பாம்
தயாரிப்பு : ஜெம்பிரியோ பிக்சர்ஸ்
இயக்கம் : விஷால் வெங்கட்
நடிப்பு : அர்ஜூன்தாஸ், காளிவெங்கட், ஷிவாத்மிகா, சிங்கம்புலி, நாசர்
இசை : இமான்
ஒளிப்பதிவு : பி.எம்.ராஜ்குமார்
வெளியான தேதி : செப்டம்பர் 12, 2025
நேரம் : 2 மணிநேரம் 05 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5
காளகம்மாய்பட்டி என்ற கிராமம் இரண்டாக பிரிகிறது. காரணம், ஜாதி மற்றும் கடவுள் பிரச்னை. கம்மாப்பட்டியை சேர்ந்தவர்கள் தங்களை உயர்ந்தவர்களாக நினைத்துக்கொண்டு தனி குல தெய்வத்தை வணங்குகிறார்கள். அவர்களால் பாதிக்கப்படும் காளப்பட்டி மக்களுக்கு தனி குல தெய்வம். தீண்டாமை அந்த ஏரியாவில் கொடி கட்டி பறக்கிறது. இவர்களை சமாதானப்படுத்த அரசு அதிகாரிகள் வந்தால் அவர்களை விரட்டி அடிக்கிறார்கள். கம்மாபட்டியை சேர்ந்த காளி வெங்கட்டும், காளபட்டியை சேர்ந்த அர்ஜூன்தாசும் ஊர் வழக்கத்தை மீறி நண்பர்களாக இருக்கிறார்கள்.
ஒரு நாள் திடீரென காளிவெங்கட் இறந்துபோக, அவரை தெய்வமாக இரண்டு ஊர் மக்களும் வழிபடுகிறார்கள். அவர் பிணத்தை வைத்துக்கொண்டு, அவர் உடலில் இருப்பது எங்கள் சாமி என இருவரும் சண்டை போடுகிறார்கள். அது ஏன்? காளிவெங்கட் பிணத்தை வைத்து இரண்டு ஊரை ஒற்றுமையாக்க திட்டம் போடுகிறார் அர்ஜூன்தாஸ். அது நடந்ததா என்பது பாம் கதை. இறந்த பின்னரும் சில உடல் வேதியியல் பிரச்னைகளால் 'பாம்' போடுகிறார் காளிவெங்கட். அதுவே அவரை ஸ்பெஷல் ஆக்குகிறது. அதனால் படத்தின் தலைப்பு பாம். சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கி இருக்கிறார்.
ஒரு கிராம பின்னணியில் கடவுள், ஜாதி பிரச்னை கலந்த ஒரு விழிப்புணர்வை கதையை கொடுத்து இருக்கிறார் இயக்குனர். அர்ஜூன்தாஸ் ஹீரோ என்றாலும் படத்தில், 2வது ஹீரோவாக இருப்பவர் காளிவெங்கட். அவர் இறந்த பின்னர்தான் கதை சூடுபிடிக்கிறது. படத்தின் பெரும்பகுதி பிணமாக இருக்கிறார். பிணமாகவே வாழ்ந்து இருக்கிறார் என சொல்லலாம்.
ஆக் ஷன், வில்லத்தனத்தில் மிரட்டிக் கொண்டிருந்த அர்ஜூன்தாஸ் இதில் அப்பாவியாக, ஊரை சேர்த்து வைக்க துடிக்கும் நல்லனாக நடித்து இருக்கிறார். ஆனாலும், அவருக்கான ஸ்கோப் படத்தில் இல்லை. சிலசமயம் அவர் பேசுவது தெளிவாக புரியவில்லை. கடைசி அரைமணி நேரம் மட்டும் ஓரளவு நடித்து இருக்கிறார்.
ஹீரோயினாக வரும் ஷிவாத்மிகா சில காட்சிகளில் வந்தாலும் கிராமத்து பெண்ணாக மனதில் நிற்கிறார். அண்ணன் காளிவெங்கட் பிணத்தை அவர் சுமக்கும் காட்சி சிலிர்க்க வைக்கிறது. ஊர் தலைவராக, ஜாதி வெறி பிடித்தவராக வருகிறார் சிங்கம்புலி. ஆனால், அவருக்கு அது செட்டாகவில்லை. பாதிக்கப்பட்ட ஊர் தலைவராக விலங்கு ரவி பக்காவாக பொருந்தி இருக்கிறார். அரசியல்வாதியாக வரும் நாசர், கலெக்டராக வரும் அபிராமி கேரக்டரை எத்தனையோ படங்களில் பார்த்துவிட்டதால் ஈர்ப்பு இல்லை. ஒரு அழுத்தமான ரோலில் வரும் டிஎஸ்கே, பூசாரியாக வருபவர் ஓகே. இவர்களை தவிர, ஜாதி வெறியரால் பாதிக்கப்பட்ட சிறுவனாக தவிக்கும் பூவையாரை பாராட்டலாம். அவர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உணர்வுபூர்வமானவை. ஒரு வித தனி டோனில் கிராமத்தை காண்பித்த ராஜ்குமார் ஒளிப்பதிவு படத்தின் பிளஸ். இமான் இசை, பின்னணி இசை செட் ஆகவில்லை.
இவ்வளவு நடிகர்கள் இருந்தாலும், வலுவான கரு இருந்தாலும் அழுத்தமான சீன்கள் இல்லாததால் படம் தடுமாறுகிறது. இடைவேளைகாட்சி ஓகே. ஊர் மக்கள் ஒற்றுமையாக செய்யும் சில செயல்கள் டச்சிங் ஆக இருக்கிறது. ஆனால், சில சீன்கள் நீளமாக, ரொம்பவே குழப்பமாக இருக்கிறது. காமெடி டோனில் வரும் காட்சிகள் சிரிப்பை தரவில்லை. ஒரு பிணத்துக்குள் சாமி வருமா? ஒரு பிணத்தை வைத்துக்கொண்டு சாமி திருவிழா நடத்த முடியுமா? பிணம் பாம் போடுமா என்று யோசித்தாலே படம் அடிபடுகிறது. 'பிணம் பாம்' சம்பந்தப்பட்ட சீன் கள், அந்த சவுண்ட் முகம் சுளிக்க வைக்கிறது. இப்படியொரு கான்செப்ட், இப்படியொரு தலைப்பா?
அர்ஜூன்தாஸ் என்ன நினைக்கிறார். ஊர் மக்கள் பிரச்னை என்ன? சாங்கியம் என்ன சொல்கிறது? பூசாரி என்ன நினைக்கிறார் என பல கேள்விகளுக்கு விடை இல்லை. ஜாதி ஒழிக்க சாமியை கையில் எடுத்து இருக்கிறார். அந்த விஷயத்தில் தெளிவு இல்லை. ஜாதி வேண்டாம். ஏற்றத்தாழ்வு வேண்டாம். சாமி பெயரில் சண்டை வேணாம். ஒற்றுமையாக வாழுங்கள் என டைரக்டரின் எண்ணத்தை பாராட்டலாம். ஆனால், அதை குழப்பி அடித்து, ஏதோ சொல்ல நினைத்து, எதையோ கொடுத்து இருக்கிறார்.
பாம் - வெடித்து சிதறியிருக்க வேண்டும், ஆனா, புஸ் ஆகிவிட்டது