கெவி
தயாரிப்பு : ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் பிலிம் கம்பெனி
இயக்கம் : தமிழ் தயாளன்
நடிப்பு : ஆதவன், ஷீலா, ஜாக்குலின், சார்லஸ் வினோத் மற்றும் பலர்
இசை : பாலசுப்பிரமணியன் ஜி & சா.ராஜாரவிவர்மா
ஒளிப்பதிவு : ஜெகன் ஜெயசூர்யா
வெளியான தேதி : ஜூலை 18, 2025
நேரம் : 2 மணிநேரம் 13 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5
கொடைக்கானல் அருகே இருக்கும் மலைவாழ் கிராமம் வெள்ள கெவி. வெள்ளக்காரன் காலத்தில் இருந்து இன்றுவரை சாலை, மருத்துவ வசதிகள் இல்லாததால் அந்த ஊர் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். குறிப்பாக, பிரசவ காலங்களில் பெண்கள் படாதபாடு படுகிறார்கள். அங்கே வசிக்கும் ஷீலாவுக்கு இரவு நேரத்தில் பிரசவவலி ஏற்படுகிறது. ஊர் மக்கள் டோலிகட்டி அவரை துாரத்தில் உள்ள மருத்துவமனை கொண்டு செல்கிறார்கள். அந்த சமயத்தில் பழைய பகை காரணமாக ஒரு போலீஸ் டீம் அவர் கணவர் ஆதவனை கொல்ல துரத்துகிறது. ஷீலாவுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்ததா? ஆதவன் உயிர் பிழைத்தாரா என்பது கெவி படத்தின் கதை. தமிழ் தயாளன் இயக்கி இருக்கிறார்.
மலைவாழ் கிராமங்களின் பின்னணி, அங்கு வசிக்கும் மக்கள், அவர்கள் அனுபவிக்கும் சிரமங்கள், அரசு ஊழியர்கள், அரசு மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அவர்களை நடத்தும் முறை ஆகியவற்றை சாட்டையடி பதிவாக சொல்லி இருக்கிறார் புதுமுக இயக்குனர். கர்ப்பிணியாக வருகிற ஷீலாவின் நடிப்பும், அவர் கணவராக வருகிற ஆதவனின் கதறலும் தான் படத்துக்கு பெரிய பலம்.
குறிப்பாக பிரசவ வலியால் ஷீலா துடிக்கிற காட்சி, அந்த இரவில் பேட்டரி லைட், லாந்தர் விளக்குடன் காட்டுபாதையில் துாக்கி செல்லும் மக்களின் அர்ப்பணிப்பு, தன் குழந்தையை எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்ற ஷீலாவின் ஆசை ஆகியவை படத்தின் உயிரோட்டமான காட்சிகள். இது தவிர, கணவர் மீது அன்பு காட்டுகிற காட்சி, குழந்தை பிறந்தபின் தவிக்கிற காட்சிகளில் உருக்கமான நடிப்பை தந்து இருக்கிறார் ஷீலா. இன்னமும் சரிவர மருத்துவ வசதி கிடைக்காமல் தவிக்கிற, இது போன்ற மலைவாழ் கிராம பெண்களின் துன்பவியல் அடையாளமாக தெரிகிறார் ஷீலா. அவர் பிரசவலியால் கதறுவது படம் முடிந்த பின்னும் காதில் ஒலிக்கிறது.
ஹீரோவாக நடித்த ஆதவன் அப்பாவிதனமான நடிப்பில் மிரட்டியிருக்கிறார். தனது மலை கிராமத்துக்கு வசதி வேணும் என எம்எல்ஏவிடம் சண்டை போடும்போதும், கர்ப்பிணியாக இருக்கிற தனது மனைவி மீது பாசம் காட்டும்போதும், போலீஸ் பிடியில் சிக்கி அடி வாங்கி அழுகிற காட்சிகளிலும் அழுத்தமான நடிப்பை தந்து 'யாருப்பா இவர்' என கேட்க வைக்கிறார். திருப்பி அடிக்கிற ஒரு சில இடங்கள் மட்டும் சினிமாதனம்.
இவர்களை தவிர அலட்சிய டாக்டராக வரும் காயத்ரி, பயிற்சி டாக்டராக வரும் விஜய் டிவி ஜாக்குலின், அவர் உதவியாளர் ஜீவா, கஷ்டமான காலத்தில் உதவ வரும் கெவி கிராம மக்களாக நடித்தவர்கள் ஆகியோரும் மனதில் நிற்கிறார்கள். கெட்ட போலீசாக வந்து கோபத்தை கக்கியிருக்கிறார் சார்லஸ் வினோத்.
ஒரு நல்ல கருத்தை, ஒரு விழிப்புணர்வு விஷயத்தை, சாலை , மருத்துவ வசதி சரிவர கிடைக்காத மலை கிராம மக்களின் குரலாக ஒலிக்கும் கெவி கருவை பாராட்டலாம். சம்பந்தப்பட்ட மலை பகுதிக்கே சென்று, இரவு நேரத்தில் நேச்சுரலாக படப்பிடிப்பு நடத்தி உழைப்பை கொட்டியிருக்கிறார் ஔிப்பதிவாளர் ஜெகன் ஜெயசூர்யா. வைரமுத்து வரிகளில், தேவா குரலில் அந்த மாமலை பாடல் அருமை. இடைவேளைக்குபின் படத்தின் ஓட்டம் கொஞ்சம் டாக்குமென்ட் பாணிக்கு மாறுவதும், சில விஷயங்கள் மாறி மாறி வருவதும் போராடிக்கிறது. கிளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் அழுத்தமான பதிவாக இருந்து இருக்கலாம். ஆனாலும், தேர்தல் காலங்களில் மட்டுமே இந்த மக்கள் இந்திய குடிமக்களாக பார்க்கப்படுகிறார்கள் என்ற விழிப்புணர்வு பதிவு நச்.
ரொம்பவே உணர்ச்சிகரமாக, பல கேள்விகள் எழுப்ப வேண்டிய படமாக கெவி வந்து இருக்கணும். ஆனால், சில சினிமாதனம் , இடைவேளைக்குபின் ஓவர் டோஸ் விஷயங்களால் சற்றே தடுமாறுகிறது. படத்தின் கிளைமாக்சும் ஏமாற்றமாக இருப்பது மைனஸ் ஆக இருக்கிறது. ஆனாலும், கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளுக்கு நாம் சுற்றுலா செல்லும்போது கெவி மாதிரியான மலை கிராமங்கள் இருப்பதும், அங்குள்ள மக்கள் இப்படி துன்பம் அனுபவிப்பதும், இன்னமும் அரசு தரப்பில் உதவிகள் கிடைக்காததுமான பல விஷயங்களை ஒரு சினிமா மூலம் சொல்ல நினைக்கும் படக்குழுவை பாராட்டலாம்.
கெவி - மலைவாழ் மக்களின் அவலக்குரல்