ஓஹோ எந்தன் பேபி
தயாரிப்பு : விஷ்ணு விஷால் ஸ்டூடியோ
இயக்கம் : கிருஷ்ணகுமார் ராமகுமார்
நடிப்பு : ருத்ரா, விஷ்ணு விஷால், மிதிலா பால்கர், கருணகாரன், மிஷ்கின்
இசை : ஜென் மார்ட்டின்.
வெளியான தேதி : ஜூலை 11, 2025
நேரம் : 2 மணி நேரம்14 நிமிடம்
ரேட்டிங்: 3 / 5
சினிமாவில் அசிஸ்டென்ட் டைரக்டராக வொர்க் பண்ணும் ஹீரோ, ஒரு பிரபல ஹீரோவை சந்தித்து ரொமான்டிக் கதை சொல்கிறார். இடைவேளைக்குபின் அந்த கதை நகர மறுக்க, 'என்னாச்சு' என அந்த ஹீரோ விசாரிக்கிறார், ''இது என் சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்கள். எங்களுக்கு பிரேக்அப் ஆகிவிட்டது'' என்கிறார் ஹீரோ.
''உங்க லவ்வரை மீண்டும் சந்திக்கணும். மீதியையும் லைவ் ஆக எழுதணும். அப்பதான், நான் கால்ஷீட் கொடுப்பேன்'' என்கிறார் சினிமா ஹீரோ. ஒன்றரை ஆண்டுகளுக்குபின் லவ்வரை சந்திக்க மணிபால் செல்கிறார் ஹீரோ. அந்த ஹீரோயின் என்ன சொன்னார், காதல் ஜெயித்ததா? படம் பண்ணினாரா என்பது ஓஹோ எந்தன் பேபி படத்தின் கதை.
அசிஸ்டென்ட் டைரக்டராக அறிமுக ஹீரோ ருத்ரா நடித்துள்ளார். இவர் விஷ்ணு விஷால் தம்பி. கதை கேட்கும் ஹீரோவாக விஷ்ணு விஷால் வருகிறார். மிதிலா பால்கர் ஹீரோயின். பைவ்ஸ்டார் படத்தில் நடித்த கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்கிறார்.
ஹீரோவின் ஸ்கூல் பருவத்தில் இருந்து கதை தொடங்குகிறது. பக்கத்து வீட்டு சீனியருடன் ஏற்படும் கிரஷ், கிஸ், அந்த காதல் புட்டுக்கிட்டு போன விதம் என கலர்புல்லாக, கலகலவென கதை நகர, இது பக்கா யூத் சப்ஜெக்ட் என்று நமக்கு புரிய ஆரம்பிக்கிறது . காலேஜ் முடித்தவுடன் ஒரு திருமண வீட்டில் டாக்டரான மிதிலாவை சந்திக்கிறார் ருத்ரா. அந்த காதல் உருவாகும் விதம், காதலர்களின் கலாட்டா, டிரிப், சண்டை என செல்லும் அந்த காதலும் ஒரு கட்டத்தில் ஸ்தம்பிக்க, இடைவேளைக்குபின் அந்த காதலுக்கு என்னாச்சு, காதலர்களுக்கு இடையே என்ன பிரச்னை, அவர்கள் சேர்ந்தார்களா என்பதை அழகாக முடிக்கிறார் இயக்குனர்.
ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குனராக பல ஆண்டுகள் பணியாற்றிய ருத்ரா, முதல் படத்திலும் உதவி இயக்குனராகவே வருவது கோ இன்சிடென்ட். ஸ்கூல் போர்ஷனில் அப்பாவியாக கலக்கியிருக்கிறார். அடுத்து இளைஞன் ஆனவுடன் ரொமான்ஸ், காதலியுடன் சண்டை என கோபம் கலந்த ஒரு பிரஷ் நடிப்பை தருகிறார். பாடல்காட்சிகளிலும் கவர்கிறார். தமிழ்சினிமாவுக்கு ஒரு யூத் ஹீரோ கிடைத்து இருக்கிறார்.
அவர் பள்ளி தோழியாக வரும் திவ்யா செம ஹாட். சில சீன்களில் வந்தாலும் அழகால் கவர்கிறார். மராட்டிய நடிகை மிதிலா பால்கர் ஹீரோயினாக தமிழில் அறிமுகம் ஆகி இருக்கிறார். சின்ன, சின்ன எக்ஸ்பிரசனில், டான்சில் கலக்கியிருக்கிறார். அவரின் காஸ்ட்யூம், ஹேர்ஸ்டைல், அந்த மூக்குத்தி மனதில் நிற்கிறது. இவர்களை தவிர, ஹீரோ அப்பாவாக, ஜோசியத்தை நம்புவராக வரும் விஜயசாரதி, ஹீரோ சித்தப்பாவாக வரும் கருணாகரன், ஹீரோயின் பிரண்ட் ஆக வரும் நிர்மல் பிள்ளை நல்ல சாய்ஸ். ஹீரோ அம்மாவாக வரும் கஸ்துாரி சும்மா வந்து போகிறார். அந்த திருமண வீடு காட்சிகள் கலர்புல்.
இயக்குனர் மிஷ்கின் அவராகவே வருகிறார். அவர் சம்பந்தப்பட்ட ஷூட்டிங் சீன்கள், அவர் திட்டுகிற, கோபப்படுகிற சீன்களுக்கு தியேட்டரில் கை தட்டல். படத்திலும் ஹீரோ விஷ்ணு விஷாலாகவே வருகிறார் விஷ்ணு விஷால், அவர் தனது சொந்த வாழ்க்கை பற்றி பேசும் வசனங்கள் டச்சிங். என்ன அவருக்கு சினிமாவுக்குள் சினிமா என பாடல் காட்சி, பில்டப் காட்சி தேவையற்றது.
முதற்பாகம் விறுவிறுப்பாக, வேகமாக, கலர்புல்லாக ஓடிவிடுகிறது. ஆனால், இடைவேளைக்குபின் கொஞ்சம் போரடிக்கிறது. மிதிலா சம்பந்தப்பட்ட மணிபால் சீன்களில் அவ்வளவு சினிமாதனம். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் டுவிஸ்ட், கிளைமாக்ஸ் தொடக்கம் திரைக்கதை மாறுவது ஆறுதல். மிஷ்கின் படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட அந்த கிளைமாக்சை ரசிக்க முடிகிறது. ஹரிஷ் கண்ணன் கேமரா வொர்க், ஜென்மார்ட்டின் இசை படத்தை இன்னும் இளமை ஆக்கி இருக்கிறது.
பள்ளி மாணவர்கள் லிப்லாக் கிஸ், படு கவர்ச்சியான டிரஸ் இதெல்லாம் ஓவர். ஒரு காட்சியில் நண்பர்களான ஹீரோ, ஹீரோயின் இருவரும் சர்வசாதாரணமாக தம் அடிக்கிறார்கள். ஹீரோயின் ரசித்து சரக்கு அடிக்கிறார். இதெல்லாம் கதைக்கு தேவையா என தெரியவில்லை. இன்றைக்கு எல்லாரும் இப்படி இருக்கிறார்களா என்ன? இடைவேளைக்குபின் குடும்பம் சம்பந்தப்பட்ட சீன்களில் நாடகத்தனம் அதிகமாக இருப்பதும் நெளிய வைக்கிறது.
அதிக விளம்பரங்களை இயக்கியவர் என்பதாலோ என்னவோ, ஒவ்வொரு சீனையும் ரசித்து, அவ்வளவு கலர்புல்லாக தந்து இருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராமகுமார். அவரும் குறி சொல்பவராக காமெடி கலந்த நடிப்பை தந்து இருக்கிறார். ஸ்கூல் போர்ஷன், காதல், டிரிப், மிஷ்கின் படப்பிடிப்பு சீன்கள் நைஸ். அறிமுக ஹீரோவாக ருத்ரா நல்ல மார்க் வாங்குகிறார். யூத்புல் சப்ஜெக்ட் என்பதால், யூத்ஸ் கொண்டாடுவார்கள். மற்றவர்கள், நமக்கு இப்படி வாழ கொடுத்து வைக்கலையே என சற்றே பொறமை படலாம்
ஓஹோ எந்தன் பேபி - கியூட்டான யூத் ஸ்டோரி