உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / காந்தி கண்ணாடி

காந்தி கண்ணாடி

தயாரிப்பு : ஜெய்கிரண்
இயக்கம் : ஷெரிப்
நடிப்பு : கேபிஓய் பாலா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா
இசை : விவேக் மெர்வின்
ஒளிப்பதிவு : பாலாஜி கே ராஜா.
வெளியான தேதி : செப்டம்பர் 5, 2025
நேரம் : 2 மணிநேரம் 09 நிமிடம்
ரேட்டிங்: 3 / 5

தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி வேலை பார்க்கும் பாலாஜி சக்திவேலுக்கு மனைவி அர்ச்சனா மீது அவ்வளவு பாசம். அவரின் ஆசைப்படி, தங்களது 60வது கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்த ஆசைப்படுகிறார். ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தும் கேபிஓய் பாலாவிடம் போய் திருமணத்துக்கான ‛பட்ஜெட்' கேட்கிறார். அவரோ 52 லட்சம் என சொல்லிவிட்டு, இவ்வளவு பணம் அவரிடம் இருக்குமா என சந்தேகப்படுகிறார். ஆனால், சொந்த ஊரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 80 லட்சத்துக்கு விற்றுவிட்டு, அந்த பணத்தை சென்னைக்கு கொண்டு வருகிறார் பாலாஜி சக்திவேல். 60வது திருமண ஏற்பாடுகள் தொடங்குகிற வேளையில் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை மத்திய அரசு அமல்படுத்துகிறது. பாலாஜி சக்திவேலிடம் இருக்கும் பணத்தை மாற்ற முடியாத நிலை. பணத்தாசையில் பாலாவும் சில வேலைகளை செய்கிறார். தடைகளை மீறி பாலாஜி சக்திவேல், அர்ச்சனா 60வது திருமணம் நடந்ததா? பாலா அதை நடத்தி வைத்தாரா என்பது காந்தி கண்ணாடி கதை. ஷெரிப் இயக்கி இருக்கிறார்.

60வது திருமணத்தை நடத்த ஆசைப்படும் பாலாஜி சக்திவேல், அதை நடத்தி வைக்க முயற்சிக்கும் பாலா என 2 ஹீரோ சப்ஜெட் படம் தான் காந்தி கண்ணாடி படக்கரு. காந்தி என்பது பாலாஜி சக்திவேல் கேரக்டர் பெயருக்கும், கண்ணாடிக்கு என்ன அர்த்தம் என்பதை படத்தின் கடைசியில் சொல்லியிருக்கிறார்கள். மனைவி சமைத்து கொடுக்கும் லெமன் சாதம், தயிர்சாதம், புளி சாதத்தை கூட புகழ்ந்து தள்ளி, மனைவியை 60வது வயதிலும் காதலிக்கிற, பாசத்தால் பொங்குகிற கேரக்டரில் மிக சிறப்பாக நடித்து இருக்கிறார் பாலாஜிசக்திவேல். அதற்கு அவர் சொல்கிற பிளாஷ்பேக் காரணமும் உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது.

ஜமீன் என்று அவரை, கேபிஒய் பாலா டீம் அழைக்கிறது. சில சமயம் மரியாதை இல்லாமல் , கிண்டலாக நடத்துகிறது. அது பற்றி கவலைப்படாமல், தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றும் கேரக்டரில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் கலந்து தம்பி ராமையைா மாதிரி நடித்து இருக்கிறார். குறிப்பாக, பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் கைவசம் இருக்கிற பணத்தை மாற்ற அவர் முயற்சிக்கும் விஷயங்கள் செம. அப்பாவிதனம் கலந்த அவரின் உடல்மொழி, பேசுகிற டயலாக் சில சமயம் ரசிக்க வைத்தாலும், அதுவே ஓவர் டோஸ் ஆகி படத்தை நாடகபாணிக்கு அழைத்து சென்றுவிடுகிறது.

ஹீரோவாக அறிமுகம் ஆகும் பாலா, சிவகார்த்திகேயன் மாதிரி காமெடி பண்ணுவார் என்று நினைத்தால், முதல் படத்திலேயே அழுத்தமான ரோலில் நடித்து இருக்கிறார். பாலாஜி சக்திவேலுக்கும் அவருக்குமான சீன்கள், ஓட்டம், கிண்டல் படத்தின் பிளஸ். கடைசி அரைமணி நேர நடிப்பில் பலரை அழ வைத்துவிடுகிறார் பாலா. அவரிடம் இருந்து இப்படிப்பட்ட கேரக்டர், இந்த நடிப்பை யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். சில சீன்களில் நடிக்காமல் அப்படியே நிற்கிறார். அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

பாலா டீமில் இருக்கிற ஹீரோயின் நமிதா கிருஷ்ணமூர்த்திக்கு அதிகம் வேலையில், ஒரு எமோஷன் காட்சியில் மட்டும் மனதில் நிற்கிறார். பாலாஜி சக்திவேல் மனைவியாக வரும் வீடு அர்ச்சனா பற்றி கேட்கவே வேண்டாம். குறிப்பாக, அந்த சோகமான கிளைமாக்சில் பின்னி எடுத்துகிறார். அவரையும் ஓவர் ஆக்டிங் மீட்டரில் நடிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர். பல இடங்களில் நடிப்பில் செயற்கை தனம். பல சீன்கள் சினிமாதனமாக இருப்பதும், நடிகர்களின் ஓவர் ஆக் டிங்கும் படத்தை நம்மிடம் இருந்து தனிமைப்படுத்துகிறது. பண மதிப்பு இழப்பு நடவடிக்கை குறித்த விஷயங்களில் ஒரு வித அலட்சியம், லாஜிக் மீறல் இருக்கிறது. அந்த முக்கியமான விஷயம் இன்றைய காலத்துடன் ஒட்டாமல் இருப்பதும் படத்தின் மைனஸ்.

விவேக் மெர்வினின் அந்த மேரேஜ் பாடல் ஓகே. பின்னணி இசை படத்தை விறுவிறுப்பாக்கி இருக்கிறது. பாலாஜி கே ராஜா கேமராவில் சென்னையின் தெருக்கள், கிளைமாக்ஸ் பளீச். பாலாஜி சக்திவேல், பாலா, அர்ச்சனா தவிர மற்றவர்களுக்கு நடிக்க வாய்ப்பில்லை. கிளைமாக்சையும் இன்னும் எடிட் செய்து, இன்னும் பீலிங் ஆக எடுத்து இருக்கலாம். பாலாவின் கேரக்டர் பின்னணி, அவர் பணத்துக்காக ஆசைப்படுகிற விஷயங்களில் போதிய விளக்கம் இல்லை.

ஒரு வயதான தம்பதியின் 60வது திருமண ஆசை, அவர்களின் முந்தைய பின்னணி, இப்போதைய நிலை, குழந்தை இல்லாத நிலையில், அந்த வயதிலும் அவர்கள் காட்டுகிற பாசம், புரிதல் ஆகியவை படத்தின் பிளஸ் பாயிண்ட்டுகள். என்ன, சீரியஸ் கதையில் அழுத்தமான சீன்கள் இல்லை. சீரியஸ் ஆன சில சீன்களை காமெடி ஆக்கி இருப்பது படத்துடன் ஒட்டவில்லை. கிளைமாக்ஸ் மனதில் நிற்கிறது. ஆனால், அதற்கு முந்தைய பல சீன்கள் போராடிக்கின்றன. நிஜத்தில் நல்லது செய்கிற பாலா, சினிமாவிலும் அந்த இமேஜை கொண்டு வர முயற்சித்து இருக்கிறார். ஆனால் பாலாவிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது இந்த மாதிரியான சீரியஸ் கதை அல்ல.

காந்தி கண்ணாடி - காமெடி பண்ணுவார்னு நினைத்தால், கலங்க வைக்கிறார் பாலா



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !