உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / சர்வம் மாயா (மலையாளம்)

சர்வம் மாயா (மலையாளம்)

தயாரிப்பு ; பயர்லி பிலிம்ஸ் & அகில் சத்யன் பிலிம்ஸ்
இயக்கம் : அகில் சத்யன்
நடிப்பு : நிவின்பாலி, ரியா ஷிபு, ப்ரீத்தி முகுந்தன், அஜு வர்கீஸ், ஜனார்த்தனன், வினித்
ஒளிப்பதிவு : சரண் வேலாயுதன்
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
வெளியான தேதி : டிசம்பர் 25 2025
நேரம் : 2 மணி 27 நிமிடங்கள்
ரேட்டிங் : 2.5 / 5

தந்தையும் சகோதரனும் புரோகித சடங்குகள் செய்பவர்களாக பிசியாக இருக்க, நாயகன் நிவின்பாலியோ அதில் நாட்டம் இல்லாமல் தனக்கு பிடித்த கிடார் இசை கலைஞராக உருவெடுக்க முயற்சிக்கிறார். ஒரு இசைக்குழுவில் சேர்ந்து அவ்வப்போது நிகழ்ச்சிகளில் வாசிக்கிறார். ஒரு கட்டத்தில் இரண்டு மாதம் வெளிநாடு செல்லும் இசைக்குழுவில் இவருக்கு விசா கிடைக்காததால் வேலையின்மை ஏற்படுகிறது. இதனால் ஏற்கனவே தன்னை உதவிக்கு அழைத்த தன் நண்பனான புரோகிதர் அஜூ வர்கீஸ் உடன் இணைந்து பல நிகழ்ச்சிகளுக்கு உதவியாளராக செல்கிறார். கொஞ்ச நாட்களில் தனி ஆளாக புரோகித சடங்குகளை செய்யும் அளவிற்கு வளர்கிறார்.

அப்படி ஒரு நாள் ஒரு வீட்டில் சிறுவன் ஒருவனுக்கு பேய் பிடித்து உள்ளதோ என்கிற சந்தேகத்தில் அவர்களது பெற்றோர் அழைக்க, அதற்கான சடங்குகளை செய்வதற்கு அங்கே செல்கிறார் நிவின்பாலி. சடங்கு முடிவதற்குள் பையனுக்கு குணமாகிவிடுகிறது. ஆனால் அன்று இரவு நிவின்பாலியின் அறையில் இளம்பெண் ரியா ஷிபு திடீரென தோன்றுகிறார். அதன்பிறகு தான் அந்தப் பையனை பிடித்து இருந்த ரியா ஷிபு தற்போது தன் வீட்டிற்கு வந்ததை உணர்கிறார் நிவின்பாலி. ஆரம்பத்தில் அவர் பயந்தாலும், அமைதியான குணம் கொண்ட ரியா ஷிபு தான் அவரை தொந்தரவு செய்ய மாட்டேன் என்றும் தான் யார் என்றே தெரியவில்லை என்றும் கூறுகிறார். போகப் போக இருவருக்கும் நட்பாகிறது.

ஒரு கட்டத்தில் நிவின்பாலிக்கு மும்பையில் கிடார் இசைப்பதற்காக பட வாய்ப்பு ஒன்று வருகிறது. அதற்காக அவர் மும்பை செல்கிறார். அங்கே பணியாற்றும் ப்ரீத்தி முகுந்தனுடன் நட்பு ஏற்படுகிறது. இதை பார்த்து பொசசிவ் ஆகும் ரியா ஷிபு நிவின்பாலியை காதலிப்பதாக கூறுகிறார்.. அந்த சமயத்தில் ரியா ஷிபுவுக்கு தான் யார் என்று தெரிய வருகிறது. அதற்குப் பிறகு என்ன ஆனது என்பது கிளைமாக்ஸ்.

தான் யார் என்றே தெரியாத இளம்பெண்ணின் ஆவி கதாநாயகனுடன் நட்பாக பழகுவது போன்று ஏற்கனவே சில படங்கள் வந்துவிட்டன. குறிப்பாக நயன்தாரா அறிமுகமான காலகட்டத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்த விஸ்மாயதும்பத்து கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்தது போல இதன் பாதிக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாளைக்கு பிறகு நிவின்பாலியை காமெடி கலந்த நடிப்பில் பார்க்கும்போது அவர் பழைய பார்முக்கு வந்து விட்டார் என்பாத்து தெரிகிறது. ஆனால் ஏற்கனவே பலமுறை பார்த்து பழகிய கதையும் மோசமான திரைக்கதையும் அவரது முயற்சியை வீணடித்துள்ளன. சீரியஸ் கதாபாத்திரங்களை ஒதுக்கி விட்டு வழக்கமான காமெடி கலந்த தனது ரூட்டிற்கு நிவின்பாலி திரும்பி வந்ததற்காக அவருக்கு ஒரு சபாஷ் சொல்லலாம். ஆனால் கதை தேர்வில் இன்னும் அவர் கவனம் செலுத்தினால் தான் விட்ட இடத்தை பிடிக்க முடியும்.

கதாநாயகியாக ரியா ஷிபு துறுதுறுவென ஜாலியான இளம்பெண்ணாக கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். ஆவியாக இருந்து கொண்டே திடீரென யாரோ கதவை திறந்து கொண்டு வரும்போது பயப்படுவது சரியான காமெடி, மலையாள சினிமாவில் இனி இவரை அடிக்கடி பார்க்க முடியும்

இன்னொரு நாயகியாக இடைவேளைக்குப் பின் வரும் ப்ரீத்தி முகுந்தன், காதல் பிரேக்கப் உடன் அறிமுகமாகி உடனடியாக நிவின்பாலியுடன் காதல் வயப்படும்போது இன்றைய இளம் பெண்களின் மனோபாவத்தை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

நடிகர் அஜூ வர்கீஸை நீண்ட நாளைக்கு பிறகு அதுவும் காமெடி கதாபாத்திரத்தில் பார்க்கும்போது, நிவின்பாலி, அஜு வர்கீஸ் கூட்டணி கம்பேக் என்று சொல்ல வைக்கிறது. நிவின்பாலியின் பெரியப்பாவாக வரும் ஜனார்த்தனன், ரியா ஷிபுவின் தந்தையாக சில காட்சிகளே வந்து போகும் வினித், கொரியர் பையனாக வரும் அல்தாப் சலீம் என இன்னும் சிலர் குறிப்பிடத்தக்க கவனம் பெறுகின்றனர்.

சரண் வேலாயுதனின் ஒளிப்பதிவு வழக்கமான ஒரு சினிமாவுக்கான வேலைகளை மட்டும் சரியாக கையாண்டிருக்கிறது ஜஸ்டின் பிரபாகரன் இசையில் இரண்டு பாடல்கள் மெலடியாக கவர்கின்றன.

இயக்குனர் அகில் சத்யன் ஒரு பீல் குட் படமாக இதை கொடுக்க முயற்சித்து இருக்கிறார். ஆரம்பத்தில் நிவின்பாலியின் கதாபாத்திரத்தை இவர் காட்டியது அதன்பிறகு கதையை நகர்த்திய விதம், பின்னர் கதாநாயகியை ஆவியாக நிவின்பாலி வீட்டிற்கு கொண்டு வந்தது வரை எல்லாமே மிக சரியாக தான் இருக்கிறது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு கதையை எப்படி கொண்டு போவது என தடுமாறி இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் இல்லை.. நம் மனதில் ஒட்டவும் இல்லை.

சர்வம் மாயா : கானல் நீர் காதல்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !