மாயக்கூத்து
தயாரிப்பு : ராகுல் மூவி மேக்கர்ஸ்
இயக்கம் : ஏ.ஆர்.ராகவேந்திரா
நடிப்பு : நாகராஜன், ஐஸ்வர்யா, காயத்ரி, டில்லி கணேஷ், மு.ராமசாமி மற்றும் பலர்
இசை : அஞ்சனா ராஜகோபாலன்
வெளியான தேதி : ஜூலை 11, 2025
நேரம்: 2 மணிநேரம்
ரேட்டிங்: 3 / 5
எழுத்தாளரான நாகராஜன் தனது கொள்கையை விட்டு விலகாமல், தனக்கு பிடித்த தொடர்கதை எழுதும் பணியை, ரசித்து, சுதந்திரமாக செய்து வருகிறார். 50வது கொலை செய்ய துடிக்கும் வில்லன், தனது மகனுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட முடியாமல் தவிக்கும் வேலைக்காரி, நீட் தேர்வால் டாக்டர் ஆக முடியுமா என தவிக்கும் ஒரு ஏழை விவசாயின் மகள் ஆகியோரை அழுத்தமான கேரக்டராக மாற்றி, தனது கதையில் பல திருப்பங்களை கொண்டு வருகிறார். பத்திரிகை ஆசிரியரான டில்லி கணேஷ் எழுத்தாளருக்கு ஆதரவாக இருக்கிறார். கொஞ்சம் அட்வைசும் செய்கிறார்.
ஒரு நாள் திடீரென எழுத்தாளர் கற்பனையில் எழுதிய கதாபாத்திரங்கள் அவர் வீடு தேடி வருகின்றன. உங்கள் கதையால் எங்களுக்கு பிரச்னைகள், எங்களை இப்படி தவிக்க விடலாமா? கதையை மாற்றுங்கள், எங்களுக்கு தீர்வு சொல்லுங்கள் என்று டார்ச்சர் செய்கின்றனர். அது என் கற்பனை, என் இஷ்டப்படிதான் எழுதுவேன் என அவர் மறுக்க, ஒரு கட்டத்தில் அந்த கதாபாத்திரங்கள், அதனுடன் இருப்பவர்கள் எழுத்தாளரை துரத்துகின்றன, அவர் பயந்து ஓடுகிறார். அப்புறம் என்ன நடக்கிறது என்பதை ஒருவித புனைவு கலந்து மாறுபட்ட பாணியில் விரிவடைகிறது மாயக்கூத்து கதை.
நடுத்தர வயது எழுத்தாளராக வரும் நாகராஜன்தான் இந்த படத்தின் கதைநாயகன். அவரின் பிடிவாத குணம், தான் உருவாக்கிய கேரக்டர்களுடன் போராடுவது, பயந்து ஓடுவது, கடைசியில் இந்த சிக்கலுக்கு தீர்வு காணுவது என சிறப்பாக , இயல்பாக நடித்து இருக்கிறார். அவர் எழுதும் கதையில் வேலைக்காரியாக வரும் ஐஸ்வர்யா ரகுபதியின் நடிப்பு படத்துக்கு பிளஸ். வில்லனாக வரும் இன்னொரு கேரக்டர் சாய்தீனாவும் கவர்கிறார். அந்த ஏழை மாணவியும் மனதில் நிற்கிறார். இவர்களை தவிர, எழுத்தாளர் மனைவியாக வரும் காயத்ரியும் நல்ல தேர்வு. இவர்களை தவிர ஆட்டோகாரர், கவுரவ வேடத்தில் வரும் மு,ராமசாமியும் படத்தை அழகாக்குகிறார்கள். ஒரு நாள் மட்டுமே நடித்த டில்லி கணேஷ் நடிப்பு, வசனங்கள் நச். சுந்தர் ராம்கிருஷ்ணன் ஒளிப்பதிவு, நாகூரான் எடிட்டிங், நாகராஜன் கண்ணன் வசனங்கள் படத்தை மேலும் அழகாக காண்பித்து, காட்சிகளை ஆழமாக்குகின்றன.
கொஞ்சம் அதிக கற்பனை கலந்த பேண்டசி கரு. அதை திரில்லர் பாணியில் கொண்டு இருப்பதும், எழுத்தாளரை அவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள் மிரட்டுவதும் புதுமையாக இருக்கிறது. எழுத்தாளர் ஓட, ஓட கதை நிமிர்ந்து நிற்கிறது. வழக்கமான சினிமா பாணி அல்லாமல் திரைக்கதை அமைப்பு, மாறுபட்ட எடிட்டிங் யுக்தியும் இது வேறு மாதிரியான படம் என்பதை சொல்லாமல் சொல்கிறது.
சில வசன காட்சிகளில், சில சீன்களில் விறுவிறுப்பு இல்லை என்றாலும், இந்தவகை படங்கள் இப்படித்தான் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. நீட் தேர்வு சம்பந்தப்பட்ட போர்ஷனில் நாடகத்தன்மை அதிகமாக இருக்கிறது. வசனங்களில் சீரியல் தன்மை எட்டி பார்க்கிறது.
கலைப்படங்களுக்கு உரிய டோன் சிலசமயம் அதிகமாகிறது. ஆனாலும், அதிகம் போரடிக்கவில்லை. அஞ்சனா ராஜகோபாலன் இசை, பாடல் படத்துக்கு உறுதுணையாக அமைகிறது. படம் எப்படி முடியப்போகிறது என்ற எதிர்பார்ப்பு வர, அதையும் புதுமையாக முடித்து வைக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.ராகவேந்திரா. இவருடன் இணைந்து கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார் சீனிவாசன்.
காதல், மோதல், ஆக் ஷன், காமெடி படங்களுக்கு மத்தியில் மாயக்கூத்து உண்மையில் மாயங்கள் நிறைந்த நல்ல படம். வழக்கமான கமர்ஷியல் படங்களுக்கு மத்தியில் தனித்து நிற்கிறது. ஏதாவது புதிதாக செய்ய வேண்டும். புதிய பாணியில் கதை சொல்ல வேண்டும் என்று நினைத்து புதுமுகங்கள் அதிகம் கொண்டு எடுக்கப்பட்ட புதுமை முயற்சி. ஆனால், இதை பார்க்க கொஞ்சம் பொறுமை வேண்டும். அதற்கான தனி ரசனை வேண்டும். அப்படி ரசித்தால் நல்ல அனுபவம் கிடைக்கும்.
மாயக்கூத்து - மாயங்கள் நிறைய, புதுமையான முயற்சி