உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / குமாரசம்பவம்

குமாரசம்பவம்

தயாரிப்பு : கே.ஜே.கணேஷ்
இயக்கம் : பாலாஜி வேணுகோபால்
நடிப்பு : குமரன் தங்கராஜன், பாயல், குமாரவேல், ஜி.எம்.குமார், பாலசரவணன்,
இசை : அச்சுராஜாமணி
ஒளிப்பதிவு : ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி
வெளியான தேதி : செப்டம்பர் 12, 2025
நேரம் : 2 மணிநேரம் 05 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5

சினிமாவில் டைரக்டர் ஆகும் ஆசையில் சுற்றிக் கொண்டிருக்கும் ஹீரோ குமரனின் வீட்டு மாடியில் குடியிருக்கும் சமூகசேவகரான குமாரவேல் திடீரென இறந்துவிடுகிறார். அது கொலையாக இருக்குமோ என போலீஸ் சந்தேகப்படுகிறது. தன் மீதும் போலீஸ் சந்தேகப்பார்வை இருப்பதால் குமாரவேல் எதிரிகளை கண்டறிந்து, அவர்களை விசாரிக்கிறார் ஹீரோ. இதற்கிடையில், மறைந்த ஹீரோவின் தாத்தா ஜி.எம்.குமார் உயிலை நிறைவேற்றுவதிலும் சிக்கல் வருகிறது. அதனால் ஹீரோ டைரக்டர் ஆகும் ஆசை தள்ளிப்போகிறது. ஹீரோ டைரக்டர் ஆனாரா? குமாரவேல் இறந்தது எப்படி என்பது குமாரசம்பவம் கதை. லக்கிமேன் படத்தை இயக்கிய, பாலாஜி வேணுகோபால் இயக்கியிருக்கிறார்.

‛பாண்டியன் ஸ்டோர்' குமரன் ஹீரோவாக அறிமுகமாகி உள்ள படம். சினிமா வாய்ப்பு தேடும் இயக்குனராக வருகிறார். தயாரிப்பாளர் கிடைக்காமல் போக, வீட்டை விற்று பணம் கொடு என்று தாத்தா ஜி.எம்.குமாரை நச்சரிக்கிறார். இன்னொரு பக்கம் குமாரவேல் மரணத்துக்கு எந்த வில்லன் காரணம் என்று காமெடியாக விசாரிக்கிறார். அவருக்கு ஒரு காதலி, ஒரு நண்பன் என கதை செல்கிறது. நடிப்பு விஷயத்தில் பாஸ் மார்க் வாங்குகிறார் குமரன். பாலசரவணனுடன் இணைந்து அவர் நடிக்கும் லுாட்டிகள் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, 3 வில்லன்களை அவர்கள் தேடிப்போகும் சம்பவம், தரமான சம்பவம்.

டிராபிக் ராமசாமி மாதிரியான சமூக சேவகராக முக்கியமான கேரக்டரில் வருகிறார் குமாரவேல். அவரை சுற்றிதான் கதை நடக்கிறது. அனுபவம் காரணமாக அமைதியான நடிப்பில் அளவாக நடித்து இருக்கிறார். ஆனாலும் அவர் கேரக்டர், செயல்பாடுகள் பல படங்களில் பார்த்து புளித்தது. அவரின் மரண சம்பவம் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதால் ரசிக்க முடிகிறது. கிளைமாக்ஸ் கொஞ்சம் இன்ட்ரஸ்ட்டிங்.

சிபிஐ அதிகாரியாக நடிக்கும் வினோத் சாகர் அரை மணி நேரத்துக்கு மேல் படத்தை கலகலவென நகர்த்தி செல்கிறார். மாறுவேடத்தில் வில்லன்களை அவர் விசாரிக்கும் விதம் சூப்பர். படத்தின் முக்கியமான பிளஸ் அந்த விசாரணை காட்சிகள் மட்டுமே. ஹீரோ மாமாவாக வரும் வினோத் முன்னாவும் அவ்வப்போது சிரிப்பு வரவழைக்கிறார். காமெடி போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சிவா ஆனந்த் நடிப்பில் அவ்வளவு செயற்கை தனம்.

ஹீரோயின் பாயல் ராதாகிருஷ்ணன் வருகிறார், பேசுகிறார், திடீரென காணாமல் போகிறார். தாத்தாவாக வரும் ஜி.எம்.குமார் நடித்து தள்ளி இருக்கிறார். அம்மா, தங்கை, மற்ற கேரக்டரில் அவ்வளவு சீரியல் பாதிப்பு. ஹீரோவும் எக்ஸ்பிரசனில் இன்னும் தேற வேண்டும். அச்சு ராஜாமணியின் கர்நாடக சங்கீதம் பின்னணியிலான இசை பீல்குட். ஜெகதீஷ் கேமரா ஓகே ரகம். காமெடி டயலாக்கள் பரவாயில்லை. சமூக போராளி கேரக்டர், கதை சொல்லும் பாணி, நடிகர்கள் பேக்ரவுண்ட், போலீஸ் விசாரணை இதெல்லாம் ரொம்பவே பழசு.

இடைவேளைக்கு பின்னர்தான் படம் சூடுபிடிக்கிறது. குறிப்பாக வில்லன்கள் மீது சந்தேகப்பட்டு அவரை சிபிஐ அதிகாரி போர்வையில் விசாரிக்கும் காட்சிகள், அப்போது வரும் காமெடி சம்பவங்கள் சிரிக்க வைக்கிறது. படம் முழுக்க இப்படிப்பட்ட சம்பவங்கள் இருந்தால் இன்னும் தரமாக இருந்து இருக்கும். ஆனால் மெதுவாக நகரும் முற்பாதி, வலு இல்லாத திரைக்கதையால் படம் திணறி, நம்மையும் திணற வைக்கிறது. ஜி.எம்.குமார், குமாரவேல் நட்பு தெளிவாக சொல்லப்படவில்லை. சமூகசேவகர் என்ற அந்த கேரக்டர் ட்ரை ஆக இருக்கிறது.

நாடக பாணியில் பல காட்சிகள் இருப்பதும், நாடக நடிகர்கள் மாதிரி பலர் நடிப்பதும் மைனஸ். எமோஷனல், சென்டிமென்ட் சீன்கள் செட் ஆகவில்லை. பாண்டியன் ஸ்டோர் குமரன் நடிப்பில் தனித்தன்மை எதுவும் இல்லை. கதையிலும் அப்படியே. சில காமெடி சீன்கள், டயலாக் மட்டுமே பிரஷ் ஆக இருக்கிறது.

குமாரசம்பவம் - தரமான நாலைந்து காமெடி சீன்களை மட்டுமே கொண்ட 'சுமாரான' சம்பவம்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !