவின் பேத்தி சம்ரிதி தாரா, கிணற்றில் இருந்த சேதுவை காப்பாற்றி தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார். அதோடு சேதுவை கண்டதும் சம்ரிதி தாரா காதல் கொள்ள இருவரின் காதலுக்கு அவரது பாட்டி எதிர்ப்பு தெரிவிக்கிறார். அந்த ஊரில் பிரச்சனை குறைந்ததும் சேதுவை அவரது சொந்த ஊருக்கு அவரது பாட்டி வழியனுப்பி வைக்கிறார். இதனால் சம்ரிதி தாரா, சேதுவை பிரிந்த ஏக்கத்தில் தவிக்கிறார். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ஆர்பி பாலாவுக்கு லட்ச கணக்கில் பணம் கொடுத்து அந்த கொலையை செய்த தன் அடியாட்களில் ஒருவரை என்கவுண்டர் செய்ய சொல்கிறார் தேனப்பன்.

இந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்த சேதுவை போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கின்றனர். பின்னர் விசாரணை முடிந்து வெளியில் வரும் சேது திருமணத்துக்கு பிறகும் போலீஸ் தொந்தரவு இருக்கக் கூடாது என்பதற்காக திருந்தி வாழ நினைத்து, அங்கிருந்த தன் வீட்டை விற்றுவிட்டு தன் ஆசை காதலியை திருமணம் செய்து கொள்வதற்காக தாலி புடவையுடன் இந்த கிராமத்துக்கு வருகிறார். அந்த நேரத்தில் அங்கு ஒருவரை என்கவுண்டர் செய்த போலீசார் மற்றொருவரை தேடி வருகின்றனர். இதனால் சந்தேகத்தின் பேரில் கொலையாளியாக சேது கைதாகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? போலீஸிலிருந்து சேது விடுதலையாளரா? சேது- சம்ரிதி தாரா திருமணம் நடந்ததா? என்பதே படத்தின் மீதி கதை.

வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு சிறிய திருட்டை செய்பவர்கள் எப்படி போலீசாரால் கொலை குற்றவாளியாக மாற்றப்படுகிறார் என்கிற மையக்கருவை அடிப்படையாக வைத்து அதில் காதலையும் எமோஷனையும் கலந்து எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி கொடுத்திருக்கிறார் . ஜெயமோகனின் கதையை தனது பாணியில் இயக்கி இருக்கிறார் ஏபிஜி. ஏழுமலை. ஒரு கிராமத்து பின்னணியில் நடக்கும் ஒரு கொலை மற்றும் ஒரு திருட்டு சம்பவத்தை தண்டவாளத்தில் இரண்டு ட்ராக்குகளை போல் நகர்த்திச் சென்று இறுதியில் மையலாக (புயலாக) கதையை மாற்றி இருக்கிறார் இயக்குனர்.

கதையின் நாயகனாக நடித்துள்ள சேது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மைனா படத்தில் போலீஸ் ஆக மிரட்டலான நடிப்பை கொடுத்த சேது, இதில் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். நாயகியாக நடித்துள்ள சம்ரிதி தாரா அழகிலும் நடிப்பிலும் கவனம் பெறுகிறார். வில்லனாக நடித்துள்ள பி.எல்.தேனப்பன் வழக்கமான நடிப்பை கொடுத்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக வரும் ஆர் பி பாலா, போலீஸ் ஏட்டாக வரும் சூப்பர் குட் சுப்பிரமணி, மந்திர கிழவியாக வரும் ரத்ன கலா ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

90களில் தமிழ் சினிமாவை கலக்கிய இசை அமைப்பாளர் சவுந்தர்யனின் மகன் அமர் கீத் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். தந்தை 8 அடி என்றால், மகன் 16 அடி பாய்ந்து மெலோடியான இசையை தந்துள்ளார். பால பழனியப்பனின் ஒளிப்பதிவில் கிராமப்புறம் அழகாக தெரிகிறது.

பிளஸ் & மைனஸ்
ஆடு திருடும் ஒருவனது வாழ்க்கையில் ஏற்படும் காதல் மற்றும் மோதல் சம்பவங்களை மையமாக கொண்டு இந்த மையலை இயக்குனர் ஏழுமலை கொடுத்திருக்கிறார். இருப்பினும் திரைக்கதையை ஜெய மோகன் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்தி எழுதி இருக்கலாம். அதேபோல் ஏழுமலையும் தன் பங்கிற்கு இன்னும் கொஞ்சம் உயிரோட்டமாக படத்தை இயக்கி இருக்கலாம். திரும்பத் திரும்ப ஒரே காட்சிகளை பார்ப்பது போன்ற உணர்வை திரைப்படம் ஏற்படுத்திவிடுகிறது. உயிருடன் தீ வைத்து எரிக்கும் கொடூர குணம் கொண்ட போலீசார் இருப்பார்களா? என்கிற கேள்வியும் ரசிகர்களிடம் எழுகிறது.

மையல் - கைகூடவில்லை



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !