உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் துவக்கம்

தஞ்சாவூர் கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் துவக்கம்

தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேக விழா, முதலாம் கால யாகசாலை பூஜையுடன், நேற்று மாலை துவங்கியது. உலக புகழ்பெற்ற, தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேக விழா, 5ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, கோவிலில் திருப்பணிகள்  செய்யப்பட்டது. டிச., 2ம் தேதி, பாலாலயம் செய்யப்பட்டு, கோவிலில் உள்ள, 252 சிவலிங்கத் திருமேனிகள் உட்பட, 338 சுவாமி விக்ரகங்களுக்கு, மா காப்பு நடத்தி, அஷ்டபந்தன மருந்து சாத்தும் பணி துவங்கியது.

 கும்ப அலங்காரம்: இதன் நிறைவாக, பெருவுடையாருக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி, நேற்று நிறைவுபெற்றது. இதற்காக, குன்றக்குடி அருகே உள்ள நேமம் கிராமத்திலிருந்து அரக்கு, குங்குலியம் உட்பட, எட்டு வகையான, 2.5 டன் மருந்து பொருட்கள்  பயன்படுத்தப்பட்டுள்ளன. கங்கை, யமுனை மற்றும் காவிரி நதிகளிலிருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீர் கடங்களை, உற்சவ மண்டபத்திலிருந்து சிவாச்சாரியார்கள், மங்கள வாத்தியம் முழங்க, நேற்று காலை யாகசாலை மண்டபத்துக்கு எடுத்து வந்தனர். அங்கு, கும்ப  அலங்காரம், தேவதாகலா கர்ஷணம் ஆகிய பூஜைகள் நடைபெற்றது. மாலை, யாகசாலை மண்டபத்தில் சுவாமி, அம்பாள், உற்சவ மூர்த்திகள் - 41, பலிபீடம் - எட்டு, நந்தி - 10, கோவில் கலசம் - 22 என, 405 சுவாமிகளுக்கும் உரிய, 705 கடங்களை, வேதிகையில் வைத்து வழிபாடுகளை துவங்கினர். இதில் இஷ்டதானம், தசதானம், பஞ்சதானம், யாத்ராதானம், யாகசாலை பிரவேசமும், தொடர்ந்து, முதலாம் கால யாகசாலை பூஜையுடன், விழா தொடங்கியது. பின்னர்  பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடைபெற்றது.

இதற்காக, சிவாச்சாரியார்கள், 300 பேர், 110 குண்டங்களில், யாகசாலை பூஜையில் ஈடுபட்டனர். இன்று முதல், 5ம் தேதி வரை, எட்டு கால பூஜை நிறைவுற்று, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. புனிதநீர் எடுத்துச் செல்லும் நிகழ்வில், தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ  மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை இளைய ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்றனர். தலைமை செயலர் ஆய்வு தமிழக தலைமை செயலர் சண்முகம், கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகளை, நேற்று ஆய்வு செய்தார். தமிழக பொதுத்துறை முதன்மை செயலர் செந்தில்குமார், ஹிந்து அறநிலையத்துறை கமிஷனர் பனீந்திர ரெட்டி, கலெக்டர் கோவிந்த ராவ், தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி., லோகநாதன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !