உள்ளூர் செய்திகள்

தி பெட்

தயாரிப்பு : ஆஞ்சநேயா புரடக் ஷன்ஸ்
இயக்கம் : எஸ்.மணிபாரதி
நடிப்பு : ஸ்ரீகாந்த், சிருஷ்டிடாங்கே, பிளாக்பாண்டி, ஜான்விஜய்
ஒளிப்பதிவு : கோகுல்
இசை : தாஜ்நுார்
வெளியான தேதி : ஜனவரி 2, 2026
நேரம் : 2 மணிநேரம் 10 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5

சென்னையில் ஐடியில் வொர்க் பண்ணும் ஸ்ரீகாந்த், பிளாக்பாண்டி, விஜே பப்பு, விக்ரம் உள்ளிட்ட நாலு நண்பர்கள், கால் கேர்ள் சிருஷ்டி டாங்கேயை அழைத்துக்கொண்டு ஊட்டிக்கு இன்ப சுற்றுலா செல்கிறார்கள். ஒரு ரிசார்ட்டில் தங்குகுகிறார்கள். ஆனாலும், அவர்கள் நினைத்தது அங்கே நடக்கவில்லை. இதற்கிடையில் திடீரென சிருஷ்டி டாங்கே காணாமல் போகிறார். நண்பர்களில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். என்ன நடந்தது என போலீஸ் அதிகாரி ஜான் விஜய் விசாரிக்கிறார். உண்மையில் சிருஷ்டிக்கு என்ன ஆனது. கொலையாளி யார்? இதுதான் தி பெட் கதை. ஊட்டியில் ரிசார்ட் அறையில் இருக்கும் ஒரு பெட், கதை சொல்வதாக படம் நகர்கிறது.

ஒரு மாதிரியான கிளுகிளு கதைதான். ஆனாலும், அதை ஓரளவு நாகரீகமாக எடுத்து இருக்கிறார் இயக்குனர். இப்படிப்பட்ட கதையில் ஸ்ரீகாந்த்தா? என சந்தேகம் எழுந்தாலும், நாலு நண்பர்களில் கொஞ்சம் நல்லவராக அவர் வருகிறார். மற்ற நண்பர்கள் சிருஷ்டி மீது வேறு பார்வை பார்க்க, இவரோ காதலிக்க ஆரம்பிக்கிறார். ஸ்ரீகாந்த் நடிப்பில் பெரிய மாற்றம் இல்லை. கடைசி அரைமணி நேரம் அவர் கேரக்டர், அவர் நடிப்பு செம டுவிஸ்ட். குடும்ப கதையில் நடித்தவர் இப்படிப்பட்ட சப்ஜெக்ட்டுக்கு ஏன் மாறினார்னு தெரியலை. கதையின் முதற்பாதி முழுக்க சிருஷ்டியுடன் டூர், பேச்சு, ஜொள்ளு என நகர்கிறது. அடுத்தபாதி போலீஸ் விசாரணை, சந்தேகம் என செல்கிறது. இரண்டாம் பாதி செம போர்.

நாலு நண்பர்கள் ஊட்டியில் அடிக்கிற லுாட்டியை, தவிப்பை இளம் ஆண்கள் ரசிக்கலாம். மற்றவர்கள் முகம் சுளிப்பார்கள். என்ன செய்ய, கதை அப்படி. கால் கேர்ள் கேரக்டர் என்றாலும், ஓவர் கவர்ச்சி, ஆபாசமின்றி நடித்து இருக்கிறார் சிருஷ்டி. பார்க்க அழகாக இருக்கிறார், என்ன இடைவேளைக்குபின் காணாமல் போய்விடுகிறார். அப்போது விசாரணை என்ற பெயரில் ஜான் விஜய் செய்கிற சேட்டைகள், அவரின் குடும்ப வாழ்க்கை விஷயங்கள் ரொம்பவே ஓவர். ஜான்விஜய்க்கு இந்த ஆண்டாவது போலீஸ் கேரக்டர் கொடுக்காதீங்கப்பா, அவரின் ஆர்வக்கோளாறு நடிப்பு இம்சை தாங்க முடியலை. போலீசாக வரும் சீரியல் நடிகை தேவிப்ரியாவுக்கும் அதிக வேலை இல்லை. ஜான்விஜய் மனைவியாக வரும் ரிஷா செய்கை வேறு ரகம்.

நாலு நண்பர்களில் பிளாக் பாண்டி தனது காமெடிதனத்தால் கவனம் ஈர்க்கிறார். சிருஷ்டி அம்மாவாக வரும் திவ்யா, 'அந்த' வேலையை ஏதோ சோஷியல் வொர்க் மாதிரி சர்வ சாதாரணமாக செய்கிறார், மகளுக்கு ரேட் பிக்ஸ் செய்து, அனுப்புகிறார். கூகுளில் தேடி அந்த சேவை பெறுகிறார்கள் இளைஞர்கள். மற்ற இரண்டு நண்பர்கள் நடிப்பு சுமார். சென்னையை விட, ஊட்டி போர்ஷனை அழகாக காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோகுல். ஆனாலும் ஊட்டியை ரிசார்ட், ரூம், போலீஸ் விசாரணை என முடக்கியது ஏமாற்றம். தாஜ்நுார் இசையில் புதிதாக எதுவும் இல்லை.

ஐடியில் வேலை செய்பவர்கள், பணத்தை தவறாக செய்கிறார்கள், உல்லாசம் அனுபவிக்கிறார்கள் என்ற டோனில் படம் செல்கிறது. கால் கேர்ள் விஷயத்தையும் ஏதோ கால்டாக்சி ரேஞ்சுக்கு ஈஸியாக காண்பித்து இருக்கிறார் இயக்குனர். சிருஷ்டிக்கு என்ன ஆனது. கொலையாளி யார் என்ற விஷயம் மட்டுமே கதையில் புதுசு. அதுவும் அழுத்தம் இல்லாமல் சப்பென முடிந்துவிடுகிறது. காதல் படமும் இல்லை. காம படமும் இல்லை, திரில்லரும் முழுமையாக இல்லை. ஊட்டி டிரிப்பை உறக்கத்தில் கழித்தது மாதிரி இருக்கிறது தி பெட் அனுபவம்.

தி பெட் - ஊட்டி டிரிப்பை உறக்கத்தில் கழித்த அனுபவம்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !