உள்ளூர் செய்திகள்

மார்க்

தயாரிப்பு: சத்யஜோதி பிலிம்ஸ்
இயக்கம்: விஜய் கார்த்திகேயா
நடிப்பு: கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், ரோஷிணி பிரகாஷ், யோகிபாபு
ஒளிப்பதிவு: சேகர் சந்திரா
இசை: அஜ்னீஷ் லோக்னாத்
வெளியான தேதி: ஜனவரி 1, 2026
நேரம்: 2 மணி 24 நிமிடங்கள்
ரேட்டிங்: 2 / 5

முதல்வராக இருக்கும் தனது அம்மாவை ஆஸ்பிட்டலில் வைத்து கொன்று விட்டு, தான் முதல்வர் ஆக துடிக்கிறான் ஒரு வில்லன். பல குழந்தைகளை கடத்தி மறைத்து வைத்துவிட்டு பல பெற்றோர்களை தவிக்க விடுகிறான் இன்னொரு வில்லன். 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதை மருத்து கடத்தலில் ஈடுபடுகிறான் வேறொரு வில்லன். தனது தம்பியின் காதலை எதிர்த்து, அதற்காக பலரை போட்டு தள்ளுகிறான் ஒரு வில்லன்.. இவர்களை சஸ்பெண்டில் இருக்கும் போலீஸ் எஸ்.பி.,யான ஹீரோ கிச்சா சுதீப் எப்படி பந்தாடுகிறார். பிரச்னைகளை எப்படி தீர்க்கிறார் என்பதை ஆக்ஷன் கலந்து சொல்லும் கதை மார்க். ஹீரோ பெயர் மார்க் என்பதால் இந்த தலைப்பு. கன்னடத்தில் உருவான இந்த படம் தமிழிலும் வந்துள்ளது.

லாஜிக் பார்க்காமல் ரசிக்கணும் என்று முதல் சில சீன்களிலேயே சொல்கிறார் இயக்குனர். போதையில் அதுவும் போலீஸ் ஸ்டேஷனில் கெட்ட ஆட்டம் போட்டபடி, ரவுடிகளை அடித்து துவைத்தபடி அறிமுகம் ஆகிறார் கிச்சா சுதீப். இவரு சஸ்பெண்டில் இருந்தாலும் டூட்டியில இருப்பாரு. ஏகப்பட்ட டிரான்ஸ்பர், ஏகப்பட்ட சஸ்பென்சன் வாங்கியவரு என அவரை பற்றி பெருமையாக சொல்கிறார் ஒரு போலீஸ்காரர். ஓ.. ஹீரோ இப்படிப்பட்டவரு என நமக்கு புரிகிறது. தனக்கு விசுவாசமான ஒரு போலீஸ் டீம் உதவியுடன் குழந்தை கடத்தல், ஒரு ரகசியம் அடங்கிய செல்போனை தேடி அலைகிறார் சுதீப். அப்போது பல வில்லன்கள், பல ஆக்சன், பல துப்பாக்கி சூடு, ரத்தம், கொலை என படம் செல்கிறது.

போலீஸ் என்றாலும், வேலையில் இல்லை என்பதால் தாடி வைத்தபடி, முரட்டுதனமான தோற்றத்தில் அடிக்கடி குடித்தபடி ஆக்ஷனில் கலக்கியிருக்கிறார் கிச்சாசுதீப். படத்தில் 5 பைட்மாஸ்டர்கள் பணியாற்றி இருப்பதால் ஒவ்வொருவரும் தங்கள் திறமையை போட்டி போட்டு காண்பித்து இருக்கிறார்கள். அதிலும் அந்த மேம்பாலம் பைட், கிளைமாக்ஸ் பைட், ஓபனிங் பைட் அருமை. ரூல்ஸ் பாலோ பண்ணாத அதிகாரி என்ற சுதீப்பின் கேரக்டரும் வித்தியாசமாக இருக்கிறது. டான்சிலும் 2 பாடல்களில் கலக்கியிருக்கிறார். அவரின் மேனரிசம், டயலாக் டெலிவரி வித்தியாசமாக இருக்கிறது. அவருக்கு மனைவி, காதல், காதலி இல்லாதது ஆறுதல். ஆனால் படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள் இருக்கிறார்கள்.

சைக்கோ மாதிரி கத்திக்கொண்டே, பலரை அடித்து துன்புறுத்தி, இஷ்டத்துக்கு கொல்கிறார் நவீன்சந்திரா. தனது விருப்பத்தை மீறி தம்பி விக்ராந்த் காதலியுடன் ஓடியதால் கோபப்பட்டு பொங்குகிறார். அவருக்கும் சுதீப்புக்கும் எப்படி மோதல் வருகிறது என்பது நல்ல திரைக்கதை, ஜோக்கர் சோமசுந்தரம் காமெடி கலந்த வில்லனாக வருகிறார். ஷைன் டாம் சாக்கோ கொடூர அரசியல்வாதியாக வருகிறார். அவர் சம்பந்தப்பட்ட சில சீன்கள் தமிழக அரசியலை நினைவுப்படுத்துகிறது. அப்புறம், டஜன் கணக்கில் அடியாட்கள் வந்து ஹீரோவிடம் அடிவாங்கி செல்கிறார்கள். இடையே குழந்தை, குடும்பம் சம்பந்தப்பட்ட சென்டிமென்ட் சீன்கள்.

ஆக்ஷன் காட்சிகளை நேர்த்தியாக, ரசித்து படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சேகர் சந்திரா. அவரின் ஆங்கிளும், சண்டை நடக்கும் லொக்கேஷன்களும் அவ்வளவு அழகு. காந்தாரா புகழ் அஜ்னீஷ் இசை, படத்தை இன்னும் ஸ்பீடு ஆக்கி, ஆக்ஷன் காட்சிகளை அதிரடியாக்கி இருக்கிறது. ஆனால், குழப்பமான திரைக்கதை, சரியாக செட்டாகாத தமிழ் டப்பிங் பொறுமையை சோதிக்கிறது. வேலை இல்லாமல் இருக்கிற ஒரு போலீஸ் அதிகாரியால் இதை செய்ய முடியுமா என்ற கேள்வி அவ்வளவு பெரிய லாஜிக் மீறல். குழந்தை சம்பந்தப்பட்ட சீன்கள் பல படங்களில் பார்த்தது. சில ஆக் ஷன்கள் சீன்களும் அப்படி. பல ஹிட் படங்களின் சீன்களை தொகுத்து மார்க் எடுத்தது மாதிரி தெரிகிறது. சுதீப் டீமில் போலீசாக இருக்கிற ரோஷினிபிரகாஷ், இன்னொரு போலீசாக வருகிற தீப்ஷிகா நடிப்பு, பைட் ரசிக்க வைக்கிறது. யோகிபாபு ஒரு கடத்தல்காரராக வருகிறார். அவர் நடிப்பு, கேரக்டர் படத்துடன் ஒட்டவில்லை. அவர் நடிப்பிலும் அவ்வளவு செயற்கை தனம்.

சில மணி நேரத்தில் 18 குழந்தைகளை கண்டுபிடிக்க போராடும் போலீஸ் டீம் என்ற கதை ஓகே. ஆனால் அடிக்கடி சண்டை, ஓவர் சவுண்டு வில்லன்கள், மோதல், துரத்தல் இதெல்லாம் யப்பா, போதும் என்று சொல்ல தோன்கிறது. கர்நாடகாவில் நடப்பதை தமிழகத்தில் நடப்பதாக டப்பிங்கில் மாற்றியிருப்பதும் நெருடலாக இருக்கிறது. பல விஷயங்கள் அந்நியமாக இருக்கிறது. அரசியல், காதல், போதை மருந்து, குழந்தை கடத்தல், துரோகம் என பல விஷயங்களை சொல்லி குழப்பியிருக்கிறார் இயக்குனர். கிளைமாக்ஸ் ஆறுதல். கன்னட ரசிகர்களை மனதில் கொண்டு, சுதீப் ஹீரோயிசத்தை பில்டப் அப்பாக சொல்லும் படம். இங்கே வேலைக்கு ஆகாது

மார்க் - மாஸ் இருக்கு.. பாஸ் மார்க் வாங்குமா?



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !