மக்கள் துன்பத்தில் இருக்கும் போது மும்மூர்த்திகள் எங்கு சென்றனர்?
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் கொரொனா நோய் தொற்று குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, குறும்படம் வெளியிடப்பட்டது.
எமலோகத்தில், எமதர்மன், சித்திரகுப்தன் இடையே நடக்கும் உரையாடலை மையமாக வைத்து இந்த ஐந்து நிமிட குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், சமூக இடைவெளியை பின்பற்றுதல், விழித்திருத்தல், விலகி இருத்தல், வீட்டில் இருத்தல் ஆகியவற்றை மக்கள் பின்பற்றினால், அவர்கள் மீது பாசக்கயிறு வீச மாட்டேன் என எமதர்மன் கூறுவது போலவும், மக்கள் இவ்வளவு துன்பத்தில் இருக்கும்போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் எங்கு சென்றனர் என்ற கேள்விக்கு பதிலாக, சித்திரகுப்தன் கூறுகையில், அவர்கள் அனைவரும் பூலோகத்தில், மருத்துவர்களாகவும், காவல்துறையினராகவும், தூய்மை பணியாளர்களாகவும், வருவாய்த்துறை அதிகாரிகளாகவும் பணியாற்றுகின்றனர் என்ற பதில் டச்சிங்காக இருந்தது. குறும்படத்திற்கான கதையை பெரியநாயக்கன்பாளையம் வருவாய் ஆய்வாளர் நூர் முகமது எழுதியுள்ளார். நாடக நடிகர்கள் தளபதி குமரேசன், தியாகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இதை சாய் ரவி, மகேந்திரராஜா ஆகியோர் தயாரித்துள்ளனர். குறும்படத்தை கோவை வடக்கு எம்.எல்.ஏ., அருண்குமார் வெளியிட, பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் பிருதிவிராஜ் பெற்றுக்கொண்டார்.