உள்ளூர் செய்திகள்

டியர் ரதி

தயாரிப்பு : மோகனா மஞ்சுளா.எஸ்.
இயக்கம் : பிரவீன் கே மணி
நடிப்பு : சரவண விக்ரம், ஹஸ்லி, ராஜேஷ் பாலசந்திரன், சரவணன் பழனிசாமி
ஒளிப்பதிவு : லோகேஷ் இளங்கோவன்
இசை : ஜோன்ஸ் ரூபர்ட்
வெளியான தேதி : ஜனவரி 2, 2026
நேரம் : 2 மணிநேரம் 10 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5

ஐடியில் வேலை பார்க்கும் ஹீரோ சரவண விக்ரமுக்கு பெண்களை பார்த்தால் கூச்சம், பழக பயம். விளைவு, இரண்டு காதல் தோல்விகள். இந்த குணத்தை மாற்ற, ஒரு பலான பார்லருக்கு அவரை அழைத்து செல்கிறான் நண்பன். அங்கு பழக்கமாகும் இளம் பெண் ஹஸ்லியுடன் நட்பாக ஒரு நாள் ஜாலியாக சுற்ற ஆசைப்படுகிறார் ஹீரோ. கொஞ்சம் வெயிட்டாக பணம் வாங்கிக் கொண்டு அந்த டீலுக்கு சம்மதிக்கிறார் ஹஸ்லி. இரண்டுபேரும் பைக்கில் சுற்றி வரும்போது, வில்லன் ராஜேஷ் டீமும், போலீஸ்காரர் சரவணன்பழனிசாமியும் இவர்களை துரத்துகிறார்கள். என்ன பிரச்னை? இருவரும் சிக்கினார்களா? கடைசியில் என்ன நடக்கிறது. இதுதான் டியர் ரதி கதைக்கரு. டார்க் காமெடி ஜானரில் கொஞ்சம் அடல்ட் கன்டன்ட் கலந்து புது வித திரைக்கதை அமைப்பில் படத்தை இயக்கியிருக்கிறார் புதியவரான பிரவீன் கே மணி.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடைக்குட்டி தம்பி கண்ணனாக நடித்த சரவண விக்ரம், டியர் ரதியில் ஹீரோ. ரதியாக நடித்து இருப்பவர் மலையாளத்தில் சில படங்களில் நடித்த ஹஸ்லி. பல நடிகர்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுப்பவர் வில்லன் ராஜேஷ். இவர்கள் மூவரை சுற்றிதான் கதை நடக்கிறது. இது காதல் அல்ல, காமம் கதையும் அல்ல. இன்னும் சொல்லப்போனால் எக்ஸ்பரிமண்டல் சப்ஜெக்ட். கொஞ்சம் குறும்புதனமான நடிப்பு, வித்தியாசமான ஆசை, அப்பாவிதனமான கேள்விகளுடன் ஓரளவு நன்றாகவே நடித்து இருக்கிறார் சரவண விக்ரம்.

2கே கிட்ஸ்க்கு பிடிக்கும் வகையில் அவருடைய கேரக்டரை வடிவமைத்து இருக்கிறார் இயக்குனர். ஹஸ்லிக்கும் அவருக்குமான சீன்கள், டயலாக், பயணம் படத்தை யூத் புல்லாக்கி இருக்கிறது. பலான தொழில், நட்பான பேச்சு, துப்பாக்கி எடுத்து வில்லன் டீமை மிரட்டுவது, கடைசியில் ஒரு கதை சொல்லி ஹீரோவை ஓட விடுவது என பல இடங்களில் மிரட்டியிருக்கிறார் ஹீரோயின் ஹஸ்லி. அவர் கண்கள் அவ்வளவு அழகு. அதுவே பல ககைகள் சொல்கிறது. ஒரு மாதிரியான கேரக்டர் என்றாலும் ஆபாசம் இல்லாமல் அவரை காண்பித்து இருக்கிறார் இயக்குனர்.

கொஞ்சம் லுாசுத்தனமான கேரக்டர் என்றாலும், ஹீரோ, ஹீரோயினை விட நடிப்பில் முத்திரை பதிப்பவர் வில்லனாக வரும் ராஜேஷ் பாலசந்திரன் தான். அவரின் பாடிலாங்குவேஜ், கோபம், ஆக் ஷன் படத்துக்கு பிளஸ். சில இடங்களில் ஓவர் ஆக்டிங். இவர்களை தவிர, பார்லர் ஓனராக வருபவர், ராஜேஷ் டீம், ஹீரோ நண்பன் என பலரும் தங்கள் பங்களிப்பை நிறைவாக செய்து இருக்கிறார்கள். போலீசாக வரும் சரவணன் பழனிசாமி நடிப்பு ஓகே. ஆனால், அந்த பாம்பே டயலாக் டூ மச்.

டார்க் காமெடியில் சில சீன்கள் நகர்வால், அந்த ஜானரை ரசிக்காதவர்களுக்கு சில டயலாக், சீன் டக்கென புரியாது. தவிர, குழப்பமான திரைக்கதை, படம் முழுக்க யாராவது ஒருவர் பேசிக்கொண்டே இருப்பது, சம்பந்தம் இல்லாமல் தகவல், கதை சொல்வது போராடிக்கிறது. கதை எங்கேயோ சுற்றி, எங்கேயோ வருகிறது. தான் கற்றுக்கொண்ட அனைத்து வித்தைகளையும் இந்த படத்தில் சொல்ல நினைத்து இருக்கிறார் இயக்குனர். அது சலிப்பை ஏற்படுத்துகிறது. சில கேரக்டர்கள் என்ட்ரி புதுமையாக இருக்கிறது. அவர்கள் செயல்களும் அப்படி. ஆனால், வில்லன் டீம், அவர்களின் சேசிங், ஹீரோயின் கேரக்டர் ஒரு கட்டத்தில் ரொம்பவே போரடிக்கிறது.

லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு சில சேசிங், சில காட்சிகளை அழகாக காண்பிக்கிறது. ஜோன்ஸ் ரூபர்ட் இசை சுமார் ரகம். படம் ஆரம்பித்து பல நிமிடங்கள் மட்டுமல்ல, இந்த படத்தில் என்ன சொல்ல வருகிறார்கள். அடுத்து என்ன நடக்கப்போகுது என்ற குழப்பமே மிஞ்சுகிறது.

கொஞ்சம் வித்தியாசமான சினிமாவை விரும்புகிறவர்களுக்கு படம் பிடிக்கலாம். பெண்கள், நடுத்தர வயதை கடந்தவர்களுக்கு திரைக்கதை, இயக்குனர் சொல்ல நினைக்கும் விஷயம் தலை சுற்றும். அதிலும் கிளைமாக்சில் ஒரு கதை சொல்லிவிட்டு சிரிக்கிறார் ஹீரோயின், அதை கேட்டு சில விஷயங்களை உணர்ந்து கடற்கரையில் ஓடுகிறார் ஹீரோ. அது பலருக்கும் பிடிபடவில்லை. அதை புரிந்தவர்களுக்கு, அடச்சீ என்ன மாதிரியான கதை என்று கோபம் வருவது உறுதி

டியர் ரதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் தம்பிக்கு ஏனிந்த விஷப்பரீட்சை



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !