உள்ளூர் செய்திகள்

பல்டி

தயாரிப்பு : சாந்தோஷ் டி.குருவில்லா, பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்
இயக்கம் : உன்னி சிவலிங்கம்
நடிப்பு : ஷேன் நிகாம், சாந்தனு, ப்ரீத்தி அஸ்ராணி, செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், பூர்ணிமா இந்திரஜித்
இசை : சாய் அபயங்கர்
ஒளிப்பதிவு : அலெக்ஸ்
வெளியான தேதி : செப்டம்பர் 26, 2025
நேரம் : 2 மணிநேரம் 34 நிமிடம்
ரேட்டிங் : 2.75 / 5

செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், பூர்ணிமா இந்திரஜித் ஆகியோர் வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிக்கும் தாதாக்கள். அவர்களின் ஈகோ, தொழில் போட்டியில் 'சூழ்நிலை' காரணமாக சிக்குகிறார்கள் ப்ரண்ட்ஸ் கம் கபடி விளையாட்டு வீரர்களான ஷேன் நிகாம், சாந்தனு. மூவரில் கொடூரரான செல்வராகவன் அணியில் சேர்ந்து நண்பர்கள் இருவரும் கபடி விளையாடுகிறார்கள். பின்னர், இவர்களை வைத்து 'ரத்த' கபடி விளையாடுகிறார் செல்வராகவன். ஏன்? யார் ஜெயித்தார்கள் என்பது பல்டி கதை. தமிழகம், கேரளா பார்டரில் இருக்கும் பாலக்காடு அருகே கதை நடக்கிறது. மலையாளத்தில் மட்டுமல்ல, தமிழிலும் டப்பாகி பல்டி வெளியாகி உள்ளது.

பாலக்காடு அருகே உள்ள ஏரியாவில் கில்லி பட பாணியில் கபடி விளையாட்டுடன் கதை தொடங்குகிறது. இது, பக்கா ஸ்போர்ட்ஸ் படம் போல, கபடி பின்னால் இருக்கும் பாலிடிக்ஸ், சண்டையை சொல்லப்போகிறார்கள் என நினைத்தால் கொஞ்ச நேரத்தில் கதை வேறு பக்கம் போகிறது. வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு , வட்டி கட்டாதவர்களை நிர்வாணமாக மிரட்டும் வில்லனாக அறிமுகம் ஆகிறார் செல்வராகவன். அவருக்கும் வட்டி தொழில் செய்யும் சோடா பாபு என்ற அல்போன்ஸ் புத்திரனுக்கும் தொழிற்போட்டி. பணத்தேவைக்காக செல்வராகவன் அணியில் சேரும் ஷேன் நிகாமும், சாந்தனுவும் அல்போன்ஸை புரட்டி எடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஷேன் காதலி ப்ரீத்தி அஸ்ராணி அண்ணனும், செல்வராகவனால் பாதிக்கப்பட, காதலிக்காக களம் இறங்குகிறார் ஹீரோ. ஒரு கட்டத்தில் செல்வராகவன் மீது அவர் கை வைக்க, அவரை கொல்ல துரத்துகிறது செல்வராகவன் டீம். இடையில் இன்னொரு தாதாவான பூர்ணிமாவும் பாலிடிக்ஸ் செய்கிறார்கள். அப்போது ஷேன் உயிர் நண்பரான சாந்தனு என்ன செய்தார்? எப்படி மாறுகிறார் என்பதை ஆக்ஷன் பேக்கிரவுண்ட்டில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் உன்னி சிவலிங்கம். (இவர் பாதி தமிழர்)

ஸ்டடைலான கபடி வீரரான களம் இறங்கும் ஷேன் நிகாம் கேரக்டர், நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. அவரின் லவ் சீன், ஆக் ஷன் சீன், குறிப்பாக ஓட்டல் பைட், அல்போன்ஸ் புத்திரன் ஏரியா பைட், கிளைமாக்ஸ் பைட் ஆகியவை படத்துக்கு பிளஸ். அவருக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்கள். அவரின் நண்பராக 2வது ஹீரோவாக வரும் சாந்தனுவும் அவருடன் சேர்ந்து பைட் சீன், கபடி சீன்களில் கலக்கியிருக்கிறார். கிளைமாக்சில் அவர் தவிப்பது, இன்னொரு முகமாக மாறுவது அட, நம்ம சாந்தனுவாக இவர் என கேட்க வைக்கிறது.

வட்டிக்கு பணம் கொடுத்து மிரட்டும் தாதாவாக வரும் செல்வராகவன் அமைதியாக பேசி, அதிரடியாக மிரட்டுகிறார். கிளைமாக்ஸில் அவர் ஆடும் ரத்த தாண்டவம் மிரட்டல். இன்னொரு வில்லனாக வரும் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனும் மனதில் நிற்கிறார். சுருட்டு பிடிக்கும் வில்லி பூர்ணிமா ஏதோ செய்யப்போகிறார் என நினைத்தால் மனதில் நிற்கவில்லை அவரது கதாபாத்திரம்.

ஷேன் காதலியாக வரும் ப்ரீத்தி அஸ்ராணிக்கு வாய்ப்புகள் குறைவு. ஆனாலும், கிடைத்த இடங்களில் ஸ்கோர் செய்கிறார். ஜாலக்காரி சாங்கில் அவர் டான்ஸ் கியூட். பாலக்காடு பகுதியில் கதை நடந்தாலும், அந்த கேரளா டச்சிங் மிஸ்சிங். பல சமயம் தமிழ்படம் பார்ப்பது மாதிரியான உணர்வு வருகிறது. கபடி, சண்டை காட்சிகளை இயல்பாக காண்பிக்கிறது அலெக்ஸ் கேமரா. சாய் அபயங்கரின் ஜாலக்காரி தாளம் போட வைக்கிறது. பின்னணியில் இசையில் ஏதோ முயற்சி செய்து இருக்கிறார் என புரிகிறது. சில இடங்களில் அது செட் ஆகவில்லை.

கபடி, சண்டை, பிரச்னை என முதற்பாதி ஓட, கதை எங்கே என தேட வேண்டியது இருக்கிறது. இடைவேளைக்குபின் ரொம்ப நேரம் கதையில் பரபரப்பு இல்லை. செல்வராகவன் கேங்குடன் பொள்ளாச்சி மார்க்கெட்டில் போடும் கிளைமாக்ஸ் சண்டைதான் விறுவிறுப்பு, ஆக் ஷன் காட்சிகளை கபடி விளையாட்டுடன் இணைந்து கொடுத்த சந்தோஷ், விக்கி பங்களிப்பு பிரமாதம். சண்டைகாட்சிகளை நீக்கினால் படத்தில் அதிக விஷயம் இல்லை.

இடைவேளைக்குபின் கதை ஆக் ஷனுக்கு நகர்ந்தாலும், ஹீரோயின் எங்கே? அல்போன்ஸ் புத்திரன் எங்கே? இவ்வளவு கொலைகள் நடக்குதே? போலீஸ் எங்கே? கொலைகள் செய்த ஷேன் போலீஸ் ஆவது எப்படி என்பது போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை. இரண்டாம் பாகத்தை மனதில் கொண்டு படத்தை முடித்து இருப்பதால், கிளைமாக்சில் வீரியம் இல்லை. படத்தில் நட்பை சொல்கிறார்களா? துரோகத்தை முன்னிறுத்துகிறார்களா? என்பதில் குழப்பி இருக்கிறார் இயக்குனர். மலையாள படங்களுக்கே உரிய ஒருவித அழுத்தமான திரைக்கதை, சின்ன, சின்ன விஷயங்கள் மிஸ்சிங். மலையாள படம்தான். ஆனா, தமிழ் பட சாயலில் இருக்கிறது.

பல்டி - கபடி, கந்துவட்டி பின்னணியிலான ஆக் ஷன் கதை



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !