உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / குற்றம் புதிது

குற்றம் புதிது

தயாரிப்பு : ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ்
இயக்கம் : நோவா ஆம்ஸ்ட்ராங்
நடிப்பு : தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி, மதுசூதனன் ராவ், பிரியதர்ஷினி ராஜ்குமார், ராம்ஸ்
இசை : கரண் பி கிருபா
ஒளிப்பதிவு : ஜேசன் வில்லியம்ஸ்
வெளியான தேதி : ஆகஸ்ட் 29, 2025
நேரம் : 1 மணிநேரம் 57 நிமிடம்
ரேட்டிங்: 2.5 / 5

போலீஸ் அசிஸ்டென்ட் கமிஷனர் மதுசூதனன் ராவ் மகள் சேஷ்விதா கனிமொழி ஒரு நாள் இரவில் கடத்தி, கொல்லப்படுகிறார். புட் டெலிவரி பாய் ஹீரோ தருண் விஜய் மீது போலீசுக்கு சந்தேகம் வர, அவரை விசாரிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஆட்டோ டிரைவர் ராம்ஸ்தான் கொலையாளி என்று முடிவு செய்து, ஹீரோவை அப்பாவி என நினைத்து விடுவிக்கிறார்கள். சில நாட்கள் கழித்து அந்த கொலையை நான்தான் செய்தேன். இன்னும் 2 கொலை செய்து இருக்கிறேன் என போலீசில் சரண்டர் ஆகிறார் ஹீரோ. அவருக்கு மனநிலை பாதிப்போ என நினைக்கிற வேளையில், சேஷ்விதா உயிரோடு மீட்கப்படுகிறார். என்ன நடக்கிறது. என்ன நடந்தது? ஹீரோ உண்மையில் நல்லவாரா? கெட்டவரா? என்ற கேள்வியுடன் கிரைம் திரில்லர் ஜானரில் நகரும் படம் குற்றம் புதிது.

ஒருநாள் இரவில் வீட்டுக்கு வரும் வழியில் சேஷ்விதா காணாமல் போவதில் இருந்து கதை தொடங்கிறது. மகளை காணாமல் தவிக்கும் அப்பா மதுசூதன்ராவ் தனது போலீஸ் டீம் வைத்து விசாரணையை தொடங்குகிறார். கதை விரிகிறது. பாசக்கார அப்பாவாக, மகள் கொலைக்கு காரணத்தை கண்டுபிடிக்கிற அதிகாரியாக சிறப்பாக நடித்து இருக்கிறார், கோலிசோடா உட்பட பல படங்களில் வில்லனாக பார்த்த மதுசூதனன்ராவ். அவர் மகளாக வரும் ஹீரோயின் சேஷ்விதா உடல்மொழியும், நடிப்பும் படத்துக்கு பெரிய பலம். மார்கன், பரமசிவன் பாத்திமா படங்களில் நடித்த சேஷ்விதா இடைவேளைக்கு முன்பு பாசக்கார மகளாகவும், கிளைமாக்சில் இன்னொரு பரிமாணத்திலும் நடித்து சபாஷ் வாங்குகிறார். அப்பா மகள் பாடல் காட்சியிலும், காதல் காட்சிகளிலும் கியூட் ஆக இருக்கிறார்.

புதுமுக ஹீரோ தருண் விஜயின் அந்த அப்பாவிதமான முகம், அவர் பேசுகிற டயலாக், மனநிலை பாதிக்கப்பட்டராக நடிப்பது, கடைசியில் வேறுமுகத்தை காண்பிப்பது கதைக்கு பிளஸ் ஆக இருக்கிறது. சரண்டர் ஆகும்போது சொல்லும் கொலைக்கதைகள், கோர்ட்டில் பேசும் டயலாக், கிளைமாக்ஸ் நடிப்பு ஆகியவை இயக்குனர் அவரை நன்கு வேலை வாங்கியிருப்பதை காண்பிக்கிறது.

வில்லனாக வரும் நான் மகான் அல்ல ராம்ஸ் கொஞ்ச சீன்களில் வந்தாலும் அக்மார்க் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். ஹீரோ அப்பாவாக வரும் நிழல்கள் ரவி, ஹீரோயின் அம்மாவாக வரும் பிரியதர்ஷினி ராஜ்குமார் பாசத்தில் உருகி இருக்கிறார்கள். கொலை விசாரணையை கண்டுபிடிக்க வரும் போலீசார், குறிப்பாக, பெண் போலீசார் ஸ்மார்ட் ஆக இருக்கிறார்கள்.

போலீஸ் விசாரணை காட்சிகள், கொலை நடக்கும் அந்த சின்ன அறை காட்சிகளில் ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ் திறமை தெரிகிறது. அப்பா, மகள் பாசப்பாடலை அழகாக கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் கரண் பி கிருபா.

ஒரு கொலை, அடுத்து 2 கொலைகள், அதற்கடுத்து டுவிஸ்ட் என முதற்பாகம் வேகமாகவும், விறுவிறுப்பாக நகர்கிறது. ஹீரோ கேரக்டர் வடிவமைப்பு, அவரின் செயல்பாடுகள் படத்தில் ஏதோ சொல்ல வருகிறார்கள் என நினைக்க தோன்றுகிறது. கடைசி அரை மணி நேரம் படத்தின் ஜானரே வேறுமாதிரி மாறி, பல கேள்விகளுக்கு விடையை சொல்கிறது. இந்தவகை திரைக்கதை, டுவிஸ்ட், நடிகர்களின் நடிப்பு இயக்குனரின் திறமையை காண்பிக்கிறது. ஆனாலும், திரில்லர் கதைக்கான ஒரு திருப்பதி கிளைமாக்சில் இல்லை. இவ்வளவு போலீஸ், இவ்வளவு டெக்னாலாஜி, சென்னையில் இவ்வளவு சிசிடிவி கேமராக்கள் இருந்தும் குற்றங்களை இப்படி ஈஸியாக செய்ய முடியுமா என்ற கேள்விக்கு விடை இல்லை. ஒரு விஷயத்துக்காக இதெல்லாம் நடக்கிறது என்று இயக்குனர் சொல்வதை ஏற்கலாம். ஆனால், அதில் நம்பத்தன்மை இல்லை.

நிறைய லாஜிக் மீறல். ஆனாலும், ஒரு மாறுபட்ட கோணத்தில் நகரும் சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்காக, புதுவகை குற்றப்பின்னணிக்காக, சில புதிதான சீன்களுக்காக குற்றம்புதிதை பார்க்கலாம்.

குற்றம் புதிது - கொலை கதைகளில் கொஞ்சம் புதிது



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !