மேலும் விமர்சனம்
காட்டி
9 days ago
காந்தி கண்ணாடி
9 days ago
லோகா சாப்டர் 1 சந்திரா (மலையாளம்)
9 days ago
ஹிருதயபூர்வம் (மலையாளம்)
9 days ago | 1
தயாரிப்பு : கவுரி சங்கர் ரவிச்சந்திரன், ஆனந்த் பொன்னுசாமி
இயக்கம் : எஸ்.எஸ்.முருகராசு
நடிப்பு : விஜய்கவுரிஷ், ஆதர்ஷ், ஸ்மேகா, கொங்கு மஞ்சுநாதன், மணிமேகலை
இசை : கெவின்
ஒளிப்பதிவு : சதீஷ்குமார் துரைகண்ணு
வெளியான தேதி : ஆகஸ்ட் 29, 2025
நேரம் : 2 மணிநேரம் 03 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5
ஈரோடு அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் விஜய்கவுரிசும், ஆதித்யாவும் ப்ரண்ட்ஸ். ஊருக்கு புதிதாக வரும் காலேஜ் ஸ்டூடன்ட் ஸ்மேகாவை ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் லவ் பண்ணுகிறரா்கள். இரண்டு பேரையுமே ஹீரோயின் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த விஷயம் நண்பர்களுக்கு தெரிய வர மோதல் வெடிக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டுபேரை ஹீரோயின் லவ் பண்ண என்ன காரணம்? கடைசியில் யாருக்கு அவர் அல்வா கொடுத்தார்? இதுதான் கடுக்கா படத்தின் கதை. கொங்கு பகுதிகளில் கடுக்கா கொடுப்பது என்றால் ஏமாற்றுவது என அர்த்தமாம். ஸோ, இந்த தலைப்பு. புதுமுக இயக்குனர் எஸ்.எஸ்.முருகராசு இயக்கி உள்ளார்.
தினமும் டிப் டாப்பாக பஸ் ஸ்டாண்ட் போவது, சைட் அடிப்பது, சில சமயம் அடிவாங்குவது என ஜாலியாக இருக்கிறார் ஹீரோ விஜய் கவுரிஷ். எதிர் வீட்டுக்கு ஹீரோயின் வந்ததும் அவரையும் சுற்றுகிறார், லவ் லட்டர் கொடுக்கிறார். அவர் ஓகே சொல்ல, சந்தோஷமாகிறார். 2006ல் கதை நடக்கிறது. லுங்கி கட்டிக்கொண்டு பந்தாவாக அலைவது, கயிறு கட்டிலில் படுத்து உறங்குவது, ரேடியோவில் பாட்டு கேட்பது, காதலிப்பதை வேலையாக வைத்து இருப்பது என ஒரு சராசரி கிராமத்து இளைஞனாக ஸ்கோர் செய்து இருக்கிறார். அவர் காதலை சொல்லும் சீன்கள், நண்பன் காதலிக்கிறான் என தெரிந்து பதறும் சீன்கள், கடைசியில் நண்பனுடன் மோதும் சீன்கள் செம. எந்த ஹீரோயிசமும் இல்லாமல் அவர் பேசுவதும், நடப்பதும், அவரை நம் பக்கத்துவீட்டு பையன் மாதிரி உணர வைக்கிறது.
இன்னொரு நண்பனாக வரும் ஆதர்சும் தன் பங்கிற்கு சிறப்பாக நடித்து இருக்கிறார். வருங்கால மாமனாருடன் சேர்ந்து சரக்கு அடிப்பது, நண்பன் காதலிக்கிறான் என தெரிந்தவுடன் அவனை துரத்தி அடிப்பது என நன்றாக நடித்து இருக்கிறார். கல்லுாரி மாணவியாக வரும் ஸ்மேகா ஹீரோயினுக்கு உரிய பந்தா, பில்டப் இல்லாமல் கொங்கு கிராமத்து பெண்ணாக கலக்கியிருக்கிறார். சின்ன, சின்ன டயலாக், அசைவுகளில் மனதில் நிற்கிறார். ஒரே நேரத்தில் 2 பேரை காதலிக்க நினைக்கும் அவரின் திட்டமும், கிளைமாக்சில் போலீஸ் ஸ்டேஷனில் அவர் பேசுகிற வசனமும் சூப்பர்.
ஹீரோயின் அப்பாவாக பட்டிமன்றம் கொங்கு மஞ்சுநாதன் நடித்து இருக்கிறார். அவரின் கொங்கு பேச்சு, வெள்ளந்தியான நடிப்பு அருமை. இனி, அவரை பல படங்களில் பார்க்கலாம். அவர் மனைவியாக வருபவர், ஹீரோ அம்மாவாக வரும் மணிமேகலை, டீக்கடை தாத்தா, திருப்பூர் நண்பன் என பல கேரக்டர்கள் மனதில் நிற்கின்றன. அனைத்துமே நாம் பல இடங்களில் பார்த்தது மாதிரி இருப்பது இயக்குனரின் திறமை.
இரண்டு நண்பர்கள் காதலிக்கும் ஒரு பெண்ணின் கதை என்றாலும், இந்த வரிசையில் பல படங்கள் வந்திருந்தாலும், கொங்கு கிராமப்புற பின்னணியில் காதல் கதையை, காமெடி கலந்து எதார்த்தமாக நகர்த்தி இருப்பதும், ஈரோடு கிராமப்புற வட்டார ஸ்லாங்கும், சினிமாதனம் இல்லாத நடிகர்களின் நடிப்பும்தான் படத்தை தாங்கி பிடிக்கிறது. அட, ஏதோ புதுசாக இருக்குதே என ரசிக்க வைக்கிறது. தமிழ் சினிமாவில் இப்படியொரு கிராம காதல் கதையை, அதுவும் கொங்கு பின்னணியிலான கதையை பார்த்து பல ஆண்டுகள் ஆச்சே என்று பீல் பண்ண வைக்கிறது. அதேசமயம், படத்தில் அவ்வப்போது வரும் மியூட் கெட்ட வார்த்தை சீன்களை நீக்கி இருக்கலாம். அந்த தலையனை சீன் ரொம்ப ஓவர். சில வட்டார பேச்சு, பழமொழியை டக்கென புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பதும் ம் மைனஸ்.
2006 கிராமத்து வாழ்க்கையை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார். டீக்கடை, பஸ்ஸ்டாண்ட், கிராமத்து வீடுகள் என ஒரு கிராமத்திற்குள் சென்ற வந்த உணர்வை தருகிறது அவரின் ஆங்கிள்கள். கெவின் இசையும், பாடலும் ஓகே ரகம்.
காதல், நட்பு, காமெடி, சண்டை என படம் ஜாலியாக நகர்ந்தாலும், கடைசியில் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை, காதல், காமம் என்ற பெயரில் இளம் பெண்களை ஆண்கள் துரத்துவதை, அதற்கு இப்போதுள்ள பிள்ளைகள் புத்திசாலிதனமாக முடிவு எடுப்பதை 'மாறுபட்ட கோணத்தில்' சொன்னதற்காக பாராட்டலாம். யாரும் எதிர்பாராத பாசிட்டிவ் கிளைமாக்ஸ் டச்சிங். என்னை படிக்க விடுங்க ஆண்களே என்று ஹீரோயின் உணர்ச்சிகரமாக பேசும் வசனம் அனைத்து பெண்கள் குரலாக ஒலிக்கிறது
கடுக்கா - கே.பாக்யராஜ் பாணியிலான காமெடி கலந்த காதல் படம்
9 days ago
9 days ago
9 days ago
9 days ago | 1