உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / ஹிருதயபூர்வம் (மலையாளம்)

ஹிருதயபூர்வம் (மலையாளம்)

தயாரிப்பு : ஆசிர்வாத் பிலிம்ஸ்
இயக்கம் : சத்யன் அந்திக்காடு
நடிப்பு : மோகன்லால், மாளவிகா மோகனன், சங்கீதா, சங்கீத் பிரதாப், சித்திக், லாலு அலெக்ஸ்
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு : அனு மூத்தேதத்
வெளியான தேதி : ஆகஸ்ட் 28, 2025
நேரம் : 2 மணிநேரம் 31 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5

கேரளாவில் ரெஸ்டாரன்ட் நடத்தி வரும் மோகன்லால் 40 வயதை கடந்தும் திருமணமாகாதவர். அக்காவும், அக்கா கணவர் மட்டுமே சொந்தம். இந்நிலையில் அவர் இதயம் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட புனேயில் வசித்த விபத்தில் உயிரிழந்த ஒரு ராணுவ அதிகாரியின் இதயம் மோகன்லாலுக்கு பொருத்தப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சில நாட்கள் கழித்து இதய தானம் செய்தவரின் மகளான மாளவிகா மோகனன் கேரளாவிற்கே மோகன்லாலை தேடி வந்து தனது திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது என்றும், தந்தையின் ஸ்தானத்தில் அங்கே நீங்கள் நிற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்.

ஆரம்பத்தில் மோகன்லால் மறுத்தாலும் தனது உதவியாளர் சங்கீத் பிரதாப்புடன் அங்கே செல்கிறார். ஆனால் மணமகனுடன் ஏற்பட்ட திடீர் கருத்து வேறுபாட்டால் கடைசி நிமிடத்தில் நிச்சயதார்த்தத்தை ரத்து செய்கிறார் மாளவிகா மோகனன். அப்போது ஏற்படும் தள்ளுமுள்ளுவில் சமாதனம் செய்யப்போன மோகன்லாலுக்கும் முதுகில் பலமான அடிபட, இரண்டு வாரங்களுக்கு மேல் அவர் பயணம் செய்ய முடியாமல் அங்கேயே தங்கி சிகிச்சை எடுக்கும் சூழல் ஏற்படுகிறது.

இந்த நிலையில் ஒரு பக்கம் மாளவிகா மோகனன் இவர் மீது செலுத்தும் அன்பு மோகன்லாலுக்குள் சலனத்தை ஏற்படுத்துகிறது. இன்னொரு பக்கம் மாளவிகாவின் அம்மாவான சங்கீதா, தன் கணவரின் அடக்குமுறை குணத்தையே பார்த்து வந்த நிலையில் அவர் இதயம் பொருத்தப்பட்ட மோகன்லாலின் மென்மையான குணத்தை பார்த்து ஈர்க்கப்படுகிறார். இந்த குழப்பமான சூழலில் கடைசியில் மோகன்லால் என்ன முடிவு எடுத்தார் என்பது கிளைமாக்ஸ்.

படம் முழுவதும் எந்த அதிரடியும் இல்லாமல் சாதாரண அண்டர் பிளே நடிப்பை மட்டுமே வழங்கி இயல்பாக நடித்துவிட்டு போகிறார் மோகன்லால். மாளவிகா மோகனனுடன் நெருக்கம் ஏற்படும்போது குழப்பத்துடன் தடுமாறுவதும், சங்கீதா தன்னை நோக்கி நெருங்கி வரும்போது தவிப்பதும் என ஏதோ இருதலை காதலில் மாட்டிக் கொண்ட இளைஞனின் தவிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் தொடரும் போன்ற படங்களில் நூறு சதவீதத்திற்கு மேல் உழைப்பை கொடுத்து நடித்த மனிதரிடம் வெறும் இருபது சதவீதம் மட்டுமே வேலை வாங்கி இருக்கிறார்கள் என்பது தான் வேதனையான விஷயம்.

மாளவிகா மோகனன் ரொம்பவே அழகாக தெரிகிறார். தந்தையை ரொம்பவே நேசிக்கும் அவர், தந்தையின் இதயம் பொருத்தப்பட்டது என்பதற்காக மோகன்லாலுக்கு கொடுக்கும் மரியாதையும் அன்பும் மிக நேர்த்தி. நீண்ட நாளைக்கு பிறகு பூவே உனக்காக சங்கீதா.. மாளவிகாவின் அம்மாவாக பொருத்தமான கதாபாத்திரம்.. இவரும் மாளவிகாவும் மோகன்லாலாலை மாறி மாறி அன்பால் திணறடிக்கும் காட்சிகள் எல்லாம் அக்மார்க் காமெடி.

பிரேமலு நடிகர் சங்கீத் பிரதாப்புக்கு இதில் துவக்கத்தில் இருந்து கிளைமாக்ஸ் வரை மோகன்லாலுடன் கூடவே பயணிக்கும் கதாபாத்திரம். மோகன்லாலுடன் சேர்ந்து, இல்லை இல்லை.. இவருடன் சேர்ந்து மோகன்லால் செம ஜாலியாக கலாட்டா செய்து இருக்கிறார். மோகன்லாலின் அக்கா கணவராக வரும் லொடலொடவென பேசும் சித்திக், மோகன்லாலிடம் அடிக்கடி வந்து என் நண்பனின் இதயம் என்னை பற்றி ஏதாவது சொல்கிறதா என கேட்கும் இறந்து போன ராணுவ அதிகாரியின் நண்பரான லாலு அலெக்ஸ் ஆகியோர் கொஞ்சம் கவனம் ஈர்க்கிறார்கள்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் வடநாட்டு பாணியிலான நிச்சயதார்த்த பாடல் துள்ளல் நடனம் போட வைக்கும். மெலடி பாடல்களிலும் கதையை நகர்த்த உதவியிருக்கிறார் ஜஸ்டின். புனேயின் அழகை விதவிதமாக தனது கேமராவில் சுருட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் அனு மூத்தேதத்.

இயக்குனர் சத்தியன் அந்திக்காடுவின் படங்கள் பெரும்பாலும் உணர்வு பூர்வமான படங்களாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் கதை என்கிற அஸ்திவாரம் சரியாக இருக்க வேண்டும் இல்லையா ? இத்தனைக்கும் இளைய தலைமுறையான அவரது மகன் அகில் சத்யன் தான் இந்த படத்திற்கு கதை எழுதி இருக்கிறார். ஆரம்பத்தில் அழகாக எதிர்பார்ப்புடன் சுவாரஸ்யமாக நகர ஆரம்பிக்கும் கதை, மகளாக பார்க்க வேண்டிய மாளவிகா மோகனனுடன் மோகன்லால் காதல் வயப்படுவது போல காட்சிகள் துவங்கும் போதே பெட்ரோல் ட்ரை ஆன கார் போல சுண்டி சுண்டி நகர ஆரம்பிக்கிறது. கூடவே சங்கீதாவின் ரொமான்ஸ் சேர்ந்து கொள்ள எங்கேயோ போக வேண்டிய கதை ஏதோ ஒரு முட்டு சந்துக்குள் போய் சிக்கிக் கொண்ட உணர்வு தான் ஏற்படுகிறது.

சீனியர் இயக்குனரான சத்யன் அந்திக்காடு எப்படி மோகன்லால், மாளவிகா சம்மந்தமான காட்சிகளில் கோட்டை விட்டார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. என்னிடம் கதையே கேட்காமல் ஹீரோ நடித்தார் என சில இயக்குனர்கள் பெருமையாக பேசுவது உண்டு. மோகன்லாலும் அப்படித்தான் இந்த படத்தில் நடித்திருக்க வேண்டும்.

ஹிருதயபூர்வம் - ஹார்ட் அட்டாக்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Parthasarathy, Plainsboro
2025-08-31 03:47:20

கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா?