கிருஷ்ணகிரியில் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை துவக்கம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், சேலம் சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், 32ம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா நேற்று 22ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி, நேற்று 22ம் தேதி காலை, 5:30 மணிக்கு, கேரள மாநிலம் புத்தில்லம் பிரம்மஸ்ரீ நாராயணன் நம் பூதிரி குழுவினரின் தலைமையில், மஹா கணபதி ஹோமம் நடந்தது. 6:30 மணி முதல், 8:30 மணி வரை பஞ்ச அபிஷேகம், கொடி மரப்பூஜைகள் நடந்தன.
காலை, 10:00 மணி முதல், 11:30 மணி வரை சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை, 6:00 மணி முதல், 7:00 மணி வரை பிரசாத சுத்தி, தீபாராதனை, 7:00 மணி முதல், 8:30 மணி வரை கிருஷ்ணகிரி அக்ரஹாரம், சிவாஜி நகரை சேர்ந்த பாண்டுரங்க பஜன் சாம்ராஜ் குழுவினரின் பக்திப்பாடல் நிகழ்ச்சிகளும் நடந்தன. இன்று காலை, 5:30 மணி முதல், 10:30 மணி வரை மஹா கணபதி ஹோமம், பிம்பசுத்தி, கலசபூஜை, உச்சிகால பூஜை, நடை சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை, 7:00 மணி முதல், 8:30 மணி வரை சென்னை ரகுமாயி ராமன் குழுவினரின் பக்திப்பாடல் இன்னிசை நிகழ்ச்சி நடக்க உள்ளது.