வாசகர்கள் கருத்துகள் (1)
இது ஒரு பவர் பாய்ண்ட் presentationமாதிரி உள்ளது இதற்கு இவ்ளோ மார்க்?
தயாரிப்பு : வேபேரர் பிலிம்ஸ் (துல்கர் சல்மான்)
இயக்கம் : டொமினிக் அருண்
நடிகர்கள் : கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லேன், சாண்டி, சன்னி வெய்ன், டொவினோ தாமஸ், துல்கர் சல்மான்
இசை : ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி
வெளியான தேதி : ஆகஸ்ட் 28, 2025
நேரம் : 2 மணிநேரம் 31 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5
வெளிநாட்டில் இருந்து கேரளா வரும் கல்யாணி தனியாக வீடு எடுத்து தங்குகிறார். பகலில் வெளியே வராமல் இரவில் மட்டும் வேலைக்கு சென்று வருகிறார். அவரது எதிர் பிளாட்டில் நண்பர்களுடன் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர் நஸ்லேன், கல்யாணியை பார்த்ததும் காதலில் விழுகிறார். இந்த சமயத்தில் நகரத்தில் அவ்வப்போது மனித உறுப்புகளுக்காக பலர் கடத்தப்படுகின்றனர். அதில் தொடர்புடைய ஒருவனை பெண் விஷயம் ஒன்றில் அடித்து காயப்படுத்துகிறார் கல்யாணி. அதனால் தங்களது கடத்தல் லிஸ்டில் கல்யாணியையும் சேர்த்து அந்த கும்பல் கடத்த முயற்சிக்கிறது.
அப்போதுதான் கல்யாணி விஸ்வரூபம் எடுத்து தன்னை கடத்திய இருவரையும் கொல்கிறார். ஏதேச்சையாக கல்யாணியை பின் தொடர்ந்து வரும் நஸ்லேன் இதை பார்த்து அதிர்ச்சி ஆகிறார். அப்போதுதான் கல்யாணி ஒரு மோகினி (யட்சி) என்கிற உண்மை நஸ்லேனுக்கு தெரிய வருகிறது. இந்த உண்மையை யாரிடமும் சொல்லாமல் தன்னிடம் இருந்து விலகிச் செல்லும்படி நஸ்லேனை எச்சரிக்கிறார் கல்யாணி.
அதேசமயம் இன்னொரு பக்கம் போலீஸ் அதிகாரியான சாண்டி, கல்யாணியால் கொலை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி விசாரிக்கும் போது கல்யாணியின் மீது அவருக்கு சந்தேகம் ஏற்படுகிறது. அவர் கொடுத்த தகவலின் பேரில் கிட்டத்தட்ட கல்யாணியையும் நஸ்லேன் மற்றும் அவரது நண்பர்களையும் தீவிரவாதிகள் போல் சித்தரித்து சுட்டுக் கொல்லும் முயற்சியில் போலீஸ் படை இறங்குகிறது. இதில் கல்யாணியின் தாக்குதலுக்கு ஆளான சாண்டியும் கல்யாணியை போலவே ட்ராகுலா சக்தியை பெறுகிறார். இதன் பிறகு இவர்களுக்குள் ஏற்படும் மோதல், அதில் யார் வெற்றி பெற்றார்கள், கல்யாணி தன்னை தேடும் போலீஸ் படையிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார், தன்னால் சிக்கலுக்கு ஆளான நஸ்லேனை அவர் காப்பாற்றினாரா என்பது மீதி கதை..
சூப்பர் உமன் கதையம்சத்துடன் வெளியாகும் படம் என ஆரம்பத்திலிருந்தே இந்த படம் குறித்து செய்திகள் வெளியானதால், ஆர்வத்துடன் படம் பார்க்க சென்றவர்களுக்கு அது சூப்பர் உமன் அல்ல, மோகினி (யட்சி) என்று தெரிய வந்ததும் ஒரு சிறு ஏமாற்ற உணர்வு ஏற்படுவது உண்மை....
ஹீரோ, மாநாடு படங்களில் நாம் பார்த்த கல்யாணியா இது என்று ஆச்சரியப்படும் வகையில், உருவத்திலும், நடிப்பிலும் ஏகப்பட்ட மாற்றங்களுடன் கலக்கியிருக்கிறார். படத்தில் அதிகம் பேசாமல், உடல்மொழியால் பேசியிருக்கிறார். பெரும்பாலும் இறுகிய முகத்துடனே படம் முழுவதும் காட்சியளித்து, இதில் கூடுதலாக ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார் கல்யாணி. சொல்லப்போனால் பிளாஷ்பேக்கில் சொல்லப்படும் வரலாற்று காட்சிகளைத் தவிர பெரும்பாலும் எங்கும் ஒரே கல்யாணி மயம் தான். கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் ஆக்ஷன் ஹீரோக்களுக்கு நிகராக சண்டை போடுகிறார். அதேசமயம் கல்யாணி எதற்காக கேரளா வருகிறார், அவரிடம் இருக்கும் சக்தியை அவர் எந்த விதமான நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துகிறார் என இறுதிவரை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
நாயகன் நஸ்லேன் அந்த வயதுக்கே உரிய துறுதுறுப்புடன் கல்யாணியை காதலிப்பதற்காக ஆர்வம் காட்டுவதும் பிறகு அவர் யார் என்று தெரிந்த பிறகு காட்சிக்கு காட்சி பயந்து நடுங்குவதும் என ஒரு சராசரி இளைஞனின் மனநிலையை அழகாக பிரதிபலித்துள்ளார். ஆக்ஷன் ஏரியாவை கல்யாணியே கையில் எடுத்துக் கொண்டதால் நஸ்லேனுக்கு அதை கைகட்டி வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு மட்டுமே தரப்பட்டுள்ளது.
ரப் அண்ட் டப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக வரும் சாண்டி முதன்முறையாக ஒரு முழு நீள கதாபாத்திரத்தில் அதுவும் மலையாள திரையுலகில் முதல் அடி எடுத்து வைத்துள்ளார். போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு அவர் கச்சிதமாக பொருந்துகிறார். ஆனால் அவர் தன்னுடைய உயரதிகாரி மீதும் கோபப்படுகிறார்.. சாதாரண மக்கள் மீதும் கோபப்படுகிறார் என்பதால் அவர் நல்லவரா, கெட்டவரா என ஆரம்பத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து குழப்பமே ஏற்படுகிறது. அது தெளிவதற்கு முன்பாகவே அவரும் ஒரு ட்ராகுலா ஆக மாறி விடுவதால் கிளைமாக்ஸ் காட்சியில் எல்லாம் நாளைய மனிதன் அஜய் ரத்தினத்தையே ஞாபகப்படுத்துகிறார்.
எதிர்பாராமல் கிளைமாக்ஸுக்கு கொஞ்சம் முன்னதாக கல்யாணியை பாதுகாப்பதற்காக களத்தில் இறங்கி ஒரு சண்டைக்காட்சியை செய்துவிட்டு பை சொல்லி விட்டு போகிறார் நடிகர் டொவினோ தாமஸ். அதேபோல என்ட் கார்டு போடுவதற்கு முன்பாக தன் பங்கிற்கு தானும் ஒரு கத்தி சண்டை காட்சியில் தலை காட்டுகிறார் துல்கர் சல்மான். பின்னே, படத்தின் தயாரிப்பாளர் இல்லையா? இதுவாவது பரவாயில்லை. கூலி படத்தில் படம் முழுதும் மிரட்டிய சவுபின் சாஹிர் இதில் கூலாக இருபது வினாடிகள் மட்டுமே திரையில் வந்து எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் செல்கிறார்.. எல்லாம் கேமியோ படுத்தும் பாடு.
படத்தின் விறுவிறுப்புக்கு துணை நின்று இருப்பவர்கள் என்றால் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி இருவரும் தான்.. குறிப்பாக படம் துவங்கிய கால் மணி நேரம் வரை படம் நடக்கும் கதைக்களம் வெளிநாடோ என நினைத்துக்கொண்டு இருக்கையில் அது கேரளா தான் என்று தெரியவரும் போது நமக்கு வியப்பு மேலிடுகிறது. காரணம் அதுவரை ஏதோ வெளிநாட்டில் நடக்கும் காட்சிகள் போல அழகாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி. அது மட்டுமல்ல படத்தில் கலை இயக்குனரின் பங்களிப்பும் மிகப்பெரியது.
கல்யாணிக்கு ஒரு அதீத சக்தி இருக்கிறது என்பது நமக்கு தெரிந்தவுடன் அவர் அதை எப்போது எப்படி வெளிப்படுத்தப் போகிறார் என்கிற ஆவல் இயல்பாகவே எழுகிறது. ஆனால் சரியான நேரத்தில் அவரது அந்த ஸ்பெஷல் பவரை ரசிகர்கள் ரசிக்கும் விதமாக கொடுக்கத் தவறி இருக்கிறார் இயக்குனர் டொமினிக் அருண். அதேபோல கல்யாணி, சாண்டி இருவரும் வடிவேலு காமெடி போல செத்து செத்து விளையாடுவது அட போங்கய்யா என்கிற அலுப்பை தருகிறது. அதேசமயம் புதிய கதை, அடுத்தடுத்த திருப்பங்கள், படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓரளவு போரடிக்காமலும் கதையை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குனர் டொமினிக் அருண். அந்த வகையில் இளைஞர்களை மட்டுமல்ல குழந்தைகளையும் இந்த படம் கவரும்.
லோகா சாப்டர் 1 சந்திரா - மாடர்ன் ஜெகன் மோகினி
இது ஒரு பவர் பாய்ண்ட் presentationமாதிரி உள்ளது இதற்கு இவ்ளோ மார்க்?