தயாரிப்பு : ஸ்ரீலட்சுமிமூவீஸ்
இயக்கம் : ஏ.ஆர்.முருகதாஸ்
நடிப்பு : சிவகார்த்திகேயன், ருக்மிணிவசந்த், பிஜூமேனன், வித்யூத் ஜாம்பால், ஷபீர்
இசை : அனிருத்
ஒளிப்பதிவு : சுதீப்
வெளியான தேதி : செப்டம்பர் 5, 2025
நேரம் : 2 மணிநேரம் 48 நிமிடம்
ரேட்டிங்: 3.25 / 5
தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை உருவாக்கி பணம் சம்பாதிக்க நினைக்கிறார் 'துப்பாக்கி' வில்லன் வித்யூத் ஜாம்வால். அதை தடுக்க நினைக்கிறார் விஜய் கையால் 'துப்பாக்கி' வாங்கிய ஹீரோ சிவகார்த்திகேயன். ஜெயித்தது யார்? இதுதான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய மதராஸி கதைக்கரு.
வட இந்தியாவில் இருந்து சென்னைக்கு சில கன்டெய்னர் லாரிகளில் கள்ளத் துப்பாக்கிகளை கொண்டு வருகிறார் வித்யூத். தமிழக எல்லையில் அதை தடுக்க நினைக்கும் என்.ஐ.ஏ முயற்சிகள் தோல்வியில் முடிய நேர்மையான என்.ஐ.ஏ அதிகாரி பிஜூ மேனன், அநியாயத்துக்கு எதிராக பொங்கும் கோபக்கார இளைஞன் சிவகார்த்திகேயன் தங்கள் ஆபரேசனுக்கு பயன்படுத்திக் கொள்கிறார். துப்பாக்கி கன்டெயினர் மறைந்து இருக்கும் ஒரு பேக்டரிக்குள் அவரை அனுப்பி அதை அழிக்க பிளான் போடுகிறார். இதற்கிடையில் வில்லன்கள் டீம் சிவகார்த்திகேயன் காதலி ருக்மணியை கடத்த, கடைசியில் சென்னை துறைமுகத்தில் சண்டைபோட்டு காதலியை மீட்டு, வில்லனை எப்படி அழிக்கிறார் ஹீரோ என்ற வழக்கமான கதையை, பரபரப ஆக்ஷன் கலந்துகொடுத்து இருக்கிறார் முருகதாஸ். (உண்மையிலே இந்த கதை ஷாருக்கானுக்கு எழுதப்பட்டதா முருகதாஸ் சார்)
எங்கே தவறு நடந்தாலும் தட்டிக்கேட்கும் கோபக்கார இளைஞன், தன் காதலிக்காக என்ன செய்கிறான் என்ற பின்னணியில் ஆக் ஷன் ஹீரோவாக களம் இறங்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் ஏன் அப்படி மாறினார், அவருக்கு மனரீதியாக என்ன பிரச்னை என்ற பிளாஷ்பேக் வைத்து, அந்த நோய்க்கு வாயில் நுழைய ஒரு பெயரையும் சொல்கிறார்கள். என் காதலிக்காக நான் சாகப்போகிறேன் என அப்பாவியாக பேசிக் கொண்டே பலரை சாகடிக்கும் கேரக்டர் அவருக்கு. கிளைமாக்ஸ் உள்ளிட்ட ஆக்ஷன் காட்சிகளில் பின்னி எடுத்து இருக்கிறார். தொட்டு பாரு என்ற பேசும் அந்த இடைவேளை காட்சி அமர்களம். ஓபனிங் பாடல் சுமார். கிளைமாக்ஸ் சண்டையில் கடுமையாக உழைத்து இருக்கிறார். ஆனால் சிவகார்த்திகேயனிடம் நாம் வழக்கமாக எதிர்பார்க்கும் காமெடி கலந்த மேனரிசம், பெண்கள், குழந்தைகளை கூட கவரும் கிண்டல் கேலி, ஒருவித எனர்ஜி கலந்த நடிப்பை எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றமே மிஞ்சும். காதல் சீனில் கூட அவர் சுமார் ரகம் தான்.
ஹீரோயின் ருக்மிணி வசந்த் அழகாக இருக்கிறார். ஆனாலும் அவருக்கு நடிக்க பெரிய வாய்ப்புகள் இல்லை. பாடல் காட்சியில் கூட ஆட்டம் போடாமல் கையில் கிடாருடன் ஏதோ பாடிவிட்டு போகிறார். அனிருத் இசை, சிவகார்த்திகேயன் மாதிரியான மாஸ் ஹீரோ இருந்தும் அவரை சரியாக பயன்படுத்தவில்லை.
நேர்மையான என்.ஐ.ஏ அதிகாரியாக வரும் பிஜூ மேனன், வில்லனாக வரும் வித்யுத், அவர் நண்பராக வரும் டான்சிங் ரோஸ் ஷபீர் சம்பந்தப்பட்ட சீன்கள் படத்தை தாங்கி பிடிக்கின்றன. ஷெட்டிலான நடிப்பில் பிஜூவும், நண்பனுக்காக அடித்து துவைக்கும் கேரக்டரில் ஷபீரும் கலக்கி இருக்கிறார்கள். இடைவேளைக்குபின் சண்டைக்காட்சிகளில் ஷபீர் கலக்குகிறார். குறிப்பாக வில்லன் வித்யூத் நடிப்பில், ஆக்ஷனில் தனி ராஜாங்கம் நடத்தி இருக்கிறார். அவரின் என்ட்ரி முதல், கடைசிவரை பல இடங்களில் அவர் ஆக்ஷன் சீன், வில்லத்தனம் அவ்வளவு ஸ்டைல், அவ்வளவு ஸ்பீடு. சில சமயம் ஹீரோவை விட அவருக்கு ஸ்கோப் அதிகம். துப்பாக்கி பாசமா இயக்குனரே?
ஆக்ஷன் கதை, துப்பாக்கி சண்டை நிறைந்த படம், ரத்தம் கொப்பளிக்கிற சீன்கள் அதிகம் இருப்பதால் மதராஸி கலர்புல்லாக இல்லை. பாடல் காட்சி, ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே ஆறுதலாக இருக்கிறது. அதேசமயம், சண்டைகாட்சி காட்சிகளில் சுதீப் ஒளிப்பதிவு அபாரம். அனிருத் இசை என்றாலும், பின்னணி இசையில் மட்டுமே அவர் திறமை தெரிகிறது. சம்பல, தங்கப்பூவே பாடல் ஓகே ரகம். உங்க நண்பருக்கு இப்படியா டியூன் கொடுப்பீங்க? பைட் மாஸ்டர் கெவின், திலீப் சுப்பராயன் ஆகியோர்தான் படத்தை வேகமாக நகர்த்தி செல்கிறார்கள்.
ஓபனிங் கன்டெயினர் சேசிங், இன்டர்வெல்பிளாக், என்ஐஏ ஆபீஸ் அட்டாக், கிளைமாக்ஸ் சண்டை ஆகியவை படத்தின் பலங்களில் ஒன்று. உன்னை போல மற்றவர்களை நேசி, கஷ்டப்படுபவர்களுக்கு உதவி என்ற ஹீரோவின் பாலிசி, வசனம். முருகதாஸ் டச்சிங். ஆனாலும் சிவகார்த்திகேயன் குடும்பம் சம்பந்தப்பட்ட பரிதாபத்தில் பீலிங் வரவில்லை. ஹீரோவின் நோய், பேச்சு, உடல்மொழி அவரின் ஆக்சன் ஹீரோ இமேஜ்க்கு தடையாக இருக்கிறது.
இவ்வளவு பெரிய ஆபரேசனில் போலீஸ் பங்கு என்ன? பெரிய அட்டாக் நடக்கும்போது கொஞ்சம் சிறப்பு படை மட்டுமே சண்டையிட்டு, செத்துக்கொண்டே இருப்பது ஏன். என்ஐஏ அதிகாரம் என்ன? என பல விஷயத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். மேலிருந்து குதித்து, அடிபட்டு, துப்பாக்கி குண்டு வாங்கியும் ஹீரோ சண்டை போட்டுக் கொண்டே இருப்பது பக்கா சினிமாதனம். காதல், பிளாஷ்பேக், எமோஷன், ஆக்ஷன் என அனைத்து கலந்து கொடுத்து இருந்தாலும், ஆக்ஷனை தவிர மற்றவை எடுபடவில்லை.
சிவகார்த்திகேயன் நடித்து இருக்கிறாரே? படம் கலகலவென இருக்கும், சிரித்து ரசித்துவிட்டு போகலாம் என்ற நினைப்பில் வந்தால் ஏமாற்றமாக இருக்கும். சரி, முருகதாஸ் பாணியில் படம் இருக்கும், புதுசாக எதையாவது சொல்லியிருப்பார், திரைக்கதையில் மிரட்டி இருப்பார் என நினைத்தால் அதிலும் ஏமாற்றம்தான் ஆக்ஷன் காட்சிகளை மட்டுமே நம்பி, ஒரு கமர்ஷியல் ஹீரோவை வைத்து மதராஸியை கொடுத்து இருக்கிறார் முருகதாஸ். அவர் சொன்னதை கேட்டு, அவரை மட்டுமே நம்பி நடித்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்
மதராஸி - துப்பாக்கி பின்னணியிலான கதை... ஆனா, துப்பாக்கி மாதிரி இல்லை!