சென்னிமலை முருகன் கோவிலுக்கு தீர்த்தம் கொண்டு செல்ல புது காளைக்கு பயிற்சி
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலுக்கு, படி வழியாக புனித நீர் கொண்டு செல்வதற்கு, புது காளைக்கு பயிற்சி தரப்படுகிறது.
சென்னிமலை முருகன் மலை கோவிலுக்கு, அடிவாரத்தில் உள்ள தீர்த்த கிணற்றில் இருந்து, தினமும் காலை, 8:00 மணி பூஜைக்கு, பொதி காளை மூலம், 1,320 படிவழியாக புனித நீர் கொண்டு செல்லப்படுகிறது. காலை, 7:00 மணிக்கு கிணற்றில், குடங்களில் தீர்த்தம் எடுத்து, பொதி காளை மீதுள்ள மூங்கில் கூடையில் வைக்கப்படும். கோவில் பணியாளர்கள் காளை மாட்டை ஓட்டி செல்வர். இதற்காக கோவில் கோசாலையில், இரண்டு பொதி காளை பராமரிக்கப்படுகிறது. தற்போது ஒரு காளைக்கு வயதாகி விட்டதால் சிரமப்படுகிறது.
இந்நிலையில் கோவிலுக்கு பக்தர் ஒருவர் தானம் கொடுத்த, காளை மாட்டுக்கு, தீர்த்தக்குடம் சுமந்து செல்ல பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த ஐந்து நாட்களாக, வழக்கமாக தீர்த்தம் கொண்டு செல்லும் காளை மாட்டுடன், புது காளையையும் ஓட்டி சென்றனர். படி வழியாக செல்வதற்கு, படிப்படியாக பயிற்சி தரப்படுகிறது. படியில் ஏறுவதற்கு மிரளாமல், முரண்டு பிடிக்காமல், கால்களில் சலங்கை கட்டியபடி, சப்தஸ்வரங்களாக மணிகள் ஒலிக்க, காளை செல்லும் அழகை, காலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பார்த்து வியந்தனர். சில மாதங்களில், நன்கு பயிற்சி பெற்று விடும் என்று, பணியாளர்கள் தெரிவித்தனர்.