ஜானகி V vs ஸ்டேட் ஆப் கேரளா (மலையாளம்)
தயாரிப்பு ; காஸ்மாஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் ; பிரவீன் நாராயணன்
நடிப்பு ; சுரேஷ்கோபி, அனுபமா பரமேஸ்வரன், ஸ்ருதி ராமச்சந்திரன், மாதவ் சுரேஷ், திவ்யா பிள்ளை, அஸ்கர் அலி
இசை (பாடல்கள்) ; கிரிஷ் நாராயணன்
இசை (பின்னணி) ; ஜிப்ரான்
ஒளிப்பதிவு ; ரணதீவ்
வெளியான தேதி ; ஜூலை 17, 2025
நேரம் ; 2 மணி 34 நிமிடம்
ரேட்டிங் ; 2.5 / 5
பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனுபமா பரமேஸ்வரன் தனது ஊரில் நடக்கும் திருவிழாவுக்காக வந்தபோது எதிர்பாராமல் அங்குள்ள பேக்கரியை சேர்ந்த சிலரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார். ஆனால் அவரது தந்தையும் ஒரு சில உறவுகளும் இந்த விஷயத்தை மூடி மறைக்க சொல்கின்றனர். ஒரு திடீர் போராட்டத்தில் தந்தை மரணத்தை தழுவ, இதன் காரணமாக காவல் நிலையம் செல்லும் அனுபமா கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிய வர, அதன்பிறகு, தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தகவலை புகாராக கொடுக்கிறார் அனுபமா.
இவர் புகார் கொடுத்த நபர்களின் சார்பில் வழக்கறிஞராக ஆஜராகும் சுரேஷ்கோபி தகுந்த ஆதாரங்களுடன் அவர்கள் மேல் தப்பில்லை என்றும் அனுபமா பாலியல் பலாத்காரமே செய்யப்படவில்லை என்றும் அவர் அதற்கு முன்பே கர்ப்பமாகி அதை கலைக்க முயற்சி செய்திருக்கிறார் என்றும் வாதாடி தன் தரப்பு ஆட்களை விடுவிக்கிறார். இதனால் மனம் நொந்த அனுபமா, நண்பர்களின் வற்புறுத்தலால் மீண்டும் பெங்களூருவுக்கு வேலைக்கு திரும்புகிறார்.
அதன் பிறகு தான் புதிதாக கிடைக்கும் ஒரு ஆதாரம் மூலமாக அனுபமா பலாத்காரம் செய்யப்பட்டார் என்கிற உண்மை சுரேஷ்கோபிக்கு தெரிய வருகிறது. இப்போது அனுபமாவுக்கு நியாயம் பெற்று தர வேண்டும், அதே சமயம் தன்னாலும் இந்த வழக்கில் வாதாட முடியாது என்பதற்காக வேறு ஒரு முயற்சியை கையில் எடுக்கிறார் சுரேஷ்கோபி. அது சரியாக ஒர்க் அவுட் ஆனதா? அனுபமாவின் இந்த நிலைக்கு காரணமான நபர் யார்? இறுதியாக நீதிமன்றத்தில் அரசாங்கத்தையே உலுக்கும் விதமாக அனுபமா வைக்கும் கேள்வி என்ன என்பது மீதிக்கதை.
இளம்பெண் பாலியல் பலாத்காரம், அதன் பின்னணியில் மறைந்துள்ள மர்மம், நீதிமன்ற வாதங்கள் மூலமாக வெளிச்சத்திற்கு வரும் உண்மை என இதற்கு முன்பே பல படங்கள் வந்திருக்கின்றன என்றாலும் இதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அப்படி ஒரு குற்றமே நடக்கவில்லை என படத்தின் ஹீரோ சுரேஷ்கோபியே வாதாடுவது உண்மையிலேயே அதிர்ச்சி தான். படம் பார்க்கும் நமக்கும் அதுதான் சரி என்றும் தோன்றுகிறது.
அதேசமயம் சந்தர்ப்ப சாட்சியங்களால் தான் தவறாக வழி நடத்தப்பட்டதை உணர்ந்து அதற்கு பரிகாரம் தேட அவர் கையாளும் மாற்று வழி அவருடைய ஹீரோயிசத்தை குறைக்கவே செய்கிறது. ஆனாலும் குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒரு அதிரடியான சண்டைக் காட்சி ஒன்றை அவருக்கு கொடுத்து அதை சரிப்படுத்தி இருக்கிறார்கள். நீதிமன்றத்தில் வாத, எதிர்வாதம் பண்ணும் சுரேஷ்கோபியை வசனம் பேசுவதில் அடித்துக்கொள்ள இன்னும் ஒரு ஆள் இப்போது வரை வரவில்லை என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பெண்ணாக அனுபமா பரமேஸ்வரன். படம் முழுவதும் பெரும்பாலும் சோகமே உருவாக வலம் வருகிறார். நீதிமன்றத்தில் தனக்கு எதிராகவே குற்றம் திரும்பும்போது குமுறுவதும், தான் யாரால் பாதிக்கப்பட்டோம் என்கிற உண்மை தெரிய வரும்போது கதறுவதும் என பொருத்தமான நடிப்பையும் வெளிப்படுத்த தவறவில்லை.
இவர்கள் தவிர அனுபமாவுக்கு உதவி செய்ய நினைக்கும் போலீஸ்காரராக வரும் அஸ்கர் அலி, துவக்கத்தில் இருந்தே அனுபமாவுக்கு பக்க துணையாக உதவி செய்யும் மாதவ் சுரேஷ் (சுரேஷ்கோபியின் மகன்), அவரது சகோதரி திவ்யா பிள்ளை சுரேஷ்கோபியின் சகோதரியாக வரும் இன்னொரு வழக்கறிஞர் ஸ்ருதி ராமச்சந்திரன் என எல்லோரும் தங்களது கதாபாத்திரங்களை நிறைவாக செய்திருக்கின்றனர்.
அந்த திருவிழா சண்டைக்காட்சி ரசிகர்களுக்கு ஒரு போனஸ் தான். ரணதீவின் ஒளிப்பதிவும் ஜிப்ரானின் பின்னணி இசையும் படத்திற்கு விறுவிறுப்பு கூட்டுகின்றன.
அனுமதி இல்லாமலேயே தன்னை மீறி நடக்கும் பலாத்காரத்தால் உருவாகும் கருவுக்கு சம்பந்தப்பட்ட பெண் தான் பொறுப்பு ஏற்க வேண்டுமா என்கிற கேள்வியை முன்வைத்து படத்தை நகர்த்தி சென்று இருக்கிறார் இயக்குனர் பிரவீன் நாராயணன். ஆனால் இடைவேளைக்கு பின் படம் ஆமை வேதத்தில் நகர்வதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். குறிப்பாக அனுபமா பரமேஸ்வரன் சம்பந்தப்பட்ட பல சோக காட்சிகளை தயவு தாட்சண்யம் பார்க்காமல் நீக்கி இருந்தால் படம் இன்னும் கிரிப்பாக இருந்திருக்கும்.
JSK - அப்டேட் செய்யப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம்