ஜென்ம நட்சத்திரம்
தயாரிப்பு : அமோகம் ஸ்டூடியோஸ், வெயிட்லாம்ப் பிக்சர்ஸ்
இயக்கம் : பி. மணிவர்மன்
நடிப்பு : தமன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக் ஷா செரின், சிவம், அருண், காளி வெங்கட்
இசை : சஞ்ஜெய் மாணிக்கம்
ஒளிப்பதிவு : கே.ஜி
வெளியான தேதி : ஜூலை 18, 2025
நேரம் : 2 மணிநேரம்
ரேட்டிங் : 2 / 5
தனது நண்பன் வீட்டில் மனைவியுடன் தங்கியிருந்து, சினிமா இயக்குனராகவும் ஆசையில், கதை சொல்லிக் கொண்டு ஏமாற்றத்தையே பரிசாக பெறுகிறார் தமன். அப்போது அந்த வீட்டில் வெட்டு காயங்களுடன் வந்து விழும் காளிவெங்கட், ''ஒரு பாழடைந்த மில்லில் 57 கோடி பணத்தை மறைத்து வைத்து இருக்கிறேன், அது எம்எல்ஏ பணம். ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருக்கும் என் மகளை காப்பாற்றிவிட்டு, மீதி பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டு சாகிறார். தமனும், அவரின் நண்பர்களும் பணத்தை தேடி அந்த இடத்துக்கு செல்கிறார்கள். அங்கே தமன் நண்பர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட, அதை செய்தது யார்? பேயா? பணம் கிடைத்ததா? என்ற கேள்விக்கு பதில் சொல்கிறது ஜென்ம நட்சத்திரம். 1991ல் வெளியான ஜென்ம நட்சத்திரம் கதைக்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒரு நொடி படத்தை இயக்கிய பி. மணிவர்மன் இயக்கி இருக்கிறார்
தமன் நண்பன் வீட்டில் தங்கியிருக்கும் அவரின் மனைவி மால்விக்கு பல கெட்ட, பேய் கனவுகள் வருகிறது. அதை நினைத்து பயப்படுகிறார். இந்த சூழ்நிலையில் பணத்தை எடுக்க ஒரு பாழடைந்த மில்லுக்கு 5 நண்பர்கள் டீம் செல்கிறது. அங்கேயும் சில விஷயங்களை பார்த்து மால்வி பயப்படுகிறார். அப்போது நண்பர்கள் ஒவ்வொருராக கொல்லப்பட, மற்றவர்களுக்கு சந்தேகம் வருகிறது. சாத்தானின் ஆதிக்கம் நிறைந்த இடம் அது, சாத்தான் சக்தி பெற சடங்குகள் நடந்து இருக்கிறதோ என்று பயப்படுகிறார்கள். பணம் இருக்கும் தகவல் அறிந்து முனிஸ்காந்தும், அவர் உதவியாளரும் மில்லுக்கு வர, அடுத்தடுத்து நடக்கும் விபரீத சம்பவங்களே படத்தின் கதை. ஒரு மில்லுக்குள் படம் முழுக்க ஓடிக்கொண்டே, செத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
தமன் ஹீரோ என்றாலும் கதைக்கு முக்கியத்துவமுள்ள படம் என்பதால் அவரின் ஹீரோயிசத்தை நிரூபிக்க அதிக சீன்கள் இல்லை. ஒரு சண்டைக்காட்சியில் மட்டும் அதிரடியாக சண்டை போடுகிறார். சில சீன்களில் நடிப்பு ஓகே. கனவு பயத்தால் நடுங்கிக் கொண்டே, நம்மையும் நடுங்க வைக்கிறார் மால்வி. படத்தில் நன்றாக நடித்தவர் அவர் மட்டுமே. மற்ற நடிகர்கள் நடிப்பு ஓகே. வில்லத்தனமான வேடத்தில் அந்த நண்பர் மட்டும் கவனிக்க வைக்கிறார். காளி வெங்கட் சில சீன்களில் வந்துவிட்டு செத்து போகிறார். வேல.ராமமூர்த்திக்கு வழக்கமான அரசியல்வாதி வேடம். முனிஸ்காந்த் காமெடி பண்ணாமல், பணம் தே டும் வேலையை பார்க்கிறார். படத்தில் மனதில் நிற்கும் சீன்கள் வெகு குறைவு.
பல நடிகர்கள் நடித்து இருந்தாலும் யாரும் பெரிதாக மனதில் ஒட்ட வில்லை. ஒரு குழந்தை, ஒரு அம்மா அடிக்கடி பேய் மாதிரி வருகிறார்கள். அவர்கள் யார்? என்ன செய்கிறார்கள். அவர்கள் பின்னணி, குறியீடு என எதையும் காண்பிக்காமல், பார்வையாளர்களை தவிக்க விடுகிறார் இயக்குனர். அடுத்தடுத்து நண்பர்கள் கொல்லப்படுவதும், அடுத்து வரும் காட்சிகள் மட்டும் விறுவிறுப்பு, மற்றபடி சாத்தான், சடங்கு, பேய், நாய் என எதை, எதையோ சொல்லி குழப்பமடைய வைக்கிறார் இயக்குனர். சாத்தான் சடங்கு, லுாசிபர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் கதையுடன் ஒட்டவே இல்லை. ஒரு நாய் சுற்றி வருகிறது? ஏன் சுற்றி வருகிறது. என்ன செய்கிறது என்றே புரியவில்லை. அதுவும் கிராபிக்ஸ் நாய். அமானுஷ்யம், திரில்லர் இரண்டையும் தவறாக மிக்ஸ் செய்து, படத்தை இழுத்து இருக்கிறார்கள்.
57 கோடிக்கு மேல் அதிகமான பணத்தை தேடும், 5 நண்பர்களின் கதை. சிம்பிளான விஷயம்தான். அதை சுற்றி வளைத்து, திரைக்கதையை குழப்பி, பேய், சாத்தான், பணத்தாசை, நாய், துரத்தல் என பார்வையாளர்களை அயர்ச்சி அடைய வைத்துவிடுகிறார் இயக்குனர். ஒரு நொடி என்ற நல்ல படத்தை கொடுத்தவரா இவர் என்று கேட்க வேண்டியதுள்ளது. இதில் தலைவாசல் விஜய் டாக்டராக வந்து, நடித்து தள்ளி, அவருக்கு ஒன்று நடந்து, அடுத்த பாகம் வரும் என கடைசியில் நம்மை உண்மையாகவே மிரட்டுகிறார்கள். வேணாங்க போதும்.
ஜென்ம நட்சத்திரம் - கண்ணுக்கு எட்டியவரை ஒளி தெரியலை