ரெட்ட தல
தயாரிப்பு: பிடிஜி யுனிவர்சல்
இயக்கம்: கிரிஷ் திருக்குமரன்
நடிப்பு: அருண்விஜய், சித்தி இட்னானி, பாலாஜி முருகதாஸ், ஜான்விஜய், ஹரீஷ் பெரடி, யோகேஷ்சாமி, தன்யா ரவிச்சந்திரன்
ஒளிப்பதிவு: டிஜோ டாமி
இசை: சாம்.சி.எஸ்.
வெளியான தேதி: டிசம்பர் 25, 2025
நேரம்: 1 மணி 53 நிமிடங்கள்
ரேட்டிங்: 2 / 5
தனது காதலி சித்தி இட்னானியை பார்க்க புதுச்சேரிக்கு வரும் அருண்விஜய், தன்னை போலவே இருக்கும் இன்னொரு அருண்விஜயை பார்த்து மிரள்கிறார். காதலி பேச்சை கேட்டு, பணத்துக்கு ஆசைப்பட்டு அவரை கொன்றுவிட்டு, அவராக மாறுகிறார். கோவாவில் இருந்து ஒரு கூட்டம் கொல்லப்பட்ட அருண்விஜயை 'கொல்ல' நினைக்கிறது. காரணம், அங்கே வில்லன் ஹரீஷ்பெரடி மகனை கொன்று இருக்கிறார் அந்த அருண்விஜய். ஆள் மாறாட்டம் நடந்தது தெரியாமல் இந்த அருண்விஜயை அவர்கள் துரத்துகிறார்கள். சந்தேகத்தின் பெயரில் போலீஸ் ஜான் விஜயும் அருண்விஜயை பின் தொடர்கிறார். இன்னும் சில சம்பவங்களை இந்த அருண்விஜய் செய்ய, கடைசியில் யார், யாரை கொன்றார்கள், யார் மிஞ்சினார்கள் இதுதான் 'ரெட்ட தல' படத்தின் கதை.
புதுச்சேரியை சேர்ந்த காளி, கோவாவை சேர்ந்த உபேந்திரா என இரட்டை வேடத்தில் வருகிறார் அருண்விஜய். இரண்டு பேரும் அண்ணன், தம்பி கிடையாது, இரண்டுபேருக்கும் முன்பு எந்த தொடர்பும் கிடையாது என்பது கதையில் இருக்கும் ஆறுதலான விஷயம்.
காளி தனது காதலிக்காக மாறுகிறார், உபேந்திரா தனது அம்மா பாசத்தில் தடம் மாறுகிறார். அந்தவகையில் இருவருமே நல்லவர்கள், அதேபோல், இருவருமே கெட்டவர்கள். சுயநலத்துக்காக நிறைய தவறு செய்வதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை, ஒருவரை கொன்றுவிட்டு இன்னொருவர் அந்த இடத்துக்கு வருகிறார், என்ன நடக்கிறது என்று மாறுபட்ட கோணத்தில் திரைக்கதை செல்கிறது. ஆனால், படம் தொடங்கியது முதல் கடைசிவரை ஆக் ஷன் காட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.
அடுத்தடுத்த சில நிமிடங்களில் ஒரு ஆக் ஷன் இருக்கிறது அல்லது யாராவது கொல்லப்படுகிறார்கள். இரண்டு அருண்விஜயும் பைட் சீன்களில் பிரமாதமாக நடித்து இருக்கிறார்கள். என்ன, குண்டு அடிபட்டு, கத்தி குத்து வாங்கி, மரண அடி வாங்கி, உயிருக்கு போராடினாலும் டக்கென அதிலிருந்து மீண்டும் அதிரடியாக சண்டைபோடுகிறார் ஹீரோ. ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக். ஹீரோயிசத்துக்கு நிறைய காட்சிகள் இருக்கிறது. அருண்விஜயும் ஈடுபாட்டுடன் நடித்து,சண்டைபோட்டு இருக்கிறார், ஆனால் அது கவரவில்லை. அவரே ஹீரோ, அவரே வில்லன் என்பது கதைக்கு செட்டாகவில்லை.
பணத்தாசை பிடித்த ஹீரோயினாக சித்தி இட்னானி காட்டப்படுகிறார். புதுச்சேரி சம்பந்தப்பட்ட இடங்களில் பணத்துக்காக அவர் மாறுகிற இடங்களில் அவர் நடிப்பு ஓகே. ஒரு பாடல்காட்சியில் அழகாக இருக்கிறார். ஆனால், அவர் கேரக்டர் குழப்பமாக இருக்கிறது. அது மனதில் ஒட்டவில்லை. இன்னொரு அருண்விஜய் காதலியாக தீவ்ரா வருகிறார். கொஞ்ச சீன்களில் வந்தாலும் அவர் நடிப்பு ஓகே. அருண்விஜயால் கொல்லப்படும் பாலாஜிமுருகதாஸ் மனைவியாக தன்யா ரவிச்சந்திரன் வருகிறார். அவர் கேரக்டரும், நடிப்பும் மிகைப்படுத்தல். கிளைமாக்சில் மட்டும் அவர் செய்யும் சம்பவம் சூப்பர்.
போலீசாக வரும் ஜான்விஜய் கேரக்டரும், வழக்கமான அவரின் ஓவர் ஆக்டிங் நடிப்பும் படத்துக்கு பெரிய மைனஸ். அதிலும் இரட்டை அர்த்த வசனங்கள் பேசிக்கொண்டு அவர் செய்கிற வேலைகள் முகம் சுளிக்க வைக்கிறது. பல படங்களில் பார்த்த அதே நடிப்பை தருகிறார் இன்னொரு வில்லன் ஹரீஷ் பெரடி. அந்த டீமில் இருக்கிற இன்னொரு வில்லன் யோகேஷ்சாமியும் அவ்வப்போது வந்த சண்டையிடுகிறார். படத்தில் நிறைய வில்லன்கள் இருந்தும், யாருமே மனதில் நிற்கவில்லை.
ரெட்ட தல படத்தில் பெரிய பிளஸ், டிஜோ டாமியின் ஒளிப்பதிவு. ஹாலிவுட் படங்கள் மாதிரி சில சீன்கள் மாஸ் ஆக, தெளிவாக இருக்கிறது. அதிலும் பெரும்பாலான காட்சிகள் இரவில் நடக்கிறது. அதையும் அழகாக காண்பிக்கிறது கேமரா. சாம் சி.எஸ். பின்னணி இசையை ரசித்து செய்து இருக்கிறார். தனுஷ் பாடிய அந்த கண்ணம்மா பாடல் இதம். படம் தொடங்கியது முதல் கடைசிவரை திரைக்கதையில், எடிட்டிங்கில் ஏகப்பட்ட குழப்பம். என்ன நடக்கிறது, இவர்கள் யார் என்று புரிவதற்குள் அடுத்த சீன் வந்துவிடுகிறது. தவிர, படம் முழுக்க சண்டைபோட்டுக்கொண்டே, சுட்டுக்கொண்டே, அடித்துக்கொண்டே இருக்கிறார்கள். அது போரடிக்கிறது. இயக்குனரை விட, பைட்மாஸ்டர்தான் அதிக வேலை செய்து இருக்கிறார் போல.
ஒருவன் கெட்டவன், இன்னொருவன் அதைவிட கெட்டவன். இருவரின் ஆள் மாறாட்டம் என்ற ரீதியில் கதை சென்றாலும், அதை எளிமையாக, நேர் கோட்டில் சொல்ல முடியாமல் இயக்குனர் தவித்து இருக்கிறார். கிளைமாக்ஸ் டுவிஸ்ட் கூட அழுத்தமாக இல்லை. ஹீரோயின் கேரக்டரிலும் ஏகப்பட்ட குழப்பம். அவர் நல்லவரா? கெட்டவாரா என்று பிடிபடவில்லை. இந்த படத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே கடைசிவரை பிடிபடவில்லை. மான் கராத்தே என்ற படமெடுத்த இயக்குனர் இவரா என்ற சந்தேகம், ரெட்ட தலயை பார்க்கும்போது வருகிறது. படத்துல நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். பைட், கொஞ்சம் காதல் இருக்குது, சென்டிமென்ட் இருக்குது. ஆனா, கதை இல்லை, தேடி பார்த்தாலும் சுவாரஸ்யம் இல்லை.
ரெட்ட தல - ஒரு தல, அரை தல.அட, போங்க! கால்வாசி தல கூட நிமிரவில்லை