உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷபத்துக்கு பெயர்ச்சியான ராகு பகவான்: திருநாகேஸ்வரத்தில் திரண்ட பக்தர்கள்

ரிஷபத்துக்கு பெயர்ச்சியான ராகு பகவான்: திருநாகேஸ்வரத்தில் திரண்ட பக்தர்கள்

தஞ்சாவூர் : திருநாகேஸ்வரத்தில் ராகு தலம் எனப் போற்றப்படும் நாகநாத சுவாமி கோயிலில் நேற்று நடந்த ராகு பெயர்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் நவக்கிரகங்களுள் முதன்மையானவராக திகழும் ராகு பகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். ராகு பகவான் ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்வது ராகு பெயர்ச்சி விழாவாக நடக்கிறது. இதன்படி நேற்று மதியம் 2:௦௦ மணிக்கு ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதை முன்னிட்டு நேற்று காலை உற்ஸவர் ராகு பகவானுக்கு சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து அபிஷேகம் மகா தீபாராதனை நடந்தது.கொரோனா காலமாக இருப்பதால் கோயிலுக்குள் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர். ராகு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்தனர்.

கேது பெயர்ச்சி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தரநாயகி அம்பாள் சமேத நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் நவகிரகங்களில் சாயா கிரகம் என்றழைக்கப்படும் கேது பகவான் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பின்னோக்கி பெயர்ச்சி அடையும் கேது பகவான் நேற்று மதியம் 2:16 மணிக்கு தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசித்தார். கேது பெயர்ச்சியை முன்னிட்டு கோவிலில் சிறப்பு ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை வலம் வந்தன.பால் தயிர் தேன் பஞ்சாமிர்தம் திரவிய பொடிகள் மற்றும் கடங்களில் இருந்த புனித நீரை கொண்டு கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. சரியாக 2:16 மணிக்கு பெயர்ச்சி அடைந்த கேது பகவானுக்கு மகா தீபாராதனை நடந்தது. முன்னதாக பலவர்ண வஸ்திரம் மற்றும் பூமாலைகள் நாகாபரணம் ஆகியவை சாத்தப்பட்டு கேது பகவானுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.திரளான பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !