உள்ளூர் செய்திகள்

வார் 2

தயாரிப்பு : யஷ் ராஜ் பிலிம்ஸ்
இயக்கம் : அயன் முகர்ஜி
நடிப்பு : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர். கியாராஅத்வானி, அசுதோஷ்ரானா, அனில்கபூர் மற்றும் பலர்
இசை : ப்ரீதம்
ஒளிப்பதிவு : பெஞ்சமின் ஜாஸ்பர்
வெளியான தேதி : ஆகஸ்ட்14, 2025
நேரம் : 2 மணிநேரம் 53 நிமிடம்
ரேட்டிங்: 3 / 5

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராப், வாணி கபூர் நடித்த வார் படம், 2019ல் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி, 475 கோடி வசூலித்து பெரிய வெற்றி பெற்றது. இப்போது அடுத்தபாகமான வார் 2 படத்தை அதே யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ரன்பீர் கபூர், ஆலியாபட் நடித்த பிரம்மாஸ்திரா படத்தை இயக்கிய அயன் முகர்ஜி இயக்கி உள்ளார். ஹிந்தி தவிர, தமிழ், தெலுங்கிலும் வார் 2 வெளியாகி உள்ளது.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, இலங்கை, மியான்மர் உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், செல்வாக்கு படைத்தவர்கள் கலி என்ற ரகசிய கூட்டமைப்பை உருவாக்கி சதி செய்கிறார்கள். இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க பல்வேறு நாசகார வேலைகளை செய்ய நினைக்கிறார்கள். பிரதமரை கொல்ல துடிக்கிறார்கள். இந்திய உளவு அமைப்பான ரா பிரிவு அதிகாரியான ஹிருத்திக் ரோஷனும், ஜூனியர் என்டிஆரும், கியாரா அத்வானியும் அதை எப்படி தடுக்கிறார்கள் என்பது வார் 2 கதை.

ரா அமைப்பில் இருந்து வெளியேறிய ஹிருத்திக் ரோஷன், நம் நாட்டுக்கு எதிரான கலி அமைப்பில் சேருகிறார். ரா பிரிவு அதிகாரியை சுட்டுக் கொல்கிறார். கலி திட்டங்களை தடுக்கவும், ஹிருத்திக் ரோஷனை பிடிக்கவும் ரா பிரிவு திட்டமிடுகிறது. அந்த ஆபரேசனில் இளம் அதிகாரியான ஜூனியர் என்டிஆரும், சுட்டுக்கொல்லப்பட ரா பிரிவு தலைவர் அசுதோஷ் ராணா மகளான கியாரா அத்வானியும் சேருகிறார்கள். இவர்களை அனில் கபூர் வழி நடத்துகிறார். ஹிருத்திக் ரோஷன் தனது குருவான அசுதோஷ் ராணாவை ஏன் கொன்றார். சின்ன வயதில் இருந்தே நண்பர்களாக இருந்த ஹிருத்திக் ரோஷனும், ஜூனியர் என்.டி.ஆரும் ஏன் பிரிந்தார்கள். ஹிருத்திக் ரோஷனை ஜூனியர் என்.டி.ஆர் கொல்ல துடிப்பது ஏன்? ஹிருத்திக், கியாரா அத்வானி காதல் கை கூடியதா? கலி என்ற அந்த அமைப்பு என்ன செய்கிறது என்பதை கிட்டத்தட்ட ஜேம்ஸ்பாண்ட் படங்கள் மாதிரி கலர்புல்லாக ஆக் ஷன், கொஞ்சம் கவர்ச்சி, நிறைய நாட்டுப்பற்று கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர் அயன் முகர்ஜி. யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்து இருப்பதால் செலவை பற்றி கவலைப்படாமல் அவ்வளவு பிரமாண்டமாக எடுத்து இருக்கிறார்கள்.

முதன்மை ஹீரோவான ஹிருத்திக் ரோஷனுக்கு நெகட்டிவ் ஆக வந்து, பின்னர், தேசப்பற்று மிக்க வீரனாக மாறுகிற கேரக்டர். அவர் ஏன் நாட்டுக்கு எதிராக செயல்படும் அமைப்பில் சேர்க்கிறார். அவர் லட்சியம், இலக்கு, தன்னை கொல்ல நினைக்கும் ஜூனியர் என்.டி.ஆர் மீது காட்டு அன்பு என்பது போன்ற விஷயங்கள், அவரை ஹீரோயிசத்துடன் இருக்க வைக்கின்றன. ஜேம்ஸ்பாண்ட் மாதிரி வெளிநாடுகளில் நடக்கும் கார் சேசிங், விமான சண்டை, போட் ஆக் ஷன், கிளைமாக்சில் நடக்கும் பனிமலை பைட்டில் பின்னி எடுத்து இருக்கிறார். அவரின் உடல்வாகு, பேச்சு, நடிப்பு, ஆக் ஷன், டான்ஸ் அனைத்தும் சூப்பர். நல்லவனாக இருந்து கடைசியில் வேறு மாதிரி மாறுகிற கேரக்டர் ஜூனியர் என்.டி.ஆருக்கு, அவரும் ஆக் ஷன், டான்ஸ், கிளைமாக்சில் உருக்கமான நடிப்பில் கலக்கியிருக்கிறார்.

இரண்டு ஹீரோவுக்கும் சமமான வாய்ப்பு தந்து படத்தை ஸ்பீடு ஆக்கி இருக்கிறார் இயக்குனர். இருவருக்குமான போட்டி சண்டை, எமோஷனல் சீன்களும் நச். இவர்களை தவிர, ஹீரோயினாக வரும் கியாரா அத்வானிக்கு நல்ல பைட், கவர்ச்சியான ஒரு பாடல் காட்சி இருக்கிறது. கடைசியில் அவர் பிரதமரை காக்க நடத்தும் பைட் செம. உளவுபிரிவு அதிகாரியாக வரும் அசுதோஷ் ராணா, அனில் கபூரும் நல்ல நடிகர்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்

வார் 2வின் ஹை லைட்டே படத்தின் ஆக் ஷன் காட்சிகளும், வெளிநாடு லொகேஷன்கள் தான். ஆரம்பமே ஜப்பானில் மிரட்டலாக தொடங்குகிறது. அடுத்து ஸ்பெயின், இத்தாலி, அரபு நாடுகள், சுவீஸ் என கதை செல்கிறது. இந்தியாவிலும் பல அழகான லொகேஷன்களில் விறுவிறு காட்சிகளை எடுத்து இருக்கிறார்கள். இந்த கலர்புல் காட்சிகளும், சேசிங், சண்டைக்காட்சிகளுமே படத்துக்கு பெரிய பிளஸ். அதை அற்புதமாக படமாக்கி கொடுத்து இருக்கிறார் இயக்குனர் பெஞ்சமின் ஜாஸ்பர். இரண்டு ஹீரோ சேர்ந்து ஆடுகிற பாடல் எனர்ஜி. அந்த காதல் பாடல் ஹாட்.

கதையும், கதாபாத்திரங்களும் பல இடங்களில் நாட்டுப்பற்றை பேசுகின்றன, குடும்பம், பதவி, புகழ், பணத்தை விட நாட்டு நலனே முக்கியம் என செயல்படுகின்றன. தவறாக செயல்படும் அரசியல்வாதிகளையும் காண்பித்து இருக்கிறார்கள். இதை ஒரு ஸ்பை கதையாக கமர்ஷியலாக சொல்லியிருப்பது ரசிக்க வைக்கிற. நாட்டை அழிக்க நினைப்பவர்களை அழிப்போம், உயிரை கொடுத்தாலும் நாட்டை காப்போம் என்ற இயக்குனரின் கருவுக்கும், அதை உணர்ந்து நடித்தவர்களின் நடிப்புக்கும் சல்யூட்.

இடைவேளைக்குபின் கொஞ்சம் கதை தடுமாறுகிறது. ரா அதிகாரி பாடல் காட்சியில் பிகினியில் வருகிறார். ஹிர்த்திக், ஜூனியர் என்டிஆர் சம்பந்தப்பட்ட அந்த பிளாஷ்பேக் காட்சிகள் கொஞ்சம் நீளம், பிரதமரை கொல்ல திட்டமிடுகிற சீன்களில் அவ்வளவு லாஜிக் மீறல், பிரதமருக்கு எதிரான சதி திட்ட சீன்களில் நம்பகதன்மை குறைவு. குறைகள் இருந்தாலும் வார் 2 உண்மையிலே ஹாலிவுட் படங்கள், ஜேம்ஸ்பாண்ட் கதைகள் பார்த்த தன்னிறைவை தருகிறது. அதிலும் கிளைமாக்சில் பாகிஸ்தான், ரஷ்யா, மியான்மர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கே சென்று எதிரிகளை ஹீரோக்கள் அழிக்கிற சீன்கள் மாஸ். ஹிந்தி படமாக இருந்தாலும் தமிழ் டப்பிங் செட்டாகி உள்ளது. ஜாலியாக ஒரு ஆக் ஷன், ஸ்பை படம் பார்க்க விரும்புகிறவர்களை வார் 2 ஏமாற்றாது.

வார் 2 - இது ஜேம்ஸ்பாண்ட் பாணியிலான பாலிவுட் படம்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !