வேம்பு
தயாரிப்பு - கோல்டன் ஷ்யூர்ஸ் மற்றும் மஞ்சள் சினிமாஸ்
இயக்கம் - ஜஸ்டின் பிரபு
நடிகர்கள் - ஹரி கிருஷ்ணன், ஷீலா, மாரிமுத்து, கர்ணன் ஜானகிஇசை - மணிகண்டன் முரளி
வெளியான தேதி -23.05.2025
நேரம் -2 மணி நேரம் 1 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
கதைக்களம்
கிராமத்து பெண்ணான ஷீலா, தனது தந்தையால் தைரியமாக வளர்க்கப்பட்டு சிலம்ப கலையில் சிறந்து விளங்குகிறார். தற்காப்புக்காக கற்றுக் கொண்ட கலையில் எதையாவது சாதிக்க வேண்டும் என இருந்த நிலையில் அவரது உறவுக்காரரான ஹரி கிருஷ்ணனுடன் திருமணம் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகு அவருடைய எண்ணத்தை புரிந்து கொண்டு, அவளுக்கு துணையாக நிற்கிறார் ஹரி கிருஷ்ணன். இப்படி அழகாக சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்வில் புயல் அடித்தது போல் ஹரி கிருஷ்ணன் ஒரு விபத்தில் சிக்குகிறார். அந்த விபத்தைத் தொடர்ந்து கணவரை 'கண்'ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை ஷீலாவிற்கு வருகிறது. இதனால் அவர் நடத்தி வந்த போட்டோ ஸ்டுடியோ வேலை பாதிக்கிறது, அதோடு ஷீலாவின் கனவான சிலம்பமும் தடைபடுகிறது. இந்த சோதனையிலிருந்து அவர்கள் எப்படி மீண்டனர்? விபத்தில் ஹரி கிருஷ்ணனுக்கு என்ன நேர்ந்தது? ஷீலாவின் சிலம்பம் கனவு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.
ஒரு உணர்வுபூர்வமான கதையில், நம்முடைய பாரம்பரிய கலையான சிலம்பத்தை சேர்த்து பெண்களுக்கு தற்காப்புக்கலையின் அவசியத்தை அழகாக திரை மொழியில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜஸ்டின் பிரபு. ஒரு கிராமம், குறிப்பிட்ட சில நடிகர்கள் என ஒரு சிறிய படத்தில் பெரிய மெசேஜை அழகாக புகுத்தி இருக்கிறார். நாட்டில் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகிவிட்ட இந்த காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் தற்காப்புடன் தன்னை காத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வை இப்படம் ஊட்டுகிறது.
கதை தேர்வில் சிறந்து விளங்கும் ஷீலா தனக்கான கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த படமும் அவருக்கு பெருமை தேடி தந்துள்ளது. வேம்பு கேரக்டரில் தனது நுட்பமான நடிப்பையும், உணர்வையும் படத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.தனக்கு கிடைக்கும் சின்ன சின்ன கேரக்டர்களில் கூட தன் நடிப்பால் மெருகேற்றி காட்டும் ஹரி கிருஷ்ணன், இந்த படத்தில் சிக்ஸர் அடித்துள்ளார். சக்திவேல் என்ற கதாபாத்திரத்தில் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையிலான மென்மையான உறவு கதைக்கு ஒரு அமைதியான வலிமையை தருகிறது. இவர்களுடன் மாரிமுத்து கதாபாத்திரம் அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. மற்ற நடிகர்களும் திறமையான நடிப்பை கொடுத்து படத்தை தாங்கி பிடிக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் குமரனின் கேமரா கிராமப்புற இயற்கை அழகை கண்முன் நிறுத்தி உள்ளது. மனிகண்டன் முரளியின் இசை படத்திற்கு உணர்வை புகுத்தியுள்ளது.
பிளஸ் & மைனஸ்
இந்த படத்தின் மூலம் பெண்களுக்கு தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் தற்காப்பு கலை குறித்த அறிவுரையை சொல்லி இருக்கிறார் இயக்குனர். இருப்பினும் அதை ரொம்ப ஆமச்சூராக காட்டியிருக்கிறார். ஆனால் ஒர் நேர்மையான கதையினால் சமூகத்து பிரச்னையை முன்னிறுத்தி உள்ளார். ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், அதன் நோக்கம் தெளிவானது.
வேம்பு - மதிப்பு மிக்கது