உள்ளூர் செய்திகள்

தணல்

தயாரிப்பு : ஜான்பீட்டர்
இயக்கம் : ரவீந்திர மாதவா
நடிப்பு : அதர்வா, அஸ்வின் ககுமனு, லாவண்யா திரிபாதி, பரணி, லட்சுமிபிரியா
இசை : ஐஸ்டின் பிரபாகர்
ஒளிப்பதிவு : சக்திசரவணன்
வெளியான தேதி : செப்டம்பர் 12, 2025
நேரம் : 2 மணிநேரம் 08 நிமிடம்
ரேட்டிங் : 2.75 / 5

சென்னையில் உள்ள பல பேங்குகளை ஒரு இரவில், ஒரே நேரத்தில் கொள்ளை அடிக்க திட்டமிடுகிறது அஸ்வின் தலைமையிலான கும்பல். அன்றைக்குதான் பணியில் சேர்ந்த அதர்வா உள்ளிட்ட 6 போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு தற்செயலாக இந்த திட்டம் தெரிய வருகிறது. கொள்ளை அடிக்க நினைப்பவர்கள் யார்? அவர்கள் நோக்கம் என்ன? அதர்வா டீம் அந்த திட்டடத்தை முறியடித்ததா? இதுதான் ரவீந்திர மாதவா இயக்கிய தணல் படத்தின் கதை. தணல் என்றால் நெருப்பு என அர்த்தம்

பேங்க் கொள்ளை பேக்கிரவுண்ட்டில் எத்தனையோ படங்கள் வந்துவிட்டன. போலீஸ் கதைக்கு பஞ்சமே இல்லை. ஆனாலும், இதுவரை இல்லாத ஒரு புது பாதையில் தணலை சொல்லியிருப்பது ஆறுதலான விஷயம். சென்னை போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் அதர்வா, பரணி, சாரா, சர்வா உள்ளிட்ட 6 பேர் ஒரேநாளில் பணியில் சேரும்போது, இரவு ரவுண்ட்டுக்கு அவர்களை அனுப்புகிறார் சப் இன்ஸ்பெக்டர். ஆட்கள் இல்லாத ஒரு குடிசை பகுதிக்குள் நுழையும் அவர்களில் சிலர் கொல்லப்படுகிறார்கள். என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவிக்கிறார் ஹீரோ அதர்வா. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நடப்பதை அறிந்து போலீஸ் டீமை தொடர்பு கொள்ள நினைக்கிறார்.ஆனால், சிக்னல் இல்லாத நிலை. அடுத்து என்ன செய்கிறார் என்பதை கொஞ்சம் விறுவிறுப்பாக சொல்கிறார் இயக்குனர்

கான்ஸ்டபிள், காதலன், ஆபரேசனுக்கு காத்திருக்கும் அம்மாவின் மகன் என 3 விதமான நடிப்பை தந்து இருக்கிறார் அதர்வா. அவருக்கும், லாவண்யாவுக்குமான காதல் காட்சிகள் கியூட்டாக இருக்கிறது. அம்மா சம்பந்தப்பட்ட எமோஷனலும் வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. இந்த இரண்டை விட, போலீஸ்காரராக அவரின் ஆக் ஷன், அந்த கும்பல் நோக்கத்தை கண்டுபிடிக்கும் சுறுசுறுப்பு படத்தை துாக்கி நிறுத்துகிறது. அதர்வா கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில் ஒரு பெரிய குடிசை பகுதியில் நடக்கிறது. அதில் நடக்கும் மர்மமான விஷயங்கள், அவ்வப்போது தாக்கும் வில்லன் டீம், அவர்களின் திட்டமும், அங்கே நடக்கும் சஸ்பென்ஸ் விஷயங்களும் படத்தின் பெரிய பிளஸ்.

