உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / அந்த 7 நாட்கள்

அந்த 7 நாட்கள்

தயாரிப்பு : பெஸ்ட்காஸ்ட் ஸ்டூடியோஸ்
இயக்கம் : எம். சுந்தர்.
நடிப்பு : அஜித் தேஜ், ஸ்ரீஸ்வேதா, நமோ நாராயணா, கே. பாக்யராஜ்
இசை : சச்சின் சுந்தர்
ஒளிப்பதிவு : கோபிநாத் துரை
வெளியான தேதி : செப்டம்பர் 25, 2025
நேரம் : 1 மணிநேரம் 57 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5

வானியல் ஆராய்ச்சி மாணவரான புதுமுக ஹீரோ அஜித் தேஜ், 300 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் 'சூரிய கிரகணத்தை' ஒரு பழமையான டெலஸ்கோப் மூலம் ரிசர்ச் செய்கிறார். அப்போது அவருக்கு ஒரு சூப்பர் பவர் கிடைக்கிறது. அதாவது, ஒருவர் கண்ணை பார்த்தால் அவர் இறந்துவிடுவாரா? எப்போது இறப்பார் என்பதை துல்லியமாக சொல்லிவிடுவார். அவர் சொல்வது நடக்கிறது. தனது காதலியான ஹீரோயின் ஸ்ரீஸ்வேதா கண்ணை பார்க்கும்போது 7 நாட்களில் அவர் இறப்பதை அறிகிறார். நாய்க்கடி காரணமாக ஹீரோயினுக்கு ரேபிஸ் பாதிப்பு வர, அடுத்த 7 நாட்களில் என்ன நடக்கிறது. ஹீரோயினை காப்பாற்றினாரா ஹீரோ என்பது அந்த 7 நாட்கள் கதை. புதுமுக இயக்குனர் எம்.சுந்தர் இயக்கி உள்ளார்.

இயக்குனர் கே.பாக்யராஜ் சிஷ்யர் இயக்கிய கதை என்றாலும், அந்த 7 நாட்கள் என தலைப்பு வைத்து இருந்தாலும், இதிலும் பாக்யராஜ் நடித்து இருநு்தாலும், அந்த படத்துக்கும், இந்த கதைக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. புதுமுக ஹீரோ அஜித்தேஜ் காதல் காட்சிகளில், அந்த சூப்பர் பவரால் அவதிப்படும் காட்சிகளில், காதலியின் எதிர்காலம் குறித்து தவிப்பவாராக ஓரளவு சுமாராக நடித்து இருக்கிறார். ஹீரோவுக்கான மெட்ரீயல் அவரிடம் ரொம்பவே குறைவு. இடைவேளைக்குபின் அவர் நடிக்க கொஞ்சம் வாய்ப்பு வருகிறது. ரேபிசால் பாதிக்கப்பட்ட ஹீரோயினை குணப்படுத்த அவரை கொடைக்கானலுக்கு அழைத்து செல்லும் காட்சிகள், அங்கே நடக்கும் விஷயங்கள் ஓகே. கிளைமாக்சில் ஹீரோயினை காப்பாற்ற ஆக்ஷனுக்கு மாறுகிறார். அது மட்டுமே அவரின் பிளஸ்.

முதற்பாதியில் சும்மா வந்து போகிறார் ஹீரோயின். இரண்டாம் பாதியில் ரேபிஸ் பாதிக்கப்பட்டவராகவும், கிளைமாக்சில் வேறொரு பாத்திரமாக மாறி, மிரள வைக்கும் அளவுக்கு நடித்து இருக்கிறார் புதுமுக ஹீரோயின் ஸ்ரீஸ்வேதா. ரேபிஸால் பாதிக்கப்பட்டு இருக்கும் அந்த கெட்அப், மேக்கப், அவரின் உணர்ச்சி போராட்டங்கள், இதுவரை எந்த ஹீரோயினும் செய்யாதது. அதற்காக ஹீரோயினை பாராட்டலாம்.

மந்திரியாக வரும் கே.பாக்யராஜ், ஹீரோ அப்பாவாக வரும் நமோ நாராயணன் நல்ல கூட்டணி என்றாலும், அவர்கள் சம்பந்தப்பட்ட சீன்கள் ஏமாற்றமே. பிளாஷ்பேக்கில் மலைவாசியாக வரும் தலைவாசல் விஜய் சம்பந்தப்பட்ட உருக்கமான காட்சிகள், நாய்கடிக்கு ஆயுர்வேத மருந்து கொடுக்கும் அந்த சாமியார் கேரக்டர் மனதில் நிற்கிறது. ஆனாலும் பெரும்பாலான காட்சிகளில் அழுத்தம் இல்லை. காதல் காட்சிகள் கலர்புல்லாக இல்லை. கதையில் விறுவிறுப்பு இல்லை. ஹீரோவின் சூப்பர் பவர், பேண்டசி, நாய்க்கடி பாதிப்பு இதெல்லாம் புது விஷயம் என்றாலும், சரியாக சொல்லாமல் குழப்பியிருக்கிறார் இயக்குனர்.

சூரியகிரகணம் சம்பந்தப்பட்ட மூடநம்பிக்கை, கண்களை பார்த்து சொல்லும் சூப்பர்பவர், நாய்க்கடிக்கு ஆயுர்வேத மருந்து, காதலுக்காக அப்படி நடிக்கும் ஹீரோ என பல விஷயங்கள் நம்ப முடியாதவை. சச்சின் சுந்தரின் பாடல்கள், பின்னணி இசை சுமார். அந்த ரேபிஸ் பாதிப்பு சண்டைக்காட்சியில் கோபிநாத் கேமரா வொர்க் ஓகே. கடைசி அரை மணிநேர படம் மட்டுமே உருப்படி, மற்றபடி, புதுமுகங்கள், வலுவில்லான திரைக்கதை, நம்ப முடியாத காட்சிகள், சுவாரஸ்யம் இல்லாத விஷயங்களால் படம் தத்தளிக்கிறது.

அந்த 7 நாட்கள் : சூப்பரான கதை, அதை சூப்பராக சொதப்பி இருக்கிறார்கள்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !