நோன்பு கஞ்சிக்கு 85,170 கிலோ பச்சரிசி; 19 ஆயிரம் வீடு தேடி வழங்க ஏற்பாடு
சேலம்: சேலம் மாவட்டத்தில், ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு, 85 ஆயிரத்து, 170 கிலோ பச்சரிசி, 19 ஆயிரத்து, 52 இஸ்லாமியர் வீடு தேடி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள், ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க நடப்பாண்டு, 5,450 டன் அரிசியை, 2,895 பள்ளிவாசல்களுக்கு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கால், கஞ்சி தயாரித்து வழங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியான குடும்பங்களுக்கு, பச்சரிசியை வீடு தேடி சென்று வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், 43 பள்ளிவாசல்களுக்கு, 85 ஆயிரத்து, 170 கிலோ பச்சரிசி வழங்கப்பட உள்ளது. இவை, பள்ளிவாசல் நிர்வாகிகள் மேற்பார்வையில், தன்னார்வ தொண்டர்கள், தகுதியான, 19 ஆயிரத்து, 52 குடும்பத்தினருக்கு, வீடு தேடி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, நாமக்கல், 22, தர்மபுரி, 31, கிருஷ்ணகிரி, 111, வேலூர், 280, திருவண்ணாமலை, 122, ஈரோடு, 22, கரூர் மாவட்டத்தில் ஆறு பள்ளிவாசல்களுக்கு, பச்சரிசி வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.