உள்ளூர் செய்திகள்

காட்டி

தயாரிப்பு : ராஜிவ்ரெட்டி, வம்சி பிரமோத்
இயக்கம் : கிரிஷ்
நடிப்பு : அனுஷ்கா, விக்ரம் பிரபு, ஜெகபதிபாபு, சைதன்யா ராவ், ரவீந்திர விஜய், ராஜிவ்சுந்தரம்
இசை : நாகவல்லி வித்யாசாகர்
ஒளிப்பதிவு : மனோஜ்
வெளியான தேதி : செப்டம்பர் 5, 2025
நேரம் : 2 மணிநேரம் 36 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5

ஒரிசா மலைப்பகுதியில் விளையும் சில ரக கஞ்சாவுக்கு உலகளவில் தனி மவுசு. அதை 'காட்டி'என்று அழைக்கப்படும் மலைவாசிகள் அங்கே விளைவித்து, மலையில் இருந்து தலைசுமையாக கீழே கொண்டு வருவதை காலங்காலமாக வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள். அவர்களை அடிமை போல் நடத்தும் வில்லன்கள் நெட்வொர்க், கஞ்சாவை வினியோகம் செய்து கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கிறது. காட்டியாக இருக்கும் அனுஷ்காவின் காதலன் விக்ரம் பிரபுவை திருமணநாள் அன்று கொடூரமாக கொலை செய்கிறார்கள் அண்ணன், தம்பி வில்லன்களான சைதன்யாராவ், ரவீந்திர விஜய். அனுஷ்காவையும் மானபங்கப்படுத்துகிறார்கள். இந்த சம்பவத்தால் வெகுண்டு எழும் அனுஷ்கா வில்லன்களை பழிவாங்க நினைக்கிறார். கஞ்சா சுமக்கும் தொழிலை விட்டு, காட்டிகள் நல்ல பாதைக்கும் திரும்ப வேண்டும் என ஆசைப்படுகிறார். அது நடந்ததா என்பது காட்டி படத்தின் கதை. கிரிஷ் இயக்கி இருக்கிறார். தெலுங்கு படமாக இருந்தாலும் தமிழிலும் டப்பாகி உள்ளது.

சீலாவதி என்ற காட்டியாக நடித்து இருக்கிறார் அனுஷ்கா. சீலாவதி என்பது அந்த மலைப்பகுதியில் பயிரிடப்படும் உயர் கஞ்சா ரகமும் கூட. அந்த சீலாவதியை இந்த சீலவாதி எப்படி அழிக்கிறார் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

ஆரம்பத்தில் துறுதுறு பெண்ணாக வரும் அனுஷ்கா, விக்ரம்பிரபு கொல்லப்பட்டதும் அதற்கு காரணமாகவர்களை தேடி கண்டுபிடித்து, ஓட, ஓட விரட்டி கொடூரமாக கொல்கிறார். பூ ஒன்று புயலானது மாதிரி அவர்களை அனுஷ்கா துரத்தி அடிக்கும் காட்சிகள் விறுவிறு. பாகுபலியில் பார்த்த அனுஷ்காவா இது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு பழிவாங்கும் காட்சிகளில், சண்டைகாட்சிகளில் மிரட்டி இருக்கிறார். ஆனாலும், உணர்ச்சிபூர்வமாக நடிக்க கொஞ்சம் முயற்சித்து இருக்கலாம். சில ஆக் ஷன் காட்சிகள் செயற்கைதனமாக இருக்கிறது. அவரின் உடல்மொழி அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அதேசமயம், நுாற்றுக்கணக்கான காட்டிகள் சூழ, வில்லன்களுடன் மோதும் கிளைமாக்ஸ் பைட் சீன் செம.

அனுஷ்கா காதலராக, நல்லவராக நன்றாக நடித்து இருக்கிறார் விக்ரம்பிரபு. இடைவேளை காட்சியில் கலங்க வைக்கிறார். வில்லன்களாக வரும் சைதன்யாராவ், அவர் அண்ணனாக வரும் ரவீந்திர விஜய், அதற்கு மேல் இருக்கும் வில்லன் டீம் என அனைவர் நடிப்பும் ஓகே. போலீஸ் அதிகாரியாக வரும் ஜகபதிபாபு கேரக்டரும் மனதில் நிற்கிறது. ஜான் விஜய் போலீசாகவும், விடிவி கணேஷ் எம்பியாகவும் நடித்து சோர்வடைய வைக்கிறார்கள். காமெடியன் போல வந்தாலும் நல்ல கேரக்டரில் நடித்து இருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் ராஜிவ்சுந்தரம், அந்த கல்யாண பாடல் காட்சியும் பிரமாண்டம், கலர்புல்.

ஒரிசா, ஆந்திரா பார்டரில் உள்ள மலைப்பகுதிகளில் காட்டி என்ற இனம் இருக்கிறது. அவர்கள் கஞ்சாவை கடத்துகிறார்கள். ஆனாலும் அவர்கள் வாழ்வை மங்கலாக இருக்கிறது. அவர்களை பயன்படுத்தி பலர் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். அதன் நெட்வொர்க் இப்படி என்ற உண்மை கலந்த கதையை சொன்னதில், அந்த மலைப்பகுதியின் அழகை, அந்த மலைவாழ் மக்களின் உடை, உணவு, கலாச்சாரத்தை காண்பித்ததில் இயக்குனர் கிரிசை பாராட்டலாம். ஆனாலும், கஞ்சா பாதிப்பு, அதனால் அந்த மக்கள் சந்திக்கும் துயரங்களை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். முழுக்க முழுக்க அனுஷ்காவை முன்னிலைப்படுத்தி கதையை நகர்த்தி இருப்பதால் பல சீன்கள் போராடிக்கின்றன. பல படங்களில் பார்த்த சின்ன வில்லன், கார்ப்பரேட் வில்லன், அவர்களுக்கு உதவும் போலீஸ், அரசியல்வாதிகள் என்ற திரைக்கதையும் சோர்வை தருகிறது. அந்த திருமண வீடு பாடல், ஒரிசா நேட்டிவிட்டி அழகு. மலைகாட்சிகள், காட்டிகள் பின்னணி, கஞ்சா கடத்தும் சீன்களை தத்ரூமாக காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ். கிளைமாக்ஸ் பைட் மாஸ்

அனுஷ்கா ஆக்ஷன் காட்சிகளில் இன்னும் வேகம், வீரியத்தை சேர்த்து இருந்தால் காட்டி 'விஜயசாந்தி' ஸ்டைல் பக்கா ஆக்ஷன் படமாகி இருக்கும். அது மிஸ்சிங். காதல் காட்சிகளில், சென்டிமென்ட் காட்சிகளில் சுவாரஸ்யம் சேர்த்து இருந்தால் இன்னும் கமர்ஷியல் படமாக மாறியிருக்கும். ஆனால் இரண்டுமே மிஸ்சிங். கூலி வேலை செய்யும் அப்பாவி மக்களை பழிவாங்கும் வில்லன், அதை தட்டிக்கேட்கும் நாயகி என பல படங்களில் புளித்த சீன்கள் வேகத்தடை. ரொம்பநாள் கழித்து அனுஷ்காவை திரையில் பார்க்க ஆசைப்படுவர்கள் காட்டியை தியேட்டருக்கு போய் பார்க்கலாம்.

காட்டி - ஆக் ஷன் ஹீரோயினாக அனுஷ்காவை காட்டி ஏமாற்றியிருக்கிறார்கள், நம்மையும், அவரையும்...!



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !