உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / டிரெண்டிங்

டிரெண்டிங்

தயாரிப்பு : ராம் பிலிம் பேக்டரி
இயக்கம் : சிவராஜ். என்
நடிப்பு : கலையரசன், பிரியாலயா, பிரேம், பெசன்ட் நகர் ரவி
இசை : சாம் சி. எஸ்
ஒளிப்பதிவு : பிரவீன்பாலு
வெளியான தேதி : ஜூலை 18, 2025
நேரம் : 2 மணிநேரம் 27 நிமிடம்
ரேட்டிங்: 2 / 5

கலையரசன், பிரியாலயா தம்பதிகள் யு-டியூப்பில் வீடியோ பதிவிட்டு அதன் மூலம் சம்பாதிப்பதை முழு வேலையாக வைத்து இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களின் சேனல் டவுண் ஆகிறது, பார்வையாளர்கள் வருகை, வருமானம் குறைகிறது. புதுப்புது ஐடியா வொர்க் அவுட் ஆகாமல் போக, வாங்கிய சொகுசு வீட்டுக்கு இஎம்ஐ கட்ட முடியாமல் தவிக்கிறார்கள். அடுத்த கட்ட சோதனையாக அவர்கள் சேனல் முடங்கிவிட, என்ன செய்வது என தவிக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு வரும் மர்ம போனில் ஒருவர் ''உங்க வீட்டுக்குள்ளே இருந்தே 7 நாட்கள் ஒரு கேம் விளையாடுங்கள், நான் டாஸ்க் தருகிறேன். அதை செய்து முடியுங்கள். அதை நான் பிரவேட் ஆக ஒளிபரப்பி, அதன் மூலம் பணம் தருகிறேன்' என்று ஆசை காட்டுகிறது. வேறு வழியில்லாமல் வீட்டுக்குள்ளே இருந்தபடியே அந்த நபர் சொல்படி பிக்பாஸ் பாணியில் கேம் விளையாட ஆரம்பிக்கிறார்கள். அந்த டாஸ்க் காரணமாக அவர்கள் இழந்தது என்ன? அந்த மர்ம நபர் யார் என்ற ரீதியில் செல்கிறது டிரெண்டிங் கதை

இன்றைக்கு சோஷியல் மீடியாவில் கப்பிள் வீடியோ என்ற பெயரில் வீடியோ பதிவிட்டு, பணம் சம்பாதிப்பவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டிரெண்டிங் ஆன ஐடியாதான். அதில் கலையரசன், பிரியாலயா தம்பதிகள் வீடியோ போடுவது, நண்பர்கள் பாராட்டு, பொறாமையை சம்பாதிப்பது, புதுசாக யோசிப்பதுவரை கதை விறுவிறுப்பாக செல்கிறது. மர்ம நபரால் அவர்கள் ஆட்டுவிக்கப்படுகிற சில டாஸ்க் ஓகே. ஆனால் நேரம் செல்ல, செல்ல இரண்டு கேரக்டர் மட்டுமே அதிக சீன்களில் இருப்பதும், அவர்களின் பிரச்னைகளும், என்ன கதை இது என்று போராடிக்க வைக்கிறது

கணவன், போட்டியாளர் என இரண்டு மாறுபட்ட கேரக்டரில் நடித்து இருக்கிறார் கலையரசன். அவர் கோபப்படுகிற, சந்தேகப்படுகிற, பொங்குகிற இடங்கள் ஓகே. ஆனால், இடைவேளைக்குபின் அவர் நடிப்பும் சுமார். ஹீரோயின் பிரியாலயாதான் படத்தின் ஓரே பிளஸ். அழகாக இருக்கிறார். அற்புதமாக நடிக்கிறார். டாஸ்க்கை முடிக்க அவர் தவிப்பது, கணவரை முந்த அவர் செய்கிற விஷயங்கள், கடைசியில் சிக்கலில் மாட்டிக் கொண்டு திணறவது ஓகே. இவர்களை தவிர கடைசி சில சீன்களில் வருகிறார் பிரேம். அவரின் சோகம், குழப்பமான மனநிலையும், நம்மையும் குழப்ப வைக்கிறது. அவர் சம்பந்தப்பட்ட அந்த டிவிஸ்ட் மட்டும் ஓகே. சாம் சி.எஸ் இசை, ஒளிப்பதிவு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பெசன்ட் நகர் ரவி வழக்கமான வில்லன், கொஞ்சம் நேரம் வந்து செல்கிறார்

ஒரு முழு நீள படத்தில் இப்படிப்பட்ட கான்செப்ட்டில், வேறு கதைக்களம், வேறு சில கேரக்டர்கள் வந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும். கலையரசன், பிரியாலயாவை எவ்வளவு நேரம்தான் பார்த்துக் கொண்டு இருப்பது?, சில டாஸ்க் முகம் சுளிக்க வைக்கிறது. பிரேம் சம்பந்தப்பட்ட பின்னணி போரிங். திரில்லர் படங்களுக்கான விறுவிறுப்பு குறைந்து, நெளிய வைக்கிறது கிளைமாக்ஸ். அந்த மர்ம மனிதன் அவரோ? இவரா என்று பார்வையாளர்களுக்கு ஏற்படும் கேள்விக்கும் கடைசியில் ஏமாற்றமே பதிலாக கிடைக்கிறது. அந்த டாஸ்க்கை நடத்துவது யார்? ஏன் என்ற கேள்விகளுக்கு சொல்லப்படும் விஷயங்கள் நம்பக தன்மை அற்றவை. இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா? இப்படியெல்லாம் நடப்பார்களா? கேம் விளயைாடுவார்களா என்று ஏற்படும் சந்தேகம் படத்தை மேலும் பலவீனமாக்குகிறது. அதிலும் கலையரசன் சந்தேகம், அவர் மனைவிக்கு கொடுக்கிற சில டாஸ்க் ரொம்பவே ஓவர். யு- டியூப்பில் வருமானத்தை நம்பி இவ்வளவு பெரிய பங்களா வாங்க முடியுமா என்ன? கொஞ்சம் பார்வையாளர் பார்வையில் யோசிங்க இயக்குனரே?

டிரெண்டிங், வைரல், சோஷியல் மீடியா என்று பெயரில் நேரத்தை செலவிட்டு, மனநிம்மதியை பணத்தை இழக்க வேண்டாம். உறவுகளை மதியுங்கள் என்ற நல்ல கான்செப்ட். அதை சுமாராக சொல்லி நேரத்தை சோதிக்கிறார் இயக்குனர். டிரெண்டிங் என்பது தலைப்பு, ஆனால், படம் அவுட் ஆப் செலபஸ் ஆக, சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கிறது.

டிரெண்டிங் - இந்த டாஸ்க்குல சிக்கிடாதீங்க, தப்பிச்சு ஓடிடுங்க!



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !