வெள்ளகோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா
வெள்ளகோவில்: வெள்ளகோவில் நகர் பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வெள்ளகோவில் முத்தூர் ரோடு, மகாகணபதி கோயில் வெள்ளிக்கவச அலங்காரத்துடன் வெற்றிலை தேங்காய் வைத்து விநாயகர் அருள் பாலித்தார்.
செம்மாண்டம் பாளையம் மேட்டு மஹாகணபதி, காமராஜபுரம், சக்தி விநாயகர், வி.பி. எம் .எஸ்.,நகர் விநாயகர்கோவில் உட்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடந்தது. மேலும் இந்து முன்னணி சார்பில் நகர பொறுப்பாளர்கள் தங்களது வீடுகளின் முன்பு நடேசன் நகர் சிவனாதபுரம், தண்ணீர் பந்தல், மு.பழனிச்சாமி நகர், வீரக்குமார் நகர், எம்.ஜி.ஆர்., நகர், முத்துக்குமார் நகர், ஆகிய 7 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு காலை முதல் வழிபாடு நடந்தது. கொரோனா காரணமாக ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கவில்லை, ஆரவாரம் இல்லாமல் அமைதியாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தரிசனத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது. மதியம் 4.30 மணி அளவில் அந்தந்த பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் வேனில் பேரல் தண்ணீர் வைக்கப்பட்டு அதில் கரைக்கப்பட்டது. சிலை வைக்கப்பட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.