ரைட்
தயாரிப்பு : ஆர்டிஎஸ் பிலிம் பேக்டரி
இயக்கம் : சுப்ரமணியன் ரமேஷ்குமார்
நடிப்பு : நட்டி, அருண் பாண்டியன், மூணாறு ரமேஷ், அக்சரா ரெட்டி, யுவினா, வினோதினி
இசை : குணா சுப்ரமணியன்
ஒளிப்பதிவு : பத்மேஷ் மார்தாண்டன்
வெளியான தேதி : செப்டம்பர் 26, 2025
நேரம்: 2 மணிநேரம்
ரேட்டிங்: 2.5 / 5
தனது மகனை காணவில்லை என்று கோவளம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வருகிறார் அருண் பாண்டியன். தனது திருமண பத்திரிகை கொடுக்க ஸ்டேஷனுக்கு வருகிறார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அக்சரா ரெட்டி, அந்த ஸ்டேஷனில் ஏட்டையா மூணாறு ரமேஷ், திருடன் தங்கதுரை உட்பட,
இன்னும் சிலர் இருக்கும் நேரத்தில், சுற்றிலும் பாம் வைத்து போலீஸ் ஸ்டேஷனை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறான் ஒருவன். கம்யூட்டர் மூலமாக போலீஸ் ஸ்டேஷனை ஆட்டுவிக்கிறான். உள்ளே வருபவர்கள் வெளியே செல்ல முடியாத வியூகம். அவன் கோரிக்கைப்படி, அங்கே வரும் நீதிபதி வினோதினி ஒரு பழைய கேசை விசாரிக்கிறார். அந்த கேஸ் என்ன? போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் பாம் வெடித்ததா? இப்படி மிரட்டும் மர்ம நபர் யார். அவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி கண்டுபிடித்தாரா? அருண்பாண்டியன் மகன் கிடைத்தானா? இப்படி பல கேள்விளை எழுப்பி, அதற்கு விடை சொல்லும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ரைட்.
பிரதமர் வருகையையொட்டி நடக்கும் பாதுகாப்பு பணிகளுக்காக இன்ஸ்பெக்டர் நட்டி ஸ்டேஷனில் இருந்து புறப்பட, மகனை காணவில்லை என்று அருண்பாண்டியன் புகார் கொடுக்க வர, கதை சூடுபிடிக்கிறது. ஆரம்பத்தில் சற்றே ஓவர் ஆக்டிங் என்றாலும், அந்த கேரக்டரில் சிறப்பாக நடித்து இருக்கிறார் அருண்பாண்டியன். ஒரு கட்டத்தில் அவர்தான் பாம் வைத்து இருப்பாரோ என்ற சந்தேகம் பலருக்கும் வருவது அந்த கேரக்டரின் பலம்.
போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக வரும் அக்சரா ரெட்டி, நடிப்பும் ஓகே. போலீஸ் ஏட்டையா வரும் மூணாறு ரமேஷ்தான் அதிக சீன்களில் ஸ்கோர் செய்கிறார். வழக்கமான போலீஸ் மனநிலை, பாம் வெடித்துவிடுமோ என தவிப்பது உட்பட பல சீன்களில் நன்றாக நடித்து இருக்கிறார். திருடனாக வரும் தங்கதுரை படத்தை கலகலப்பாக்குகிறார். ஆனால் சீரியஸ் நேரங்களில் அவரின் காமெடி படத்துக்கு தடையாக இருக்கிறது அல்லது மூடை மாற்றுகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டிக்கு வேலையில்லையே என நினைத்தால் கிளைமாக்சில் வந்து, கதையின் போக்கை மாற்றி, தனது பாச நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.
பத்மேஷ் ஒளிப்பதிவு போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளை இயல்பாக காண்பித்து இருக்கிறது. குணா சுப்ரமணியன் பின்னணி இசை ஓகே ரகம். ஒரு ஸ்டேஷனில் இவ்வளவு பெரிய விஷயங்கள் நடக்கும்போது உயர் அதிகாரிகள் உட்கார்ந்து கொண்டு வீடியோ காலில் பேசுவார்களா? என்ற கேள்வி எழாமல் இல்லை. போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சீன்கள் சினிமாதனம்.
ஜட்ஜ் ஆக வரும் வினோதினியும் கதையை நகர்த்த உதவியிருக்கிறார். ஆனால், அவரின் வழக்கமான மேனரிசம் சீரியஸ் உணர்வை தர மறுக்கிறது. மற்றபடி, வழக்கமான அரசியல்வாதி, அவரின் வழக்கமான மகன், வழக்கமான குற்றங்கள் என கதை வழக்கம்போல் செல்கிறது. ஒரு முக்கியமான கேரக்டரில் வரும் வீரம் யுவினா கியூட். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தின் முக்கியமான விஷயம் என்றாலும், இதுபோன்ற காட்சியமைப்பை பல படங்களில் பார்த்து இருப்பதால், அது படத்துக்கு பிளஸ் ஆக அமையவில்லை. இன்னும் எத்தனை படங்களில் தான் மந்திரி மகன் கெட்டவன் என்று தமிழ் சினிமாவில் காண்பிப்பார்களோ?
எத்தனையோ போலீஸ் கதைகளை, போலீஸ் ஸ்டேஷனை மையமாக வைத்து நகரும் கதைகளை பார்த்து இருப்போம். அதில் ரைட் வித்தியாசமானது. இப்படியொரு கதையை சிந்தித்து, பல டுவிஸ்ட்டுகளுடன் ஒரு திரில்லர் கதையை சிந்தித்த புதுமுக இயக்குனர் சுப்ரமணியன் ரமேஷ் குமாரை பாராட்டலாம். ஆனால், நேர்த்தி செய்யாமல் பல இடங்களில் அசால்டாக செயல்பட்டு இருக்கிறார்.
போலீஸ் ஸ்டேஷனில் பாம் வைப்பது, வெளியில் இருந்து இயக்குவது, ஸ்டேஷனுக்குள் கோர்ட் அமைத்து விசாரணை, தண்டனை, பாம் வைத்தவர் பின்னணி ஆகியவை புதுமையாக இருந்தாலும், அதை முழு சீரியஸ் டோனில் இயக்குனர் சொல்லவில்லை. மிஸ்சிங் கேஸ், மிரட்டல், கடத்தல், அப்பா பாசம், காதல், வன்கொடுமை என பல விஷயங்களை சொல்லியிருப்பது குழப்புகிறது. திரில்லர் பாணியிலான ரைட் கதையை 'லைட்டாக' காண்பித்து இருப்பது மைனஸ்.
ரைட் - போலீஸ் ஸ்டேஷன் கதைகளில் வித்தியாசமானது, ஆனா, சுமார் ரகம்.