கிராம கோவில்களுக்கு மின் கட்டணம் ரத்து?
ADDED :2004 days ago
சென்னை:கிராமப்புற கோவில்களுக்கு, மூன்று மாதத்திற்கான மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், வருமானம் இல்லாத கோவில்கள் ஏராளமாக உள்ளன. இதில், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில், ஒரு கால பூஜை நிதி உதவி திட்டம் செயல்பாட்டில் உள்ளது.ஊரடங்கு உத்தரவால், தமிழக கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், மின் கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்கும், நிதி வசதி இல்லாததால் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், மின் கட்டணம் கூட செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பட்டியலில் சேராத, கிராம கோவில்களுக்கு, மூன்று மாதத்திற்கான மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என, பூசாரிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.