பொதுவாக வில்லன்கள் பணத்தாசைக்காக பேங்கை கொள்ளை அடிப்பார்கள். இதில் வில்லன் என்று சொல்ல முடியாது. அஸ்வினும் ஒருவகையில் ஹீரோதான். விவசாய குடும்பத்தில் பிறந்து, சுரங்கத்தில் வேலை பார்த்த அஸ்வின் ஏன் மாறினார்? அவருக்கு போலீஸ் மீது என்ன கோபம் என்று சொல்லும் புதுசாக இருக்கிறது. ஆனாலும், எத்தனை நாட்கள் இந்த விவசாயம் அழிகிற கதையை சினிமாவில் காண்பிப்பார்களோ என்ற கேள்வியும் எழுகிறது. முதற்பாதியில் அதிகம் பேசாமல் ஆக்டிங் கொடுக்கும் அஸ்வின், பிற்பாதியில் தனது குடும்பம், தனது கிராமம் பாதிக்கப்பட்டதை சொல்கிறார். ஆனாலும், அந்த காரணங்கள் வலுவாக இல்லை. தவறு செய்தவர்களை போலீஸ் தண்டிப்பதில் என்ன தவறு என்ற கேள்வி வருகிறது. வில்லனை இன்னும் ஸ்ட்ராங் ஆக காண்பித்து இருந்தால் திரைக்கதை இன்னும் ஸ்பீடாக மாறியிருக்கும். அதேசமயம், அவருக்கும், அதர்வாவுக்குமான லிங்க் பிளாஷ்பேக் புதுமையாக இருக்கிறது. கிளைமாக்ஸ் வழக்கமானதாக இல்லாமல் மாறுபட்டதாக இருக்கிறது. அதர்வாவுடன் வரும் 5 போலீஸ்காரர்கள் நடிப்பும், கேரக்டரும்
அருமை.

ஹீரோயின் லாவண்யா காதல் போர்ஷன் கொஞ்சம் பிரஷ். குடிசைப்பகுதியில் ஒரு மிரட்டலான கேரக்டரில் வருகிறார் லட்சுமிபிரியா. அவரின் மாற்றம் ஷாக்கிங். படத்தின் ஓபனிங் சீன், என்கவுன்டர் காட்சிகளில் பயர் இருக்கிறது. கிளைமாக்ஸ் கூட ஓரளவு ஓகே. ஆனால், இவ்வளவு பெரிய சிட்டியில் இப்படிப்பட்ட கிரைம் நடப்பதும், அதை கண்டுபிடிக்க போலீஸ் திணறுவதும் லாஜிக் மீறல். அதேசமயம், வெளிநாட்டு படங்களை போல டணல் சம்பந்தப்பட்ட காட்சிகளை செட் செய்துள்ளனர். அதுவும், இரவில் நடக்கும் காட்சிகளும் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் திறமையை காண்பிக்கிறது. பாடல், இசையில் பெரிய பிளஸ் இல்லை.

முழுக்க ஆக் ஷன் ஜானரிலோ, திரில்லர் ஜானரிலோ படம் வந்து இருந்தால் இன்னும் சூப்பராக இருந்து இருக்கும். கிராமம், விவசாயம், போலீஸ் பழிவாங்கல் என்று சென்றது திரைக்கதையை வீக் ஆக்கி இருக்கிறது. எங்கோ இருக்கும் கிராமத்தில் கார்ப்பரேட் முதலாளிகள், அரசியல்வாதிகள், சில போலீசா் என, யாரோ செய்த தவறுக்காக, அது பற்றி தெரியாத, சம்பந்தம் இல்லாத தென் சென்னை போலீசை மொத்தமாக கொல்ல நினைப்பது சரியா? கொள்ளை அடிப்பதை நியாயப்படுத்துவதா? என்ற கேள்வியே தணலை சாம்பல் ஆக்கிவிடுகிறது.

தணல் - பேங்க் கொள்ளை கதை... கொள்ளை அடித்தது ரொம்ப கம்மி



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !