தி ராஜா சாப்
தயாரிப்பு : பீப்பிள் மீடியா பேக்டரி
இயக்கம் : மாருதி
நடிப்பு : பிரபாஸ், சஞ்சய் தத், நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ஜரினா வஹாப்
ஒளிப்பதிவு : கார்த்திக்பழனி
இசை : தமன்
வெளியான தேதி : ஜனவரி 9, 2026
நேரம் : 3 மணிநேரம் 03 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5
பாட்டி ஜரினா வஹாப் மறதி நோயால் அவதிப்பட, அவர் ஆறுதலுக்காக, பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாத்தா சஞ்சய் தத்தை தேடுகிறார் ஹீரோ பிரபாஸ். அந்த பயணத்தில் ஒரு பாழடைந்த பங்களாவில் ஹீரோயின் மாளவிகா மோகனன், நிதிஅகர்வால் மற்றும் சிலருடன் சிக்கிக் கொள்கிறார். அங்கே இருக்கும் சஞ்சயத் தத் ஆவி இவர்களை பயமுறுத்துகிறது. உண்மையில் சஞ்சய் தத் யார்? அவர் ஆவியாக டார்ச்சர் செய்வது ஏன்? அந்த பங்களாவில் இருந்து பிரபாஸ் டீம் வெளியேற முடிந்ததா என்பதை ஹாரர், பேண்டசி, காதல், காமெடி கலந்து சொல்லும் படம் தி ராஜா சாப். தெலுங்கு படமாக இருந்தாலும் தமிழ், ஹிந்தி, கன்னடம் உட்பட பல மொழிகளில் வெளியாகி உள்ளது.
சற்றே காமெடி கலந்த கேரக்டரில், பாட்டி அரவணைப்பில் பாசமாக வளர்ந்தவராக வருகிறார் பிரபாஸ். அவரின் அறிமுக காட்சி, கலர்புல், ஓபனிங் பாடல் இதெல்லாம் மாஸ். மறதி நோயால் அவதிப்படும் பாட்டியிடம் சிக்கி தவிக்கும் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. தாத்தாவை தேடி நகரத்துக்கு வரும்போது நிதி அகர்வால் காதலில் விழுகிறார். அந்த காட்சிகளில் அவ்வளவு ஈர்ப்பு இல்லை. ஆனால், பிரபாஸ், நிதி அகர்வால் பாடல் காட்சிகள், பிரபாஸ், 3 ஹீரோயின்களுடன் ஆடும் அந்த பாடல் அவ்வளவு அழகு.
ஒரு பாழடைந்த பெரிய பங்களாவில் மாட்டிக்கொண்டு பேய் பிடியில் மாட்டிக் கொண்டு தவிக்கும் காட்சிகள்தான் படத்தின் உயிர். எந்த அறைக்கு சென்றாலும் பேய் பயமுறுத்துகிறது. அவருடன் விடிவி கணேஷ், ஹீரோயின் மாளவிகா மோகனன், நிதி அகர்வாலும் அந்த பங்களாவில் மாட்டிக்கொண்டு பேய் பார்த்து அலறுகிறார்கள்.
சுருக்கமாக சொல்லப்போனால் சுந்தர். சியின் அரண்மனையை பல காட்சிகள், பல கேரக்டர்கள் நினைவுபடுத்துகின்றன. ஆனால், அரண்மனை அளவுக்கு பேய், பிளாஷ்பேக், காமெடி இல்லை என்பது உண்மை. சமுத்திரகனி சில சீன்களில் வந்து போகிறார். விடிவி கணேஷ் காமெடி என்ற பெயரில் சோதிக்கிறார். ஹீரோயின்களில் நிதி அகர்வால் ரொமான்ஸ் சுமார் ரகம். மாளவிகா மோகனன் பாடல் காட்சியில் மட்டும் ஓகே. இன்னொரு ஹீரோயின் ரித்திக்கு அதிக வேலையில்லை.
பிரபாஸ், அவர் பாட்டி ஜரினா, தாத்தா சஞ்சய் தத் ஆகியோரை சுற்றிதான் கதை அதிகம் நடக்கிறது. பாடல், காமெடி, ஆக் ஷன் காட்சிகளில் திறமையை காட்டிய பிரபாசுக்கு சென்டிமென்ட் காட்சி செட்டாகவில்லை. அவருக்கும், பாட்டிக்குமான பாசத்தை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். பாட்டியாக வரும் ஜரினா வஹாப் ஞாபக மறதி நோய் பாதிக்கப்பட்டவராக, பேரன் மீது, கணவர் மீது பாசத்தை பொழிபவராக வருகிறார். அவரின் கேரக்டர், நடிப்பு படத்துக்கு பிளஸ். கிளைமாக்சில் அவரின் கேரக்டர் வேறு மாதிரி மாறுவது சிலிர்ப்பு.
சஞ்சய்தத் சில காட்சிகளில் கொடூரமானவராக, மந்திர, தந்திரங்கள் தெரிந்தவராக வருகிறார். மீதி காட்சிகளில் பேய் உருவத்தில் கிராபிக்சில் தான் சுற்றிக் கொண்டே இருக்கிறார். அவரையும் இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை. பாட்டி சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் சீன் நன்றாக இருக்கிறது. அதை டக்கென முடித்துவிட்டு, அரண்மனை பட கிளைமாக்ஸ் ஸ்டைலில் ஒரு அம்மன் சீன் வைத்து, பேயை கட்டுப்படுத்துகிறார்கள்.
பிரபாசுக்கு காமெடி பெரிதாக வொர்க் அவுட் ஆகவில்லை. கிளைமாக்ஸ் பைட் பரவாயில்லை ரகம். ஒரு மாஸ் ஹீரோவை இப்படி சுமாராக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். ஹீரோவுக்காக 2 ஹீரோயின் சண்டைபோடுவது, முறைப்பது பல படங்களில் பார்த்து சலித்தது. சீரியஸ் ஆக இருக்க வேண்டிய பல காட்கிள் நாடகத்தனமாக இருப்பதும் படத்தின் மைனஸ்.
மிகப்பெரிய அந்த பங்களாவில்தான் முக்கால்வாசி படம் நடக்கிறது. அந்த பங்களாவை இன்ச் பை இன்ச் ரசித்து அவ்வளவு தத்ரூபமாக, அழகாக செட் போட்டு இருக்கிறார் ஆர்ட் டைரக்டர் ராஜீவன். ஒவ்வொரு இடத்திலும் அவர் உழைப்பு தெரிகிறது. பேய் படங்களுக்கு ஏற்ப ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார் கார்த்திக் பழனி. பேய் சம்பந்தப்பட்ட சீன்களில் கிராபிக்ஸ் டீம் உழைப்பு தெரிகிறது. ஆனாலும், இன்னமும் சிறப்பாக செய்து இருக்கலாம். அதேசமயம், தமன் பாடல்கள், பின்னணி இசை பிரபாஸ் ரசிகர்களுக்கு பிடிக்கும். 3 பாடல்களில் தமன் டச் தெரிகிறது.
இவ்வளவு இருந்தும் படத்தின் நீளமும், விறுவிறுப்பு இல்லாத திரைக்கதை குழப்பமான கதை சொல்லும் பாணி, சஞ்சய் தத் கேரக்டரின் பின்னணி ஆகியவை படத்துக்கு பெரிய மைனஸ். ஆகவே, பல சீன்களை ரசிக்க முடியவில்லை. பேய் படத்தில் ஹிப்னாடிசம், மனித ஆற்றல், மனக்கட்டுப்பாடு என இயக்குனரும் நிறையவே குழப்பி இருக்கிறார். பேய் கதைகளில் கிளைமாஸ் மிரட்டலாக இருக்கும். அதுவும் இதில் மிஸ்சிங்.
பிரபாஸ் மாதிரியான மாஸ் ஹீரோவை வைத்து காதல், காமெடி, ஹாரர் என எதையும் உருப்படியாக சொல்லாமல், படத்தின் நீளத்தை அதிகரித்து எப்படா வீட்டுக்கு கிளம்பலாம் என்று பார்வையாளர்கள் யோசிக்கும் வகையில் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் மாருதி. பேயும் பயமுறுத்தரவில்லை. கதையும் ஈர்க்கவில்லை. பிரபாஸ் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம்.
தி ராஜா சாப் - உப்பு, சப்பு இல்லாத கதை சாப்