உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / தேசிங்குராஜா 2

தேசிங்குராஜா 2

தயாரிப்பு : இன்பினிட்டி கிரியேஷன்
இயக்கம் : எழில்
நடிப்பு : விமல், ஜனா, புஜிதா, புகழ், ரவிமரியா மற்றும் பலர்
இசை : வித்யாசாகர்
வெளியான தேதி : ஜூலை 11, 2025
நேரம் : 2 மணிநேரம் 13 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5

போலீஸ் இன்ஸ்பெக்டராக விமல் பணியாற்றும் ஸ்டேஷனுக்கும், புகழ் இன்ஸ்பெக்டராக இருக்கும் பக்கத்து ஸ்டேஷனுக்கும் மாமூல் உள்ளிட்ட விஷயங்களில் கடும் போட்டி, சண்டை. இந்நிலையில் கூவத்துார் பாணியில் ஒரு ரிசார்ட்டில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், மந்திரிகள் ஜாலியாக இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ டிஸ்க் காணாமல் போகிறது. மந்திரி ரவிமரியாவும், ஹீரோ விமல், போலீஸ் அதிகாரியான ஹீரோயின் புஜிதா டீமும் அதை கண்டுபிடித்தார்களா? அந்த டிஸ்க் எப்படி காணாமல் போனது என்பதுதான் தேசிங்குராஜா 2 கதை. எழில் இயக்கி இருக்கிறார்.

2013ல் விமல், சூரி, பிந்து மாதவி நடிப்பில் வெளியான தேசிங்குராஜா படத்துக்கும், இதற்கும் துளியும் சம்பந்தம் இல்லை. படத்தின் பப்ளிசிட்டி, பிஸினஸ்க்காக இந்த தலைப்பை வைத்து இருக்கிறார்கள். போலீஸ் பின்னணியில் ஒரு காமெடி படம் என்பது கான்செப்ட். விமல் தான் ஹீரோ என்றாலும் சில சீன்களில் புல்லட்டில் வருகிறார். நாலைந்து வசனங்கள் பேசுகிறார், டான்ஸ் ஆடுகிறார், சண்டை போடுகிறார், ஹீரோயினை காதலிக்கிறார். மற்றபடி உருப்படியாக எதுவும் செய்யவில்லை. எல்லா சீனிலும் ஓபனிங் சீன் மாதிரியே பில்டப் ஆக வருகிறார் என படத்தில் ஒரு வசனம் வரும். அது மட்டுமே அவர் விஷயத்தில் நடந்து இருக்கிறது. கிளைமாக்சில் மட்டும் கொஞ்சம் நடித்து இருக்கிறார். இன்னொரு ஹீரோவான ஜனா, தயாரிப்பாளர் மகன் என்பதால் அவருக்காக ஏகப்பட்ட சீன்கள் வலிந்து வைக்கப்பட்டுள்ளன. அதெல்லாம் படத்துக்கு பெரிய மைனஸ். கிளைமாக்ஸ் வரை அவரும் வந்து போகிறார், தயாரிப்பாளர் மகனாச்சே.

போலீஸ் அதிகாரியாக வருகிறார் பிரபல தெலுங்கு ஹீரோயின் புஜிதா. அவரும் நாலைந்து வசனங்கள் பேசுகிறார், அப்புறம் அந்த டிஸ்க்கை கண்டு பிடிக்க கிளம்பிவிடுகிறார். படம் முடிந்தபின் வரும் அந்த பிரமோ பாடலில் அழகாக ஆடுகிறார். படத்தின் பெரும்பாலான காட்சியை ஆக்கிமித்து இருப்பது பெண் போலீஸ் வர்ணஜாலமாக வரும் புகழ், மந்திரி ரவிமரியா டீம்தான். பக்கம், பக்கமாக வசனம் எழுதியிருப்பார்கள் போல. ஆரம்பம் முதல் கடைசிவரை ஏதேதோ பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் காதில் பஞ்சு வைத்து கொள்ளலாமா என தோன்றுகிறது. வசனம் பேசுவதுதான் காமெடினு யாரோ உங்களுக்கு தப்பா சொல்லியிருக்காங்க.

போலீசாக வரும் புகழ், சாம்ஸ், சிங்கம்புலி, சுவாமிநாதன் மற்றும் மொட்ட ராஜேந்திரன், கிங்ஸ்லி, மதுரை முத்து, மதுமிதா போன்றவர்கள் காமெடி என்ற பெயரில் என்னென்னவோ செய்கிறார்கள், கொஞ்சமும் சிரிப்புதான் வரவில்லை. புகழுக்கு அந்த கெட்அப் ஓகே. ஆனால், நடிப்பு, வாய்ஸ் செட்டாவில்லை.
இத்தனை காமெடியன் இருந்தும் சிரிப்பு சத்தம் கேட்காத படமாக தேசிங்குராஜா2 அமைவது சோகம். இன்னொரு பக்கம் ரவிமரியா தன் பங்கிற்கு கண்களை உருட்டுகிறார், சவுண்டு விடுகிறார், நடித்து தள்ளுகிறார். இந்த படத்தை 2 தடவை தியேட்டருக்கு போய் ரசிகர்களுடன் பாருங்க. அப்பதான் அவர்களின் கஷ்டம், அவர்கள் திட்டுவது உங்களுக்கு புரியும், முடியலை சாரே. மொட்டை ராஜேந்திரன், சாம்ஸ், சிங்கம்புலி இம்சை தனி ரகம்

படத்தில் இது என்ன லாஜிக், என்ன வசனங்கள் இது என்றே புரியவில்லை. கூவத்தார் ரிசார்ட்டில் லுாட்டி அடித்த வீடியோவை கண்டுபிடிக்கும் போலீஸ், மந்திரி டீம் என்ற ஒருவரி கதையில் இவ்வளவு குழப்பம், இவ்வளவு இழுவை ஏன்? படத்தில் ஒவ்வொரு சீனுக்கும் ஒரு புது நடிகர், ஒரு புது கதை வந்து கொண்டே இருக்கிறார்கள். அத்தனைபேர் இருந்தும் ரசிக்க முடியலை. சில சமயம் இந்த நடிகர் ஏன்? இந்த சீன் ஏன் என்று தலையை பிய்த்துக்கொள்ள வேண்டியது இருக்கிறது. அழகாக கொண்டு வர வேண்டிய ரோபோ சங்கர் தலை காமெடி கூட பணால். கிளைமாக்ஸ் சொதப்பல்.

படத்தில் நம்மை நம்ப வைத்து ஏமாற்றியது 2 பேர். முதலாமவர் இசையமைப்பாளர் வித்யாசாகர். எழில், வித்யாசாகர் கூட்டணியில் உருவான பூவெல்லாம் உன் வாசம் படத்தை, அந்த பாடல்களை நம்பி போனால், இங்கே பூவேஇல்லை. பின்னே எங்கே வாசம் வரும்? இப்படி பண்ணிட்டீங்களே வித்யாசாகரே. அடுத்து இயக்குனர் எழில், எத்தனை வெற்றி படங்கள், எத்தனை நல்ல படங்கள் கொடுத்த எழில் இயக்கிய படமா என ஆரம்பம் முதல் கடைசி வரை பார்வையாளர்களுக்கு சந்தேகம் வருகிறது. உங்க அசிஸ்டென்ட்டை இயக்கவிட்டு ஒதுங்கிவிட்டீர்களா? ஒரு சீன் கூட ரசிக்கும்படி இல்லை. படம் முழுக்க காமெடி என்ற பெயரில் கத்திக் கொண்டே இருக்கிறார்களே? காமெடி படம் என்று வந்தால் தலைவலியை உருவாக்கிவிட்டீர்களே என்று ரசிகர்கள் திட்டிக்கொண்டே செல்கிறார்கள். எழில் இயக்கிய மோசமான படங்களில், முக்கியமான படமாக அமைக்கிறது தேசிங்குராஜா2

தேசிங்குராஜா முதல்பாகத்தை நம்பி, அந்த எதிர்பார்ப்பில் இந்த படத்துக்கு சென்றால், எப்படா படம் முடியும், எப்படா ஓடலாம் என்ற மனநிலையுடன் இருப்பீர்கள்.

தேசிங்குராஜா 2 - யப்பா, முடியலைடா சாமி



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !