உள்ளூர் செய்திகள்

இந்திரா

தயாரிப்பு : ஜேஎஸ்எம் புரடக்சன், எம்பரர் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் : சபரீஷ் நந்தா
நடிப்பு : வசந்த்ரவி, மெஹ்ரீன், அனிகா, சுனில், கல்யாண்
இசை : அஜ்மல் தஸ்சின்
ஒளிப்பதிவு : பிரபு ராகவ்
வெளியான தேதி : ஆகஸ்ட்22, 2025
நேரம் : 2 மணிநேரம் 08 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5

தனது மனைவியை கொடூரமாக கொன்ற வில்லனை கண்டுபிடிக்கும் ஹீரோவின் கதை. இதிலென்ன புதுமை என்கிறீர்களா? ஹீரோ வசந்த் ரவி முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர். ஓவராக சரக்கு அடித்ததால் கண் பார்வையை இழந்தவர். பூட்டிய வீட்டுக்குள் தான் இன்னொரு அறையில் இருக்கும்போதே உள்ளே வந்து மனைவியை கொலை செய்தவனை பார்வையற்ற ஹீரோ எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் ஹைலைட். இதற்கிடையில், வரிசையாக கொலை செய்துவிட்டு அவர்களின் இடது கையை மட்டும் தனியாக துண்டித்துவிடும் வில்லன் சுனிலுக்கும் இந்த கொலைக்கும் என்ன தொடர்பு? அந்த கொலைகளுக்கு என்ன காரணம்? கொலையாளியை எப்படி பிடிபடுகிறார் என்ற கோணத்திலும் கதை நகர்கிறது. கடைசியில் கொலையாளி யார் என்பதை சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் சொல்லும் படம் இந்திரா. புதுமுக இயக்குனர் சபரீஷ் நந்தா இயக்கி இருக்கிறார்.

முதற்பாதி வழக்கமான சீரியல் கில்லர் கொலைகள், சுனிலின் சைக்கோ நடிப்பு, ஹீரோவின் விசாரணை என வழக்கமான பாணியில் நகர்கிறது. இடைவேளைக்குபின் இன்னொரு தளத்தில் கதை பயணிக்கிறது. புதுப்புது கேரக்டர் வரவு, சில சம்பவங்கள் திரைக்கதையை ஸ்பீடு ஆக்குகின்றன. இன்னும் சொல்லப்போனால் முதற்பாதியை விட, பிற்பாதிதான் கதையே. முதற்பாதி கொலையிலும் சரி, பிற்பாதி கதையிலும் சரி நிறைய லாஜிக் மீறல். அவ்வளவு பில்டப் ஆக சுனிலை காண்பிக்கிறார்கள். ஆனால், அவர் ஏன் அப்படி மாறினார், எதற்காக இவ்வளவு கொலைகள் செய்தார் என்பதற்கான வலுவான காரணம் கதையில் கடைசிவரை சொல்லப்படவில்லை. ஆனால், ஜெயிலர் படத்தில் காமெடி ஹீரோவாக மிரட்டிய சுனிலும் நடிப்பும், கோபமும், குடித்துவிட்டு அவர் ஆடுகிற டான்ஸ் செம. முதற்பாதி கதையை அவர்தான் சுமக்கிறார்.

வேலை இழந்த மன அழுத்தம், மனைவியை இழந்து தவிப்பது, கண் பார்வை இல்லாததால் படும் வேதனை, கடைசியில் பல உண்மைகளை உணர்ந்து மிரள்வது என நடிப்பில் பாஸ்மார்க் வாங்குகிறார் ஹீரோ வசந்த்ரவி. ஆனாலும், சில இடங்களில் ஓவர் ரியாக்சனை தவிர்த்து இருக்கலாம்.

ஹீரோயின் அழகாக இருக்கிறார். சில சீன்களில் வந்து செத்து போய்விடுகிறார். இவரை விட பிற்பாதியில் வரும் அனிகா நடிப்பில் கலக்குகிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் கல்யாண் படம் முழுக்க நான் கறாரான ஆள் என சொல்லிக்கொண்டே இருக்கிறார். இடைவேளைக்குபின் வரும் அனிகா சம்பந்தப்பட்ட காதல் கதை, அவர் காதலனாக வரும் சுமேஷ் மூர் நடிப்பு, அவரின் கோபம் படத்தை இன்னொரு தளத்துக்கு கொண்டு செல்கிறது. அதுதான் கதையின் முக்கியமான கரு என்பதால் முழுமையாக வெளியே சொல்ல முடியாது. ஆனாலும், சுமேஷ் மூரின் சில செயல்பாடுகள் சினிமாதனமானவை. இப்படியெல்லாம் ஒரு வீட்டில் நடக்குமா என்று சிரிக்க வைக்கிறது. ஏம்பா, அவ்வளவு பெரிய அபார்ட்மென்ட்டில் சிசிடிவி கேமரா சரியாக இருக்காதா என கேள்வியும் எழுகிறது.

அபார்ட்மெண்டில் நடக்கும் திரில்லர் காட்சிகளை பிரபு ராகவ் கேமரா லைவ் ஆக காண்பிக்கிறது. சுனில் சம்பந்தப்பட்ட சீன்களிலும் கேமரா டோன் நச். அஜ்மல் பாடல் ஓகே. பின்னணி இசை பல இடங்களில் பக்காவாக செட் ஆகி, காட்சியை மெருகேற்றுகிறது

படத்தின் பெரும்பகுதி ஒரு அபார்ட்மென்ட், போலீஸ் விசாரணையிலேயே நகர்வது சலிப்பை ஏற்படுத்துகிறது. சுனில் கேரக்டரும் பாதியில் காணாமல் போகிறது. அவர் செய்கிற கொலைகளுக்கும் சரியான காரணம் சொல்லப்படவில்லை. சரி, கிளைமாக்சில் ஏதோ பெரிய விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தால், பார்ட் 2வுக்கு லீடு கொடுத்துவிட்டு படத்தை ஒரு அழுத்தம், சுவாரஸ்யம் இல்லாமல் முடிக்கிறார் இயக்குனர். திரில்லர் கதையை விரும்புகிறவர்களுக்கு இந்திரா கொஞ்சம் பிடிக்கும். ஹீரோ பெயர் இந்திரா என்பதால் இந்த தலைப்பு.

இந்திரா - நன்றாக வந்திருக்க வேண்டிய சுமாரான திரில்லர் கதை



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !