பிளாக்மெயில்
தயாரிப்பு : ஜேடிஎஸ் பிலிம் பேக்டரி
இயக்கம் : மு.மாறன்
நடிப்பு : ஜி.வி.பிரகாஷ், தேஜூஅஸ்வினி, ஸ்ரீகாந்த், பிந்துமாதவி, ரமேஷ்திலக்
இசை : சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு : கோகுல் பினாய்
வெளியான தேதி : செப்டம்பர் 12, 2025
நேரம் : 2 மணிநேரம் 01 நிமிடம்
ரேட்டிங் : 3.25 / 5
ஒரு குழந்தை கடத்தல்தான் பிளாக்மெயில் கதையின் முக்கியமான கரு. கோவையில் ஒரு கூரியர் கம்பெனியில் டிரைவராக வேலை பார்க்கும் ஜி.வி.பிரகாஷ் வண்டியில் இருந்து போதை மருந்து பார்சலை திருடுகிறான் ஒருவன். ஜி.வி.பிரகாஷ் காதலி தேஜூ அஸ்வினியை கடத்தி வைத்துக் கொண்டு, 50 லட்சம் மதிப்புள்ள அந்த பார்சலை கொண்டு வராவிட்டால் 'அவ்வளவுதான்' என மிரட்டுகிறார் ஓனர் வேட்டை முத்துகுமார். தொழிலதிபர் ஸ்ரீகாந்த், பிந்துமாதவி மகளை பணத்துக்காக கடத்த திட்டம் போடுகிறார் வில்லன் லிங்கா. தனது காதலியை காப்பாற்ற அந்த வேலையை செய்ய நினைக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஆனால், அந்த குழந்தையை இன்னொருவர் கடத்துகிறார். அந்த சிறுமி ஒவ்வொரு இடமாக மாற்றப்படுகிறாள். கடைசியில் குழந்தை கிடைத்ததா? கடத்தியது யார்? அவர்களின் நோக்கம் என்ன என்ற கோணத்தில் விறுவிறு திரில்லர் கதையாக நகர்கிறது பிளாக்மெயில்.
யார், யாரை பிளாக்மெயில் செய்கிறார்கள். எதற்காக செய்கிறார்கள், வெற்றி பெறுவது யார் என்பதை பல்வேறு கேரக்டர்கள் பின்னணியில், சுவாரஸ்ய திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர் மு.மாறன். இவர் இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே படங்களை இயக்கியவர்.
மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்க்கும் தேஜூ அஸ்வினி காதலனாக அறிமுகம் ஆகும் ஜி.வி.பிரகாஷ் ஓவர் ஹீரோயிசம், பில்டப் இல்லாமல், ஆடல், பாடல் இல்லாமல் கேரக்டர் தன்மை உணர்ந்து இயல்பாக நடித்து இருக்கிறார். அதுவே அவரை கதையுடன் நெருக்கமாக்குகிறது. காதலியை இழந்து தவிப்பது, குழந்தையை கடத்த போடும் ஸ்கேட்ச், குழந்தையை தேடி அலைவது, ஸ்ரீகாந்த்துடன் கெஞ்சுவது என படம் முழுக்க ஓரளவு நன்றாக நடித்து இருக்கிறார். கடைசியில் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று ஓனரிடம் அவர் பேசும் டயலாக், அந்த சிச்சுவேஷன் செம.
ஹீரோயின் தேஜூ அஸ்வினி என்றாலும் சில சீன்களில் அவர் வந்து போகிறார். படத்தில் ஸ்கோர் செய்வது குழந்தையின் அம்மாவாக வரும் பிந்து மாதவி தான். வில்லன் லிங்காவால் மிரட்டப்படுகிற காட்சிகளில், குழந்தையை இழந்து தவிக்கிற காட்சிகளில், ஸ்ரீகாந்திடம் சில உண்மைகளை மறைக்கிற காட்சிகளில் பிந்து மாதவியின் எமோஷனல் வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. இவ்வளவு நாளாக எங்கே இருந்தீங்க?
ஜி.வி.பிரகாஷ் நண்பராக வரும் ரமேஷ் திலக், வில்லனாக வரும் லிங்கா, ஓனர் முத்துகுமார் ஆகியோரும் மனதில் நிற்கிறார்கள். ஓரிரு சீன்களில் வந்து காமெடி செய்து இருக்கிறார் ரெடின் கிங்ஸ்லி. குழந்தை அப்பாவாக வரும் ஸ்ரீகாந்த் கூட நீண்ட காலத்துக்குபின், அந்த குணசித்திர கேரக்டரில் நன்றாக நடித்து இருக்கிறார்.
கோவையில் கதை நடக்கிறது. ஆனாலும், யாரும் அந்த ஸ்லாங் பேசவில்லை. கோவையில் மால் தவிர, முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு எடுக்கப்படவில்லை. ஆனாலும், கதையோட்டம், கோகுல் பினாய் ஒளிப்பதிவு அதை மறைத்து விடுகிறது. சாம் சி.எஸ் பின்னணி இசை திரில்லர் காட்சிகளுக்கு பிளஸ்.
படத்தின் பெரிய பிளஸ் டுவிட்ஸ்தான். இவரா? அவரா? என நாம் நினைக்கும்போது, அடுத்து இன்னொரு டுவிஸ்ட் வருகிறது. கிளைமாக்ஸ் வரை அவ்வளவு டுவிஸ்ட் தொடர்கிறது. சமீபகால படங்களில் இவ்வளவு டுவிஸ்ட் உள்ள படம் இதுதான். கடைசியில், இன்னமுமா குடும்பத்துடன் குழந்தை சேரவில்லை என நமக்கே அலுப்பு ஏற்படுகிறது. இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக எடிட் செய்து இருக்கலாம். ஒரு கவர்ச்சி பாடல் வேஸ்ட். அதற்கும் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திருநங்கைகள் குறித்த இயக்குனர் பார்வை, அவர்களை காண்பித்த விதம் வெல்டன். படம் டக்கென 2 மணி நேரத்தில் முடிந்துவிடும்; நல்ல முயற்சி.
குழந்தை சம்பந்தப்பட்ட கதை என்பதால், அந்த குழந்தை பின்னணியில் உணர்ச்சிபூர்வமான சீன் வைத்து இருந்து இருக்கலாம். ஹீரோவுக்கு இன்னும் நடிக்க வாய்ப்பு வழங்கி இருக்கலாம். இப்படி சில குறைகள் இருந்தாலும் சூழ்நிலைகள் நம்மை எப்படி மாற்றுகிறது இன்றைய உலகில் பணம் பிரதானம் என்றாலும், அதையும் தாண்டிய விஷயங்கள் இருக்கின்றன என்ற 'நாட்' டச்சிங். எத்தனையோ குழந்தை கடத்தல் கதைகளை பார்த்து இருந்தாலும், கேரக்டர் பின்னணி, டுவிஸ்ட், இயல்பான சீன்களால் பார்வையாளர்களின் நேரத்தை பிளாக்மெயில் செய்து, பரபர திரில்லர் படம் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் மு.மாறன்
பிளாக்மெயில் - யப்பா, இவ்வளவு டுவிஸ்ட்டா? என மலைக்க வைத்தாலும் இந்த மெயில் கொஞ்சம் ஸ்பீடு