உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / விருஷபா (மலையாளம், தெலுங்கு)

விருஷபா (மலையாளம், தெலுங்கு)

தயாரிப்பு : ஷோபா கபூர் - ஏக்தா கபூர்
இயக்கம் : கவுரி நந்தா
நடிப்பு : மோகன்லால், சமர்ஜித் லங்கேஷ், ராகினி திவிவேதி, நேகா சக்சேனா, ராமச்சந்திர ராஜு, அஜய்
ஒளிப்பதிவு : ஆண்டனி சாம்சன்
இசை : சாம் சி.எஸ்
வெளியான தேதி : 25 டிசம்பர் 2025
நேரம் : 2 மணி 17 நிமிடங்கள்
ரேட்டிங் : 2.75 / 5

மன்னர் காலத்து கதையையும், நவீன காலத்து நிகழ்வுகளையும் இணைத்து உருவாகியுள்ள மறு ஜென்மக்கதை தான் இந்த விருஷபா.

மன்னர் விருஷபாவான மோகன்லால், தனது நாட்டில் உள்ள லிங்கத்தை எதிரி அபகரித்து செல்ல முயற்சிக்கும்போது அதை தடுக்கும் போரில் தப்பிச்செல்லும் எதிரியின் மேல் ஒரே நேரத்தில் மூன்று அம்புகளை எய்கிறார். அதில் ஒன்று எதிரியை கொல்வதுடன் வழியில் தாயுடன் நடந்து சென்ற ஒரு அப்பாவி சிறுவனையும் கொன்றுவிடுகிறது.. மகனை இழந்த அந்த தாய் நீயும் உன் கண்முன்னே உன் மகனை இழந்து தவிப்பாய் என்று சாபம் விடுகிறார். சில நாட்களில் ராணி ராகினி திவிவேதி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்க, இந்த சாபம் காரணமாக குழந்தைக்கு பின்னாளில் ஏதாவது ஆகி விடுமோ என்று பயந்து, தனது சேனாதிபதி அஜய் மற்றும் அவரது மனைவி நேகா சக்சேனாவிடம் அந்த குழந்தையை ஒப்படைத்து மறைவாக வளர்க்கச் சொல்கிறார் மோகன்லால்.

நிகழ்காலத்தில் மிகப்பெரிய தொழில் அதிபரான மோகன்லால், தாய் இல்லாத தனது மகன் சமர்ஜித் லங்கேஷை மிகுந்த அன்புடன் வளர்க்கிறார். மோகன்லாலின் சொந்த ஊர் திருவிழாவிற்கு தனது காதலியையும் அழைத்துக் கொண்டு செல்கிறார் சமர்ஜித். அங்கே மோகன்லாலை கொல்வதற்காக காத்திருக்கும் ராமச்சந்திர ராஜு கும்பல், அவரது மகன் வருகையை அறிந்து அவரை கொல்ல முயற்சிக்கிறது. அந்த சமயத்தில் மோகன்லாலும் அங்கே வர, தந்தையும் மகனும் சேர்ந்து எதிரிகளை அடித்து நொறுக்கும் வேளையில் எதிர்பாராத விதமாக திடீரென ஆக்ரோசமாக தந்தை மோகன்லாலையே கத்தியால் குத்துகிறார் மகன் சமர்ஜித்.

இருப்பினும் மோகன்லால் உயிர் பிழைக்கிறார். திடீரென மகனே தந்தையை கத்தியால் குத்தியது ஏன் ? மன்னர் காலத்தில் ஒரு ஏழைத்தாய் விட்ட சாபம் நிகழ்காலத்திலும் பலித்ததா ? மோகன்லாலுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் தெரிய வந்ததா ? மகனே தனக்கு எதிராக திரும்பிய பிறகு மோகன்லால் மீதி விஷயங்களை எப்படி எதிர்கொள்கிறார் ? இதற்கு எப்படி சமூகமான தீர்வு கிடைக்கிறது என்பது மீதிக்கதை.

மன்னர் விஜயேந்திர விருஷபா ஆகவும் தொழிலதிபர் ஆதி தேவா வர்மா ஆகவும் இரண்டு கதாபாத்திரங்களிலும் மோகன்லால் கம்பீரம் என்றாலும் மன்னர் காலத்தில் வரும் மோகன்லாலுக்கு அந்த கெட்டப் நன்றாகவே பொருந்தி இருக்கிறது. மன்னர் காலத்து சண்டைக் காட்சிகளிலும் தன் வீர தீர பராக்கிரமங்களைக் காட்டி அசரடிக்கிறார் மோகன்லால். மகனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என இரண்டு வித காலகட்டங்களிலும் அவர் பதறுவதும் ஒரு கட்டத்தில் நிலைமை தன் கைமீறி செல்வது கண்டு தவிப்பதும் என ஒரு பாசமுள்ள தந்தையின் தவிப்பையும் மிக இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

மோகன்லாலின் மனைவியாக, அரசியாகவும் நிகழ்காலத்தில் அவரது தோழியாகவும் என இரண்டு விதமான தோற்றங்களில் ராகினி திவிவேதி. ஆனால் மன்னர் காலத்தில் ஒரு கத்தி சண்டை வீராங்கனை ஆக பார்ப்பதற்கு பிரமிக்க வைக்கிறார். மோகன்லாலுக்கு பதிலாக களம் இறங்கி எதிராளியுடன் அவர் போடும் கத்தி சண்டை பிரமிக்க வைக்கிறது. ஆனால் அந்த சண்டையில் அவரது முடிவு பதைபதைக்க வைக்கிறது. அதுவே மறு ஜென்மக் கதைக்கு விதையாகவும் மாறுகிறது.

மோகன்லாலின் மகனாக சமர்ஜித் லங்கேஷ். கன்னடத்தில் இருந்து தெலுங்கிற்கு புதுவரவாக வந்திருக்கிறார். கம்பீரமான தோற்றத்துடன் ஆக் ஷன் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார். தந்தையுடன் மோதல் காட்சிகளிலும் குறை வைக்கவில்லை. மோகன்லாலின் விசுவாசிகளாக அஜய் மற்றும் அவரது மனைவியாக நேகா சக்சேனா இருவருமே மிகப் பொருத்தமான தேர்வு.. வழக்கமான உள்ளூர் தாதா போல ராமச்சந்திர ராஜு இரண்டு சண்டைக் காட்சிகளில் வந்து போகிறார்.. நகைச்சுவை நடிகர் அலி, நடிகர் கிஷோர் ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டும் சாதாரணமாக கடந்து செல்கின்றனர். சமர்ஜித்தின் காதலியாக வரும் நயன் சரிகா தான் கதையை நகர்த்தி செல்வார் என எதிர்பார்த்தால் கதை அவரை ஓரமாக நகர்த்தி வைத்துவிட்டு செல்கிறது.

ஒளிப்பதிவாளர் ஆன்டனி சாம்சனின் இரண்டு விதமான காலகட்டங்களுக்கான ஒளிப்பதிவிலும் மிக நேர்த்தி. அதிலும் மன்னர் காலகட்டத்தில் விஎப்எக்ஸ் குழுவும் இவரது வேகத்திற்கு ஈடு கொடுத்து ஒத்துழைத்து இருக்கின்றது. சாம் சி.எஸ் வழக்கம்போல பின்னணி இசையில் தன் பங்கை செவ்வனே செய்திருக்கிறார். அதிலும் கிளைமாக்ஸில் யாகம் வளர்க்கும் அந்த காட்சியில் பரபரப்பையும் திகிலையும் ஏற்படுத்துகிறது இவரது இசை.

மறு ஜென்ம கதைகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை.. நிகழ்காலத்துடன் அவற்றை எப்படி இணைக்கிறார்கள் என்பதில் தான் அதன் வெற்றியே அடங்கி இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் மன்னர் காலகட்டத்தில் நடக்கும் நிகழ்வை மிகச் சரியாக சொன்னாலும் அதை நிகழ்காலத்தில் பொருத்தி அதற்கான தீர்வை சொல்வதில் இயக்குனர் கவுரி நந்தா கொஞ்சம் குழம்பி இருக்கிறார் என்றே தெரிகிறது. தந்தை மற்றும் மகனின் ஒரு சிறிய ஈகோவினால் தாயின் உயிர் பிரிவது எதிர்பாராதது என்றாலும் மறு ஜென்மக் கதைக்கு வித்திட்ட அந்த தாயின் கதாபாத்திரத்தை நிகழ்கால காட்சிகளில் மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுக்காமலும் கதையின் கிளைமாக்ஸ் உடன் அவரை சரியாக இணைக்காமல் விட்டதும் மிகப்பெரிய பலவீனம்.

குறிப்பாக தாயின் முகத்தை ஒருமுறை கூட பார்த்தேயிராத மகன் அவர் யார் என்றே அறியாமல் தன் கையாலேயே அவரைக் கொன்ற பிறகு, நிகழ்காலத்தில் அவர் முகத்தைப் பார்த்ததும் மறு ஜென்ம ஞாபகம் வருவது போல காட்டி இருப்பது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. அந்த இடத்தில் இணைப்பு வேலைகளை கொஞ்சம் கவனமாக கையாண்டிருக்கலாம். மற்றபடி பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படம் என்பதால் தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.

விருஷபா : மோகன்லால் பட்டியலில் இன்னொரு படம்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !